
குழந்தைகளின் வளர்ச்சி என்பது வெறும் கல்வி மற்றும் வெளியுலக அறிவோடு நின்றுவிடுவதில்லை. அவர்களின் மனம் மற்றும் உணர்வுகள் ஆழமாக வேரூன்றி, உள் வலிமையுடன் வளர ஆன்மீக மதிப்பீடுகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது மிக அவசியம். ஆன்மீகம் என்பது ஏதோ கடினமான சடங்குகள் மட்டுமல்ல, அது அன்பின் அடிப்படையிலான வாழ்வியல் நெறிகளே. இந்த உன்னதமான அன்பு மற்றும் நற்பண்புகளை நம் குழந்தைகளுக்கு எப்படி எளிமையாகக் கற்பிக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு நன்றி உணர்வின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும். தங்களுக்குக் கிடைத்த சிறிய அல்லது பெரிய விஷயங்களுக்கு நன்றி சொல்ல அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். தினமும் ஏதேனும் ஒரு வகையில் நன்றியை வெளிப்படுத்தும் பழக்கம், வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களை அவர்கள் அடையாளம் காண உதவும். இதுவே ஆன்மீகத்தின் முதல் படியாகும்.
அடுத்து, இரக்கத்தையும் அன்பையும் அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். மற்றவர்களிடம் கருணையுடனும், அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரையுங்கள். பிறருக்கு உதவும் சிறிய நல்ல செயல்கள்கூட அவர்களின் உணர்வு மற்றும் மன வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிய வையுங்கள். இது பிறரின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள அவர்களைப் பக்குவப்படுத்தும்.
மன அமைதிக்கு தியானமும், கவனத்துடன் செயல்படும் திறனும் அவசியம். குழந்தைகள் நிகழ்காலச் செயல்களில் கவனம் செலுத்தப் பழக்கப்படுத்துவது முக்கியம். அமைதியாக அமர்ந்து மூச்சைக் கவனிப்பது போன்ற எளிய பயிற்சிகள் அவர்களின் மனதை அமைதிப்படுத்தி, அழுத்தத்தைக் குறைக்கும். இது அவர்களின் உள்ளுணர்வுடன் இணைய உதவும் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகும்.
இயற்கை உலகை நேசிக்கக் கற்றுக்கொடுப்பதும் ஆன்மீகத்தின் ஒரு பகுதியே. பூமி ஒரு அங்கம் என்பதை அவர்கள் உணர வேண்டும். வெளியில் நேரம் செலவிடுவது, செடி கொடிகள், விலங்குகள் மீது அன்பு காட்டுவது போன்ற செயல்கள் அவர்களைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் அழகை ரசிக்கச் செய்து, ஆன்மீக ரீதியாக வளரத் துணைபுரியும்.
மன்னிக்கும் குணத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களையும் கோபத்தையும் வைத்திருப்பது பாரம் என்பதையும், மற்றவர்களை மன்னிப்பது மனதின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உதவும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். பணிவைக் கற்றுக்கொள்வதும் முக்கியம். எல்லோரிடமும் கற்க ஏதோ ஒன்று உண்டு என்பதைப் புரிந்துகொண்டு, பணிவுடன் இருப்பது தொடர்ச்சியான ஆன்மீக கற்றலுக்கு வழிவகுக்கும்.
தங்கள் செயல்கள், முடிவுகள், மற்றும் உணர்வுகள் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் சுய பிரதிபலிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள். இது அவர்களைப் பற்றி அவர்களே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தங்கள் மதிப்பீடுகளை உணர்ந்துகொள்ளவும் உதவும். குடும்பத்தின் வழிபாட்டு முறைகள் அல்லது ஆன்மீகப் பழக்கவழக்கங்களை ஒன்றாகச் செய்வது குழந்தைகளுக்கு ஒரு ஆழமான ஆன்மீகப் பிணைப்பை உருவாக்கும்.
இந்த வழிகள் மூலம் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை முறையாக கற்பிக்க முடியும். இந்த நற்பண்புகள் நிறைந்த குழந்தைகள் எதிர்காலத்தில் மன வலிமையுடனும், அன்பானவர்களாகவும் உருவாவார்கள்.