
வீடு என்பது மனிதர்கள் தங்கும் ஒரு கட்டடம் மட்டுமல்ல, அது உணர்வுபூர்வமானதும் தேவர்கள் வந்து செல்லக்கூடிய இடமாகவும் இருக்கிறது. ஒரு வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சிகரமாகவும், நீண்ட ஆயுளுடனும், செல்வ செழிப்புடனும் இருக்க வேண்டும் என்றால், அதற்குத் தகுந்த மாதிரி வீட்டினை சாஸ்திரங்கள் கூறிய விதிகளின்படி அமைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஒருவர் எவ்வாறு தூங்க வேண்டும்? என்பதை கூட சில விதிகள் கூறுகின்றன.
பொதுவாக, எப்போதும் வடக்கு பார்த்து தலை வைத்து தூங்கக் கூடாது என்பதை அறிவோம். அதைப்போல், வீட்டு வாசலுக்கு நேராக, கதவை நோக்கி காலை நீட்டியும் தூங்கக் கூடாது. இது ஒரு தவறான செய்கையாகும், சாஸ்திரத்தின்படி வாசல் கதவிற்கு நேராக காலை நீட்டக் கூடாது. பொதுவாக வீட்டில் அறைகளை அமைக்கும்போது வாஸ்து சாஸ்திரத்தின்படிதான் அமைத்து இருப்பார்கள். சாஸ்திரத்தின்படி வீட்டில் நடந்துகொள்ளும் முறைகள் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள்.
நாம் வீட்டை எவ்வாறு மதிக்கிறோமோ அதே அளவிற்கு அந்த வீடு நமக்கு மகிழ்ச்சியைத் தரும். வீடு என்பது செங்கல், மணல் கலந்த சுவர் மட்டும் என்று நினைக்க வேண்டாம். வீட்டின் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு தேவதைகள் நம் செயல்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அந்த தேவதைகள் மற்றும் தேவர்கள் நமக்கு நல்ல ஆசிகளை வழங்குகிறார்கள், நல்ல அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறார்கள். அதனால் நாம் அவர்களைப் பணிந்து அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவேளை நாம் சாஸ்திரங்களை பின்பற்றாமல், வீட்டை ஏதோ ஒரு அஃறிணை போல் மதித்து நடந்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தும் கரைந்து விடும். அதுபோல் ஒருவரின் அதிர்ஷ்டங்கள் அவரை விட்டுப் போய்விட்டால், துரதிர்ஷ்டம் தேடி வந்துவிடும். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் கடும் துயரை அனுபவிக்க வேண்டி இருக்கும். வீட்டினுள் சரியான திசையில் படுத்துத் தூங்குவது நல்ல தூக்கத்தையும் நிம்மதியான மனநிலையையும் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
சாஸ்திரத்தின்படி, உங்கள் கால்களை சரியான திசையில் நீட்டி தூங்குவது நலம் தரும். அதை விட்டு, நல்ல காற்றோட்டமாக இருக்கிறதே என்று வாசலுக்கு நேராக காலை நீட்டி தூங்குவது, நல்ல செயலாக இருக்காது. அதேபோல், பூஜை அறைக்கு எதிராகவும் காலை நீட்டி படுக்கக் கூடாது.
வாசல் கதவின் பிரதிநிதித்துவம்: வீட்டு வாயில் கதவுகள்,கடவுளர்களை வேண்டி அருகால் படியோடு பூஜை செய்து, என் வீட்டில் நல்ல அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டி வைக்கப்பட்டுள்ளது. சக்தி மிகுந்த கதவுள்ள அருகால் படிகள் தீய சக்திகளை உள்ளே வர விடாமல் தடுத்து விடும். அதைப்போல, மாலை நேரத்தில் மகாலட்சுமி தேவியும் அந்த வாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய வருவாள். அந்த நேரத்தில் வாசலை நோக்கி காலை நீட்டி படுத்திருப்பது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாக இருக்கும்.
மகாலட்சுமி மட்டுமல்லாமல், மற்ற கடவுளர்களும் வீட்டு வாசல் வழியாகத்தான் உள்ளே நுழைவார்கள். அவர்கள், இந்த செயலை அவமதிப்பதாகக் கருதி திரும்பி சென்று விடக்கூடும். ஒரு மனிதரே நம் வீட்டுக்கு வருகிறார் என்றால், அப்போது வாசல் புறம் காலை நீட்டி படுத்திருந்தால், மரியாதைக் குறைவு என்று நினைத்துக் கொள்வார். அதேநேரம் துர்சக்திகள் வீட்டிற்கு வந்தால் முதலாவதாக வாசலுக்கு நேராகப் படுத்திருக்கும் நபர்களையே அனுகுவார்கள். அதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியும் இருக்கலாம்.
தீர்வு: எப்போதும் தூங்கும்போது உங்கள் தலை தெற்கு பகுதியில் இருக்க வேண்டும், கால் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இவ்வாறு படுக்கும்போது நேர்மறை ஆற்றல் அந்த நபருக்குக் கிடைக்கிறது. வாசல் வடக்கு பார்த்து இருந்தால் சில அடி தள்ளி படுத்துக் கொள்ளவும்.