
சுவர் கடிகாரம் இல்லாத வீடுகளே தற்போது இல்லை என்று கூறலாம். ஏனென்றால், காலத்தின் முக்கியம் கருதி அனைவரும் தங்கள் வீடுகளில் சுவர் கடிகாரங்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில், படுக்கை அறைக்கு அலங்காரத் தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய சில வகை சுவர் கடிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. மர படுக்கையறை சுவர் கடிகாரங்கள்: மரத்தால் ஆன கடிகாரங்கள் படுக்கை அறைக்கு இயற்கையான மற்றும் ஆர்கானிக் தோற்றத்தை கொடுக்கின்றன. சிக்கலான செதுக்கல்கள், வட்ட வடிவ முகங்கள் அல்லது கூர்மையான கோடுகள் கொண்ட நவீன வடிவமைப்புகள் போன்ற பல்வேறு வகைகளில் இவை கிடைக்கின்றன. பைன், ஓக், மூங்கில் போன்ற மர வகைகளிலும் இவை கிடைக்கின்றன. நவநாகரிக வடிவமைப்புகளுடன் உங்கள் படுக்கையறை சுவருக்கு கிளாசிக் லுக்கைத் தரும் இவை தனித்துவமான அழகை வழங்குகின்றன.
2. பின்-லைட் படுக்கையறை சுவர் கடிகாரங்கள்: இவை கடிகாரத்தின் பின்புறத்தில் இருந்து ஒளி உமிழும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இது இரவு நேரத்தில் நேரத்தை பார்க்க உதவுகிறது. இந்த கடிகாரங்கள் பல வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் பாணிகளில் கிடைக்கின்றன. இடத்தை ஒளிரச் செய்வதோடு பின்னொளி கடிகாரம் மூலம் அமைதியான சூழலை உருவாக்க முடியும். இவை உள்ளமைக்கப்பட்ட விளக்குகளைக் கொண்டுள்ளன. குழந்தைகளின் அறைகளுக்கு மென்மையான விளக்குகளுடன், பிடித்த கதாபாத்திரங்கள் போன்ற வேடிக்கையான வடிவங்களில் அவற்றை வடிவமைக்கலாம்.
3. புகைப்பட சட்ட கடிகாரங்கள்: பல்வேறு புகைப்பட சட்டங்களைப் பயன்படுத்தி ஒரு கடிகாரத்தின் வடிவத்தை சுவரில் உருவாக்கலாம். இந்தச் சட்டங்களில் குடும்ப படங்கள், பயணம் செய்த இடங்களின் படங்கள் அல்லது நமக்கு விருப்பமான படங்கள் இருக்கலாம். நமக்குப் பிடித்த புகைப்படங்களை கொண்டு அமைக்கும் கடிகாரத்துடன் படுக்கை அறைக்கு ஒரு தனிப்பட்ட அழகை கொண்டு வர முடியும். குடும்பப் புகைப்படங்கள், சில அழகிய காட்சிகள் அல்லது ஊக்கமளிக்கும் மேற்கோள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடிகாரங்கள் அறையின் அழகைக் கூட்டும்.
4. கலை கடிகாரங்கள்: நம்முடைய படுக்கையறை சுவரை கேலரியாக மாற்றும் வித்தியாசமான வடிவங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கலை கடிகாரங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும். உயர்தர எபோக்சி பிசின், உலோகங்கள் மற்றும் பிற கலப்பு பொருட்களால் செய்யப்படும் இவை துடிப்பான வண்ணங்கள் மற்றும் பளபளப்பான பூச்சு கொண்டவை.
5. அலமாரியுடன் கூடிய கடிகாரம்: சிறிய படுக்கை அறைக்கு ஏற்ற ஸ்டைலான லுக் கொடுக்கும் அலமாரிகள் கொண்ட கடிகாரம் சிறந்த தேர்வாக இருக்கும். புத்தகங்கள், செடிகள் அல்லது கண்ணாடிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த தொங்கும் கேபினெட் கடிகாரங்கள் வீட்டிற்கு அலங்காரத்தையும், நேர்த்தியையும், அத்தியாவசிய பொருட்களை ஒழுங்காக வைப்பதற்கான இடத்தையும் சேர்க்கின்றன.
6. விண்டேஜ் கடிகாரங்கள்: ஒவ்வொரு விண்டேஜ் கடிகாரமும் அது தயாரிக்கப்பட்ட காலத்தின் வரலாறு, கலாசாரம், தொழில்நுட்பங்கள் மற்றும் அழகியலை பிரதிபலிக்கின்றன. இரட்டைப் பக்க ரயில் கடிகாரங்கள் முதல் சிக்கலான ஊசல் வடிவமைப்புகள் வரை நம் அறைக்கு ஒரு பாரம்பரிய அழகை சேர்க்கும்.
7. டிஜிட்டல் சுவர் கடிகாரங்கள்: இவை நேரத்தை இலக்கங்கள் வடிவில் காண்பிக்கும். பாரம்பரிய கடிகாரங்களை விட நவீனமானவை மற்றும் வீட்டு அலங்காரத்துடன் இணைந்து செயல்படும் வகையில் பல அம்சங்களுடன் வருகின்றன. டிஜிட்டல் சுவர் கடிகாரங்கள் நேரத்தை மட்டும் காட்டுவதில்லை, வெப்பநிலை மற்றும் அன்றைய தேதி ஆகியவற்றையும் காட்டுகின்றன.
அறைக்கு ஏற்ற அளவில் கடிகாரத்தை அமைப்பது அவசியம். மிகப்பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும் கடிகாரம் நம் அறையின் அழகை கெடுத்து விடும். எனவே, இடத்திற்கு ஏற்ப பொருந்தக்கூடிய கடிகாரங்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.