
சிறுதுளி பெரு வெள்ளம் என்பதுபோல நம் வாழ்க்கையில் நாம் கொண்டுவரும் மிகச்சிறிய மாற்றங்கள், காலப்போக்கில் மிகப் பெரிய வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும். அந்த வகையில், உங்கள் எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சின்னச் சின்ன பழக்கவழக்கங்கள் சிலவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
தினமும் எழுந்தவுடன் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை செய்து பாருங்கள். முதலில் இரண்டு நிமிடங்களில் இருந்து தொடங்குங்கள். படிப்படியாக பயிற்சி நேரத்தை அதிகப்படுத்துங்கள். இது உங்கள் உடல் மற்றும் மனதை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும் அமைதி மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்க்கவும் உதவுகிறது.
காலை வேளையில் இயற்கை சூழ்ந்த பகுதியில் வெறுங்காலுடன் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
கவனத்துடனும் தெளிவுடனும் உங்கள் நாளைத் தொடங்குவதற்கு காலையில் டிஜிட்டல் திரைகள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உங்கள் சமூக உறவுகளை வளர்க்க தினமும் காலையில் அன்பானவருடனோ அல்லது நண்பருடனோ இனிமையான வாழ்த்துடன் உரையாடலைத் தொடங்குங்கள்.
உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க, சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு போன்ற இயற்கை எலக்ட்ரோலைட்கள் நிறைந்த தண்ணீரை அருந்துங்கள். முடிந்தவரையில், குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள். அன்றாட உணவில் புரதச்சத்து இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் அன்றைக்கு நீங்கள் அடைய வேண்டிய இலக்குகளை நினைவுப்படுத்தி எழுதி வையுங்கள். அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை செய்வது போலவும், இலக்குகளை அடைவதுபோலவும் உங்களுக்குள் காட்சிப்படுத்திப் பாருங்கள்.
படுக்கைக்குச் செல்லும் முன் உங்களின் தனிப்பட்ட அல்லது தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் புத்தகங்கள் படிப்பதில் நேரத்தைச் செலவிடுங்கள். அடுத்த நாளுக்கான இலக்குகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் அன்றைய தினத்தில் நீங்கள் சந்தித்த பிரச்னைகள், பாராட்டுக்கள் போன்றவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவற்றுள் நேர்மறையான அழகான தருணத்தை எழுதுதல் அல்லது வரைதல் போன்றவற்றின் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். இது மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வை வளர்க்க உதவுகிறது.
தினமும் நிலையான தூக்க வழக்கத்தை அல்லது நேரத்தைக் கடைபிடியுங்கள்.
இறுதியாக, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் கட்டாயத்தின் பேரில் கடைபிடிப்பதை விட, விருப்பத்துடன் சிறிது சிறிதாக தொடங்குவதிலேதான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.