"நோ" சொல்லத் தெரியுமா? தெரிந்தவர்களிடம் பணத்தை இழக்காமல் இருக்க இதோ சில 'ஸ்மார்ட்' பொய்கள்!

escape-from-money-borrowers
escape-from-money-borrowers
Updated on

ற்காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று ஏமாறாமல் வீட்டிற்குத் திரும்புவதற்குள் படாதபாடுபட வேண்டியிருக்கிறது. சமீபத்தில் எங்கள் பகுதியில் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்த ஒருவர் திடீரென்று என்னிடம் வந்து “சார் ஒரு இருநூறு ரூபா அர்ஜெண்ட்டா தேவைப்படுது. என்னோட ஏடிஎம் கார்டு ஒர்க் பண்ணலை. கொஞ்சம் குடுங்க சார்” என்று வேகவேகமாகக் கேட்டார்.

எப்போதும் இதுபோன்ற சமயங்களில் சட்டென காசை எடுத்துக் கொடுத்துவிடும் எனக்கு அன்று என்னமோ தெரியவில்லை “சார். காசு கொண்டு வரலை. இப்பெல்லாம் ஜீபேதான் பண்றேன்” என்று சொன்னதும் தெரிந்தவர் சிறிது யோசித்து நகர்ந்து சென்றுவிட்டார்.

நல்லவேளை அவர் “எனக்கு இருநூறு ரூபா ஜீபே பண்ணுங்க” என்று கேட்கவில்லை. உண்மையில் எனக்கு ஜீபே என்றால் என்னவென்றே தெரியாது. அதை நான் உபயோகிப்பதும் இல்லை. ஒரு பொய் இருநூறு ரூபாயைக் காப்பாற்றிக் கொடுத்தது.

நான் அடிக்கடிச் செல்லும் ஒரு கோயிலின் சன்னிதி அர்ச்சகர் ஒருநாள் என்னிடம் “சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்” என்றார். “என்னன்னு சொல்லுங்க முடிஞ்சா நிச்சயம் செய்யறேன்” என்றேன். “என் பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன். ஒரு சீட்டு கம்பெனியிலே சீட்டு போட்டிருக்கேன். செலவுக்கு சீட்டு எடுத்துட்டேன். அதுக்கு கவர்மெண்ட் சர்வெண்ட் யாராவது ஒருத்தர் ஜாமீன் கையெழுத்து போட்டாதான் பணம் தருவாங்களாம். ஒரே ஒரு கையெழுத்துதானே. போட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்” என்றார்.

இதையும் படியுங்கள்:
தாகம் தீர்க்கும் இலைகள்... தாகம் தணிக்கும் நிழல்! புளிய மரத்தின் மகத்துவம் தெரியுமா?
escape-from-money-borrowers

உடனே என் சமயோசித மூளை வேலை செய்தது. “ஸ்வாமி. ஏற்கெனவே ஒருத்தருக்கு அஞ்சு லட்ச ரூபாய்க்கு ஷ்யூரிட்டி போட்டிருக்கேனே. ஒருத்தர் ஒரு ஷ்யூரிட்டிதான் போடலாம். சாரி” என்றேன். அன்றிலிருந்து அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். நல்லவேளையாக நான் தப்பித்துக் கொண்டேன். நான் சொன்னது பொய்தான். ஆனால் உத்திரவாதக் கையெழுத்தைப் போட்டு பின்னால் பணத்தை வாங்கியவர் பணத்தைக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நாம்தான் அந்த பணத்தை வட்டியோடு கட்டியாக வேண்டும். இப்படி வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் ரிட்டயர் ஆனதும் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம் “சார். வந்த பணத்துலே ஒரு அஞ்சு லட்சம் குடுங்க. மூணு வட்டிக்கு விட்டு ரொட்டேட் பண்ணலாம். உங்களுக்கு ரெண்டு. எனக்கு ஒண்ணு. மாசாமாசம் கணிசமா பணம் கிடைக்கும்” என்று ஆசை காட்டினார்.

என் சமயோசித புத்தி வேலை செய்தது. “அடடா. இது முன்னமே எனக்குத் தெரியாம போச்சே. பணம் கைக்கு வந்த மறுநாளே போஸ்ட்ஆபிஸ்லே இன்வெஸ்ட் பண்ணிட்டேனே. அஞ்சு வருஷத்துக்கு கையை வைக்க முடியாதே” என்றேன். “நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க சார். அங்க இன்ட்ரெஸ்ட் ரொம்ப கம்மியாச்சே” என்று அவரும் என்னுடன் சேர்ந்து வருத்தப்பட்டார். அதிக இன்ட்ரெஸ்ட்டுக்கு ஆசைப்பட்டா போட்ட முதல் மொத்தத்தையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியாதா என்ன? என்னை ஒரு ஏமாளியைப் பார்ப்பது போல பார்த்துவிட்டுச் சென்றார் என் நண்பர். பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டுமே. அதனால் எனக்கென்ன நஷ்டம் ?

இதையும் படியுங்கள்:
சுட்ட எண்ணெயைக் கொட்டி விடாதீர்கள்! - பழைய எண்ணெயைப் புதியது போல மாற்றும் ரகசியம்!
escape-from-money-borrowers

நமக்குத் தெரிந்தவர்கள் எவரையும் பகைத்துக் கொள்ளவும் கூடாது. நாம் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இழக்கவும் கூடாது. அதற்கு ஒரே வழி சமயோசிதமாக யோசித்து செயல்படுவதுதான். இதுபோன்ற சமயங்களில் தாராளமாக பொய் சொல்லலாம். தவறில்லை. நண்பர் அல்லது தெரிந்தவர் கேட்கிறாரே கொடுப்போமே அல்லது உத்திரவாதக் கையெழுத்தைப் போடுவோமே என்று யோசிக்காமல் முடிவெடுத்தால் அப்புறம் பணத்தையும் நிம்மதியையும் இழக்க வேண்டியதுதான். நண்பர்களே. உஷாரா இருங்க. இல்லேன்னா வருத்தப்படுவீங்க

logo
Kalki Online
kalkionline.com