

முற்காலங்களில், அதாவது நெகிழி எனப்படும் பிளாஸ்டிக், பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பான காலங்களில், மக்கள் கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றால் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையிலும் ஆண்கள் தோளில் போட்டிருக்கும் துண்டின் ஒரு பகுதியிலும் பொருட்களை வைத்து முடிந்து, வீட்டிற்கு எடுத்து வருவது வழக்கம். இதை இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.
இன்று அவர்கள் நவீன மயமான, ஒரே கூரையின் கீழ் அனைத்துப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடிய பெரிய பெரிய மால்களுக்கு சென்று வாங்கி வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். விற்பனையாளர்களும், வாடிக்கையாளர் ஒரு நெயில் பாலிஷ் வாங்கினால் கூட அதை ஒரு கனமான, கண்கவர் காகிதப் பையில், பில்லுடன் போட்டு கொடுத்து அனுப்புகின்றனர்.
அதேபோல் வீடுகளில் நவராத்திரி போன்ற விசேஷங்களின்போது வீட்டிற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கவும், பிறந்தநாள் பார்ட்டிகளில் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கவும் இதேபோன்ற அலங்காரப் பைகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாரெல்லாம் நம் வீடுகளில் வந்து குவிந்துவிடும் பைகளை உடனுக்குடன் குப்பைக் கூடையில் வீசிவிடாமல் எவ்வாறு மறு பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
சிறிய அளவிலான பைகளில் சார்ஜர், கேபிள் போன்றவற்றை ஒன்றிலும், பேனா, பென்சில், ரப்பர், ஹைலைட்டிங் பென் போன்ற எழுது பொருள் வகையறாக்களை ஒன்றிலும், ஹேர்பின், ஹேர் கிளிப், ரிப்பன் போன்ற தலையலங்காரத்தில் பயன்படும் பொருட்களை ஒரு பையிலும், ஊசி, நூல் கண்டு, பட்டன் போன்ற தையலில் பயன்படும் பொருட்களை வேறொரு பையிலுமாகப் போட்டு அலமாரி அல்லது இழுப்பறைகளில் தனித் தனியாக வைத்துவிட்டால், அவ்வப்போது அவற்றை சுலபமாக கையாளலாம்.
அவ்வாறு பயன்படுத்தும் பைகளின் உயரம் தேவைக்கு அதிகமாக இருப்பின் அவற்றை மடித்து வைத்து அல்லது வெட்டி விட்டு உபயோகிக்கலாம்.
சிறிதும் பெரிதுமான பைகளை அங்கும் இங்குமாக கப்போர்டுக்குள் பரத்தி வைக்காமல், அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் பை ஒன்றில் வாழ்த்து அட்டைகள், மொய்க்கவர், சிறிய சைஸ் கிஃப்ட் பைகள், விசேஷங்களுக்கு செல்லும்போது கொடுப்பதற்கு வாங்கியுள்ள பரிசுப்பொருட்களை சுற்றிக் கட்டுவதற்கு தேவைப்படும் மினு மினுக்கும் கலர் பேப்பர், ரிப்பன், ரிப்பன் முடிச்சு (bow) செல்லோ டேப், ஸ்டேப்லர், பேனா போன்றவற்றைப் போட்டு ஓரிடமாக பத்திரப்படுத்தி வைத்துவிடலாம்.
அடுத்த முறை விசேஷம் ஒன்றிற்கு செல்லும்போது அந்தப் பையிலிருந்து எளிதில் தேவையான பொருட்களை எடுத்து பரிசுப் பொருளை பரிசளிக்க தயார் பண்ணிவிடலாம்.
சிறிய அளவிலான 'கிஃப்ட் பேக்'களில் குறிப்பான் (marker pen), காகிதக் கிளிப் (Gem clip), குண்டூசி (Pin), சிறு நோட் புக், பேனா, பென்சில் ஆகியவற்றைப் போட்டு அழகாக உங்கள் அலுவலறை மேஜை, குழந்தைகள் படிக்கும் மற்றும் வீட்டுப் பாடம் எழுதும் மேஜை, குளிர்சாதனப் பெட்டி என ஒவ்வொரு இடத்திலும் ஒரு பையை வைத்துவிட்டால், தேவை ஏற்படும்போது அப்பொருட்களை தேடிக்கொண்டிராமல் அங்கங்கே எடுத்து பயன்படுத்திக்கொள்ள வசதியாயிருக்கும். புதிதாக பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான கொள்கலன் ஒன்றை வாங்குவதற்கான செலவும் குறையும்.
வழக்கமாக கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்பவர்கள், அப்பொருட்களை உருவாக்கத் தேவையான கலர் பேப்பர், ஸ்டிக்கர், க்ளூ ஸ்டிக்ஸ் (glue sticks), ரிப்பன்ஸ், பட்டன்ஸ் மற்றும் அலங்கரிக்கத் தேவைப்படும் சாமான்கள் ஆகியவற்றை ஒரு கிஃப்ட் பேக்கில் போட்டு, அதன் வெளிப்பக்கம் அது எந்தப் பொருளின் உருவாக்கத்திற்கு என்பதை குறித்து ஒரு லேபிள் ஒட்டி அலமாரியில் அடுக்கி வைக்கலாம்.
பிறந்தநாள், ஆயுதபூஜை போன்ற சிறிய குடும்ப விழாக்களின் போது, கலர் பேப்பரால் செய்த லைட் வெயிட் தோரணங்கள், செயற்கை முறையில் தயாரித்த வண்ணப்பூக்கள், வாசகங்கள் அடங்கிய வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பெரிய வலுவான பைகளில் போட்டு அலமாரியில் அடுக்கி வைக்கலாம்.
உள்ளிருக்கும் பொருளை சுலபமாக தெரிந்துகொள்ள, அதன் பெயரை பையின் வெளிப்பக்கம் லேபிள் ஒட்டி தெரியப்படுத்தலாம். அந்த மாதிரிப் பைகளில் கத்தரிக்கோல், கத்தி போன்ற கூர் முனையுள்ள பொருட்களைப் போடுவதை தவிர்ப்பது நலம். அதன் மூலம் பை கிழிந்துவிடும் வாய்ப்பு குறையும்.
இந்த மாதிரிப் பைகளை வீட்டிலேயே மறு உபயோகத்திற்கு தயார்படுத்தும் முன், அவற்றின் கைப் பிடிகள் மற்றும் அடிப்பகுதி வலுவாக உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். அழுக்குகள் இருப்பின் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்வதும் அவசியம். படைப்புத் திறனும், ஆர்வமும் இருந்தால், தூக்கிப்போடும் பொருளை பயன்படுத்தி, வீட்டில் அங்குமிங்கும் பரத்திக்கிடக்கும் சாமான்களை அழகாக ஒழுங்குபடுத்தி ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பழகலாமே!
வீடுகளில் வீணாகச் சேரும் கிஃப்ட் பேக்ஸ்களை கொண்டு பணம் செலவில்லாமல் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாற்றி அமைக்கும் எளிய உத்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.