ஸ்மார்ட்போனில் நாம் பேசும்போது எதிர்முனையில் இருப்பவர்களுக்குக் குரல் சரியாகக் கேட்கவில்லை என்றால் அது பெரிய எரிச்சலை ஏற்படுத்தும். பலரும் இந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் போன் ரிப்பேர் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டு உடனே சர்வீஸ் சென்டருக்கு ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறு கிடையாது.
நமது ஸ்மார்ட்போனில் உள்ள Microphone வேலை செய்யாமல் போவதற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். அதை எப்படி நாமே சுலபமாகக் கண்டுபிடித்து சரிசெய்வது என பார்க்கலாம்.
சுத்தம் செய்யும் டிப்ஸ்!
போனில் நாம் பேசும் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கவில்லை என்றால் முதலில் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை மைக்கை சுத்தம் செய்வதுதான். நாம் தினமும் வெளியில் பேருந்து அல்லது ஆட்டோவில் செல்லும்போது அதிகப்படியான தூசியும் வியர்வையும் நேரடியாக அந்தச் சிறிய துவாரத்தில் சென்று அடைத்துக்கொள்ளும்.
பழைய டூத்பிரஷ் ஒன்றைக் கொண்டு அந்த துவாரத்தை மிகவும் மெதுவாகச் சுத்தம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ஒரு Toothpick பயன்படுத்தி உள்ளே இருக்கும் அழுக்குகளைக் கவனமாக எடுக்கலாம். ஆனால் ஊசி போன்ற கூர்மையான உலோகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
தேவையற்ற தடைகளை அகற்றுங்கள்!
பல நேரங்களில் நாம் ஆசையாக வாங்கிப் போடும் சில பேக் கவர்கள் மைக்கை முழுவதுமாக அடைத்துக் கொள்ளும். இது பலருக்கும் தெரிவதே கிடையாது. முதலில் அந்த கவரைக் கழற்றிவிட்டு சாதாரணமாக ஒரு கால் செய்து பாருங்கள். சத்தம் தெளிவாகக் கேட்டால் உங்கள் போனில் எந்தப் பிரச்சனையும் இல்லை. கவர் தான் உண்மையான வில்லன் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
தொழில்நுட்ப ரீதியாக சரிசெய்தல்!
சுத்தம் செய்தும் வேலை செய்யவில்லை என்றால் அது சாப்ட்வேர் சார்ந்த ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று போன் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறை நன்றாக செக் செய்து கொள்ளுங்கள். அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால் பல அம்சங்கள் சரியாக வேலை செய்யாது.
அதேபோல வாட்ஸ்அப் அல்லது கூகுள் மீட் போன்ற குறிப்பிட்ட ஆப்களில் மட்டும் உங்களுக்கு ஆடியோ பிரச்சினை இருந்தால் செட்டிங்ஸில் அந்த ஆப்பிற்கு Microphone Permission கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் பேக்ரவுண்டில் நடக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் கூட மைக்கை முடக்கிவிடும். இதைத் தவிர்க்கப் போனை ஒருமுறை Restart செய்து பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த ஒரு சிறு தந்திரமே பல பெரிய பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.
மேற்கூறிய இந்த மொபைல் மைக் பராமரிப்பு டிப்ஸை சரியாகப் பின்பற்றினாலே தேவையில்லாமல் மெக்கானிக்கிடம் பணத்தை செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.