
வீட்டிலும், வெளியிலும், பொது இடங்களிலும் நல்ல பழக்கங்களை கைக்கொண்டு நடந்தால், நமக்கு சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உறவினரையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது புன்னகை சிந்தினால் உறவும் நட்பும் நீடித்து நிலைக்கும். அதற்கு மாறாக, முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால் யாரும் நம்மிடம் பழக மாட்டார்கள்.
நாம் கோயில்களுக்குச் செல்லும்போது பக்தி ஒன்றே நம் மனதில் இருக்க வேண்டும். அனாவசிய வம்புகள், வாக்குவாதங்கள், செல்போன் அரட்டைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் நல்லது.
மற்றவரிடம் பேசும்போது நாம் எல்லாரிடமும் பண்புடனும், மரியாதையுடனும் பேசுவது சிறந்தது. அதேபோல், அலுவலகம் செல்வோர் தாம் உடுக்கும் உடை சுத்தமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும். ஆடம்பரமானதாக அல்ல.
அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் நல்ல நட்பு கொண்டிருப்பது மிகவும் அவசியம். பணியிடத்தில் அனாவசிய அரட்டையை தவிர்ப்பது நல்லது. அதேபோல், குடும்ப விவகாரங்களை அலுவலகத்தில் மற்றவரிடம் வெளிப்படுத்தக் கூடாது.
நமது அனாவசியத் தேவைக்கு மற்றவரிடம் கடன் வாங்குவதும், கேட்பதும் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். கடன் உறவை மட்டுமல்ல, நட்பையும் முறித்து விடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வேலை செய்யும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் சென்று, கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு, பணி முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்ப வேண்டும். வேலையை தாமதம் செய்வது, உங்கள் வேலை பளுவை வெகுவாக அதிகப்படுத்தும்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் வெளியிடங்களில் மற்றவரின் பெயரை உரக்கச் சொல்லி அழைக்காமல், அவர்களின் இனிசியலைச் சொல்லி அழைக்கலாம். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது நம் குழந்தைகள் அவர்களின் வீட்டுப் பொருட்களை எடுத்து விளையாடுவது, உடைப்பது போன்ற விஷயங்களைச் செய்யாமல் இருக்க பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல, மற்றவர் வீட்டுக் குழந்தைகள் நம் வீட்டுக்கு வரும்போதும் அப்படிச் செய்தால் நாசூக்காக அதைச் சொல்லி தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்கும் மற்றவர்க்கும் மன வருத்தம், தர்மசங்கடம் மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படும்.