
குடும்பங்களில் அமைதி நிலவ, எல்லா விஷயங்களிலும் நேர்த்தியாக செயல்பட வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் பெரியோர்களும் செய்யும் செயல்களே குழந்தைகளை நல்வழிப்படுத்த, ஒழுக்கத்தைக் கடைபிடிக்க உதவுகிறது. அதற்கு பெரியோர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வெள்ளன விழித்தெழு: காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்து நம் வேலைகளைத் தொடரும்பொழுது குழந்தைகள் தானாக எழுந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். காரணம், வீட்டில் ஏற்படும் சின்னச் சின்ன சத்தங்கள் அவர்களை தூங்க விடாது செய்யும். சில பெரியவர்கள் டிவியை ஆன் செய்து அதில் ஆன்மிக தகவல்கள் மற்றும் செய்திகளை பார்க்கத் தொடங்குவார்கள். இதனால் தூக்கம் கலைந்து அவர்கள் எழுந்திருப்பதற்கு நல்ல வழி வகுக்கும். இதற்கு டிவி நல்ல துணைபுரிவதை பல வீடுகளில் காண முடிகிறது.
வாசிக்கும் பழக்கம்: தொடர்ந்து ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரம் எல்லோருமே ஏதாவது பிடித்தவற்றை வாசிக்கப் பழகுகிறார்கள். இதனால் அதைப் பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளும் நாமும் இதைத்தான் செய்ய வேண்டும் என்று எண்ணி அவர்களாகவே புத்தகங்களை எடுத்து படிக்க தொடங்குகிறார்கள். இதனால் புத்தகம் வாங்கும் பழக்கமும் அதிகரிக்கிறது. பொது அறிவு வளர்கிறது. தினசரி எதையாவது வாசிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. உண்பது, உறங்குவது போல் அதையும் பாவிக்கத் தொடங்குகிறார்கள். இது சில குடும்பங்களில் இருப்பதை கண்கூடாகக் காண முடியும். ஆதலால், தினசரி நாம் வாசிப்பை நேசித்தால் குழந்தைகளும் அவ்வழியை பின்தொடர்வார்கள்.
உணவு: ஒவ்வொரு நாளும் காலையில் குறிப்பிட்ட உணவு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினால், இதைத்தான் நாமும் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அவர்களும் அதற்கு இசைந்து விடுவார்கள். குறிப்பாக, பெரியவர்களும் தட்டின் ஓரங்களில் இது பிடிக்கவில்லை என்று வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கத்திரிக்காய் போன்ற பிடிக்காத ஐட்டங்களை ஒதுக்கி வைத்தால் குழந்தைகளும் அதைப் பின்பற்ற தொடங்குவார்கள். ஆதலால், குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் பெரியவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
விளையாட்டு: ஒரு இடத்தில் பெண் குழந்தைகள் சில்லு விளையாடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘இதுபோன்ற விளையாட்டுகளை எல்லாம் இன்றும் விளையாடுகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இதுவும் விளையாட்டுதானே. இது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆதலால் விளையாடுகிறோம்’ என்று கூறினார்கள். எந்த விளையாட்டு என்றாலும் அது உடல் அவயங்களை ஒழுங்குபடுத்தும் உடற்பயிற்சியே. ஆதலால் எந்தெந்த விளையாட்டு பிடிக்கிறதோ அதை அவர்களின் செட்டு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதே உடலுக்கும் மனதிற்கும் இன்பம் பயப்பதாகும். இதுபோன்ற விளையாட்டுகளை பெரியவர்கள் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்தான் முடியும். இல்லை என்றால் வளரிளம் பிள்ளைகளுக்கு இதுபோன்ற விளையாட்டுகள் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.
உறக்கம்: இரவு உணவை எல்லோருமாக சேர்ந்து சாப்பிட்டு விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் டிவி சீரியல் பார்க்காமல் வயதான பெரியவர்கள் அவரவர் படுக்கை அறைக்குச் சென்றால் குழந்தைகளும் டிவி பார்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதேபோல் செல்போனிலும் மற்ற விஷயங்களைப் பார்ப்பதற்கும் துணிய மாட்டார்கள். ஆதலால், டிவியில் தேவையற்றத்தை பார்ப்பதை நிறுத்தினாலே குழந்தைகளும் சரியான நேரத்திற்கு படுக்கச் செல்வார்கள். இதனால் காலையில் எழுந்திருப்பதற்கும் உடலில் அசதி இருக்காது. படுக்கையில் புரள வேண்டிய கட்டாயம் ஏற்படாது. படுத்ததும் உடனே தூங்கி விட முடியும்.
இதுபோன்ற எளிமையான முறைகளை நாம் பின்பற்றினாலே, ‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ என்பதற்கு இணங்க குழந்தைகளும் நம்மை பார்த்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதற்கு நாம் சிறந்தவர்களாக விளங்க வேண்டியது அவர்களுக்கு நாம் செய்யும் கடமை என்பதை உணர்வோம்; அதன் வழி நடப்போம்!