
படுக்கையறை அலங்காரம் என்பது அதைப் பயன்படுத்துபவருக்கு ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஏனெனில், அது ஓய்வெடுக்க வேண்டிய இடமாகும். எனவே, படுக்கையறையை அதிக அலங்காரங்கள் இல்லாமலும், கண்ணை உறுத்தாத வெளிச்சம் மற்றும் எளிமையாகவும் வைப்பது நல்லது. படுக்கையறையை அலங்கரிக்கும் பொழுது சரியான லைட்டிங் வசதி இல்லாமல் இருப்பது ஜன்னல்களை பொருத்தமற்ற முறையில் அலங்கரிப்பது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
1. லைட்டிங் வசதி: மனதை அமைதிப்படுத்தும் வகையில் கண்ணை உறுத்தாத லைட்டிங் வசதிகள் மிகவும் அவசியம். மேஜை விளக்குகள், தரை விளக்குகள், ஸ்கோன்ஸ் போன்று பலவிதமான விளக்குகளை அதிகம் சேர்ப்பது அறையில் ஒரு சூடான சூழ்நிலையை உருவாக்கும். படுக்கை அறையில் ஒரே மாதிரியான வெளிச்சம் இருந்தால் அதுவும் சரியாக இருக்காது. இரவு தூங்கும் பொழுது மெல்லிய ஒளிரும் இரவு விளக்குகளும், மற்ற நேரங்களில் நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் அவசியம். தரை விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் அறையின் சுழல் வசதியாகவோ சரியாகவோ இருக்காது. எனவே, நேர்த்தியான மற்றும் எளிமையான லைட்டிங் வசதி படுக்கையறைக்கு மிகவும் ஏற்றது என்பதை மறக்க வேண்டாம்.
2. திரைச்சீலைகள்: படுக்கையறை ஜன்னல்களை பொருத்தமற்ற முறையில் அலங்கரிப்பது, பொருத்தமற்ற வண்ணங்களில் திரைச்சீலைகள் அல்லது அலங்காரங்கள் இருப்பது அறையின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் கெடுத்து விடும். பொருத்தமற்ற நிறங்கள் அறையின் சூழலுக்கு பொருந்தாமல் போய்விடும். படுக்கை அறையை அழகாகக் காட்டுவது மிகவும் எளிதானது. ஆனால், பெரும்பாலான மக்கள் அதை செய்வதில்லை. படுக்கயறை வசதியாகவும், அமைதியைத் தரும் இடமாகவும் இருக்க வேண்டும். படுக்கை அறைக்கு இரட்டை கம்பி திரைச்சீலை பொருத்தமாக இருக்கும். கீழ் திரைச்சீலை இருண்ட நிறத்திலும், மேல் திரைச்சீலை இலகுவான நிறத்திலும் அமைப்பது நல்லது. படுக்கையறை என்பது சலிப்பை ஏற்படுத்தாமல் உற்சாகத்தை தரக்கூடிய இடமாக இருப்பது அவசியம்.
3. படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள்: படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலை போன்றவற்றில் கண்ணை உறுத்தும் வகையில் மிகவும் காடியான மற்றும் பொருத்தமற்ற நிறங்களைப் பயன்படுத்துவது படுக்கை அறையின் சூழலுக்கு பொருந்தாமல் போகலாம். மென்மையான கண்ணை உறுத்தாத நிறங்கள் நல்ல உறக்கத்திற்கு உதவும். படுக்கை விரிப்புகள், தலையணைகள், மெத்தைகள், தலையணை உறைகள் போன்றவை நம்முடைய மனநிலையை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இலகுவான மற்றும் அடர் நிறங்களற்றவை மனதை அமைதிப்படுத்தி உறக்கம் எளிதில் வர உதவும்.
4. தொலைக்காட்சி பெட்டி மற்றும் அதிக அலங்காரப் பொருட்கள்: நிம்மதியான உறக்கம் வேண்டுபவர்கள் தொலைக்காட்சி பெட்டியை படுக்கை அறையில் வைக்காமல் இருப்பது நல்லது. இது தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். அதன் அதீத வெளிச்சம் மற்றும் பயன்பாடு நம் உறக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதேபோல், படுக்கையறையில் அதிக அலங்காரப் பொருட்கள் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இது இட நெருக்கடியை ஏற்படுத்தி அறையை குழப்பமடையச் செய்யலாம்.
5. அதிக தளபாடங்கள்: படுக்கையறையில் அதிக அளவில் தளபாடங்கள் இருந்தால் அது அறையில் நெருக்கடியை ஏற்படுத்தி வசதியின்மைக்கு வழிவகுக்கும். படுக்கையறை பருமனான தளபாடங்களால் நிரம்பி வழியக் கூடாது. இது படுக்கை அறையை இருட்டாகவும், குறுகலாகவும், சிறியதாகவும் உணர வைக்கும். படுக்கையறையில் கட்டில், மெத்தை, அழகான படுக்கை விரிப்புகளால் அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். சிறிய படுக்கை அறையில் பெரிய தளபாடங்களை வைப்பது அறையை மேலும் சிறியதாக உணர வைக்கும். எனவே, தளபாடங்களை தேர்ந்தெடுக்கும்பொழுது படுக்கை அறையின் அளவையும், வடிவமைப்பையும் கருத்தில் கொண்டு வசதியான மற்றும் நடைமுறைக்குரிய தளபாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
6. வண்ணங்கள் தேர்வு மற்றும் கண்ணாடிகள்: படுக்கை அறையின் சுவர்களுக்கு அடர்ந்த நிறங்களைத் தவிர்த்து, மென்மையான மற்றும் நடுநிலை வண்ணங்களை வெளிர் நீலம், ஐவரி, சாம்பல் நிறம் மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்துவது நல்லது. அத்துடன் படுக்கையறையில் அழகான கண்ணாடிகளை அமைப்பதன் மூலம் இயற்கை ஒளியை பிரதிபலிக்கவும், அதிக இடத்தின் மாயையை உருவாக்கவும் முடியும்.
7. படுக்கையறை என்பது ஓய்வுக்கான இடம்: சிலர் படுக்கையறையில் அலுவலகம் மற்றும் அலுவலகப் பணியை செய்வது, மற்ற வேலைகளை செய்யும் இடமாகவும், டிவி பார்க்கவும் பயன்படுத்துவது தவறானது. படுக்கையறை என்பது ஓய்வெடுக்கும் இடமாக இல்லாமல் வேலை செய்யும் இடமாக மாறிவிடும். படுக்கையறை என்பது ஓய்வுக்கான இடம் என்பதை மறக்க வேண்டாம். அது அமைதியையும் சந்தோஷத்தையும் தரும் இடம் என்பதையும் மறக்க வேண்டாம்.