
வெயில் கொளுத்துதா? ஏசி இல்லாம வீட்ல இருக்கவே முடியலையா? கவலைப்படாதிங்க! உங்க வீட்டை ஏசியே இல்லாம எப்படி சில்லுன்னு வைச்சிக்க சில சூப்பர் ஈஸி வழிகளைத் தெரிஞ்சுக்கணுமா? வாங்க பார்க்கலாம்!
1.சரியான காற்றோட்டம் ஏற்படுத்துதல்:
வீட்டு கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டத்தை அதிகரிக்கலாம். இரவு நேரத்தில் ஜன்னல்கள் திறந்து வைத்து வெளியிலிருந்து குளிர்ந்த காற்று வரச்செய்யலாம். மின்விசிறிகளை (Ceiling fan, table fan) சரியாக பயன்படுத்தவும். சீலிங் ஃபேன் தவிர்த்து டேபிள் ஃபேன் பயன்படுத்தலாம்.
அறையின் மேல் பகுதியில்தான் வெப்ப காற்று இருக்கும். சீலிங் ஃபேன் போட்டவுடன் அனல் காற்றை கீழே சுழற்றி அனுப்பும். டேபிள் ஃபேன் பயன்படுத்தும் பொழுது தரைமட்டத்தில் இருக்கும் குளிர்ந்த காற்று சுழற்சிக்கு உட்படுகிறது. மேலும் ஃபேனின் பின்புறம் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீருடன் சில ஐஸ்கட்டிகளைப் போட்டு வைப்பது அறையில் குளிர்ந்த காற்றுக்கு உத்திரவாதம் அளிக்கும்.
2.சூரிய ஒளியை குறைத்தல்:
ஜன்னல்களில் திரைச்சீலைகள் (Curtains) அல்லது கண்ணாடி துடுப்புகள் (Blinds) பயன்படுத்தி நேரடி வெப்பத்தை குறைக்கலாம். வெள்ளை நிற திரைச்சீலைகள் அதிக வெப்பத்தை பிரதிபலித்து வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஜன்னல் கண்ணாடிகளில் Reflective film பொருத்தினால் வெப்பத்தை குறைக்கலாம். ஜன்னலுக்கு மெல்லிய துணியினால் ஆன வெளிர் நிற திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். குளிர்ந்த நீரில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து ஸ்பிரேயர் மூலம் திரைச்சீலைகளில் அவ்வப்பொழுது தெளித்துக் கொண்டால் வீடு நறுமணத்துடனும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
3.இயற்கை முறைகள்:
வீட்டின் கூரை மீது வெள்ளை நிறம் பூசினால் வெப்பம் குறையும். மண் குடத்தில் தண்ணீர் அல்லது ஈரமான துணிகள் (Wet cloth) வைத்து காற்றை குளிர்ச்சியாக மாற்றலாம். வீட்டின் அருகே மரங்கள், கொடிகள் வளர்த்தால் நிழலும் குளிர்ச்சியும் கிடைக்கும். வீட்டிற்குள் சிறு தொட்டிகளில் செடிகளை ஆங்காங்கு வைத்தாலும் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியாது. பால்கனியில் துளசி, கற்பூரவல்லி; வீட்டிற்குள் மணிபிளான்ட் போன்ற எளிதில் கிடைக்கும் செடிகளை வளர்க்கலாம். மேல் தளத்தில் தெர்மோகோல் போட்டு அதன் மேல் பூத்தொட்டிகள் வைக்கலாம்.
4.மின் சாதனங்களை குறைத்து பயன்படுத்துதல்:
அதிக வெப்பம் உமிழும் விளக்குகள் மற்றும் சாதனங்களை (கசடர் விளக்கு (Incandescent) ஓவன், இன்வெர்டர்) குறைவாக பயன்படுத்தவும். சமையலறையில் அதிக நேரம் எரிவாயு பயன்படுத்துவதால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதனால் வெளியே சமையல் செய்வது நல்லது.
5.தண்ணீர் மற்றும் இயற்கை குளிர்ச்சி:
வாசலில் தண்ணீர் தெளிப்பு, குளிர்ந்த துணிகளை தொங்கவிடுதல் போன்ற முறைகள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மாடியில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம் குறையலாம். தூங்குறதுக்கு முன் படுக்கை அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வச்சிட்டு படுத்தால் மாற்றத்தை உணரலாம்.
வெள்ளரிக்காய், வெள்ளைப் பூசணி போன்ற குளுமை படுத்தக்கூடிய உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். கூடுமானவரை தரையில் கோரைப் பாய் விரித்து உட்காரலாம். கீழ் தளத்தில் ஜன்னல்களில் வெட்டிவேர் கட்டி தொங்கவிட்டு தண்ணீர் தெளிக்கலாம்.
மேலும் முடிந்தவரை காற்றோட்டமாக உள்ள 100% பருத்தியினால் செய்யப்பட்ட உடைகளை அணியவும். இவற்றை செயல்படுத்தினால், AC இல்லாமல் கூட வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.