பெண் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; நம்பிக்கை கொடுங்கள்

Parenting
Parenting
Published on

இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகளுக்கு குட் டச்... பேட் டச்.... என்ற விழிப்புணர்வையும் தாண்டி பல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டியது கட்டாயம் ஆகும்.

அவர்களின் சூழலை கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அனைத்து இடங்களிலும் குழந்தைகைளை அச்சுறுத்தும் ஆபத்துகளைக் கண்டறிய குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் வீடு வந்ததும் பேசுங்கள்.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அல்லது விளையாடி முடித்து வீடு வந்ததும் குழந்தைகளோடு பேசுங்கள். மதியம் உணவு சாப்பிட்டது யாருடன் ? விளையாடியது யாருடன்? என்பதை விசாரிங்கள். அதில் எல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா? என்பதை கேளுங்கள் அவர்களை பேச செய்து நீங்கள் கேளுங்கள். அவர்களுக்கு சங்கடம் தருவது போன்ற செயல்களை யாராவது செய்திருந்தால் நிச்சயம் சொல்லிவிடுவார்கள்.

எல்லோரையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

குழந்தைகள் நாள் முழுக்க யாருடன் நேரத்தை செலவிடுகிறார்களோ? அந்த மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சக நண்பர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் , விளையாட்டு சொல்லித் தருபவர்கள், டியூஷன் மாஸ்டர்கள், குழந்தைகள் விளையாடப் போகும் நண்பர்கள் ,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் என எல்லோரையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்பகமானவர்களா? என்பதை குழந்தைகளிடம் பேசி உரையாடி தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளை பராமரிப்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்து சேவைகளை தருபவர்கள் என எல்லோரும் நம்பகமானவர்களா? என்பதை கண்காணியுங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்

ஆபத்தான நபர்கள் உங்கள் அருகிலேயே இருக்கலாம். அப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை நீங்கள்தான் அடையாளம் கண்டு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளிடம் பாசமாக இருப்பது போல சில வயதான ஆட்கள் நடிப்பார்கள். குழந்தைகளே இல்லாத தங்கள் வீட்டில் நிறைய பொம்மை வாங்கி வைத்திருப்பார்கள். எதாவது குழந்தை விளையாட வந்தால் உள்ளே அழைத்துப் போய் வீட்டை பூட்டிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

யாரோ அறிமுகம் இல்லாத நண்பர்களிடம் இருந்துதான் ஆபத்துக்கள் வரும் என்பது இல்லை. நான் மிகவும் நம்பும் மனிதர்களே கூட தப்பு செய்யலாம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். யாராவது அப்படி தப்பாக நடந்துக் கொள்ள முயற்சித்தால், யாரிடம் போய் உதவி கேட்பது என்பதையும் அடையாளம் காட்டுங்கள்.

இதையும் படியுங்கள்:
பங்குனி உத்திரம் முதல் ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கியமான ஆன்மீக நிகழ்வுகள்
Parenting

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

மிக இளம் வயதிலிருந்தே தங்கள் உடல் பற்றிய விழிப்புணர்வை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். உடல் உறுப்புகள் பற்றி செயல்பாடுகள் பற்றியும், அறிவியலின் உண்மைகளை சொல்வது போலவே அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தங்கள் மீது அடுத்தவர்கள் எந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்ற எல்லையை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். கன்னத்தை கிள்ளி கொஞ்சுவது, எனக்கு கிஸ் கொடு என்பது, வாரி அனைத்து முத்தம் விடுவது என எதையும் அனுமதிக்காதீர்கள். நெருங்கிய உறவுகள் தாத்தா பாட்டிகள் கூட ஒரு கட்டத்துக்கு பிறகு குழந்தைகளிடம் இருந்து விலகி நின்று அன்பை காட்டச் சொல்லுங்கள். அப்போதுதான் இது போன்ற செய்திகள் சங்கடந்தருபவை என்பதை குழந்தைகள் உணரும்.

நம்பிக்கை கொடுங்கள்

குழந்தைகள் எதை வேண்டுமானாலும் உங்களிடம் பேசலாம், என்ற நம்பிக்கையை கொடுங்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். வக்கிர மனிதர்கள் பலரும் குழந்தைகளை மிரட்டியே காரியம் சாதிக்கிறார்கள். இதை வீட்டில் சொன்னால் உங்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டுவார்கள். அதனாலேயே நிறைய குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை. இப்படிப்பட்ட மிரட்டல்களை கூட உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடிகிற சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த கிரகத்தில் தங்கமும் பிளாட்டினமும் கொட்டிக் கிடக்கிறது!
Parenting

நீங்கள் பதிலாக இருங்கள்

சும்மா தொண தொண வென எதையாவது பேசிகிட்டு இருக்காதே! என்று குழந்தைகள் எதையோ சொல்ல வரும்போது தடைப் போடாதீங்க!

குழந்தைகள் பேசும்போது வேறு எங்கோ கவனத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லுவதை அரைகுறையாக கேட்காதீர்கள். முழுமையாக கேளுங்கள் குறுக்கே பேசாதீர்கள். அவர்கள் கேள்விகளோடு வரும்போது நீங்கள் பதிலாக இருங்கள். அவர்கள் கவலைகளோடு வரும்போது நீங்கள் மருந்தாக இருங்கள். நம் குரல் கவனிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை இருக்கும் போது தான் குழந்தைகள் பேசுவார்கள். கேட்பதற்கு காதுகள் இல்லாத போது வாய்கள் தானாகவே மூடிக்கொள்ளும். அதுபோல குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு உதவியாக இருங்கள்.

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

செய்தித்தாளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இது போன்ற தப்பான செய்திகளை கடந்து போக நேரும் . அப்போது இதுபற்றி குழந்தைகளிடம் உரையாடுங்கள். என்ன நடந்திருக்கு தெரியுமா? என்று கேள்வி கேட்டு நடந்த சம்பவத்தை விவரியுங்கள். இதைத் தவிர்க்க அந்த குழந்தை என்ன செய்திருக்கலாம்? என்பது பற்றி பேசுங்கள். இப்படி வேற ஏதாவது சம்பவம் எங்காவது நடந்து கேள்விப்பட்டிருக்கிறாயா? என்று கேள்வி கேளுங்கள். எது சரி? எது தவறு ?என்பதை கேள்விகள் கேட்டு அவர்களுக்கு உணர்த்துங்கள்.

தவறு பற்றி உணர்த்துங்கள்

குழந்தைகளிடம் சிலர் ஆபாசமாக பேசி இருப்பார்கள். அல்லது தவறான செயல்களை செய்திருப்பார்கள். ஒரு குழந்தையின் கோணத்தில் பார்த்தால் யாவுமே அவர்கள் அதுவரை அறிந்திறாத புதிய விஷயங்கள். இதுபோன்ற புதிய விஷயங்கள் பற்றி குழந்தைகள் கேட்கும் போது பெற்றோர்கள் பதறி அவர்களின் வாயை மூடு என்று சொல்லக்கூடாது !

அவை ஏன் தவறு!? என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்டது போன்ற காயங்கள் சிராய்ப்புகள் மட்டுமே ஒரு குழந்தை ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் அல்ல. குழந்தைகள் வழக்கம்போல் தூங்காமல் விரைவில் நீண்ட நேரம் வைத்திருந்தாலும, சரியாக சாப்பிடாவிட்டாலும், நீண்ட நேரம் தனிமையை நாடினாலும், அடிக்கடி கோபப்பட்டாலும், அவர்களை கூப்பிட்டு மனதில் உள்ளதை கேட்டு அந்த குழப்பங்களுக்கு விடை தாருங்கள்.

மொத்தத்தில் பெண் குழந்தைகளின் நிலைமையை குறித்து நாம் தினமும் கேட்க நேரும் செய்திகள் எவையும் நம்பிக்கை தருபவையாக இல்லாததால் குழந்தைகளிடம் அக்கறையுடன் பேசி கண் காணியுங்கள்! பாதுகாப்புடன் விழித்திருங்கள்!.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி: 10 அணிகளின் முழுபட்டியல்
Parenting

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com