வீட்டு உபயோகப் பொருட்கள் வீணாகாமல் இருக்க சில அத்தியாவசிய ஆலோசனைகள்!
1. மரச்சாமான்கள் அனைத்தையும் ஈரத்துணியால் நன்றாகத் துடைத்து எடுக்கவும். மிகவும் ஈரமான துணியை தவிர்த்து, சிறிதளவு மண்ணெண்ணெயை மரச்சாமான்களில் மீது ஸ்பிரே செய்து பின்னர் துணியால் துடைக்கவும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை படிவது தடுக்கப்படும்.
2. உங்கள் வீட்டு பூச்செடிகளில் உள்ள இலை, கிளைகளில் பூச்சிகள் வந்து விட்டதா? மஞ்சள் தூள் கலந்த நீரை, அடிக்கடி அந்த செடிகளின் மீது தெளியுங்கள். பூச்சிகள் அறவே நீங்கி விடும்.
3. வீடுகளில் பவர்கட் சமயங்களில் மெழுகுவர்த்தியை தரையில் ஏற்றாமல், ஒரு கிண்ணத்தில் வைத்து ஏற்றலாம். உருகிய மெழுகு கிண்ணத்தில் அதிகம் சேர்ந்ததும், அதை லேசாக உருக்கி, திரி போட்டு மறுபடியும் பயன்படுத்தலாம்.
4. குழந்தைகளின் ஷூவில் உள்ள ஈரப்பதத்தைப் போக்க, பழைய நியூஸ் பேப்பரை சுருட்டி ஷூவினுள் வைக்கலாம். ஷூவிலுள்ள ஈரத்தை பேப்பர் உறிஞ்சி விடும்.
5. தீப்பெட்டி நமத்து போகாமல் இருக்க ஃப்ரிட்ஜ் ஸ்டெபிலைசர் மீது அவ்வப்போது வைக்கலாம். ஸ்டெபிலைசரின் சூடு தீப்பெட்டியை நமத்துப் போக விடாது.
6. தண்ணீரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் கால்கள் அதிக ஈரமாக இருக்கும். அதனால் பாதங்களில் வெடிப்பு வரலாம். இதற்கு வேப்பிலை, மஞ்சள், சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து வெடிப்பின் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
7. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சீப்பை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது அவசியம். வெந்நீரில் சிறிது ஷாம்பு கலந்து, அதில் சீப்பை சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாகக் கழுவினால், அதிலுள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் அனைத்தும் போய் விடும். நமக்கும் இன்ஃபெக் ஷன் ஏற்படாது.
8. சமையலறையில் உள்ள மர அலமாரிகளின் ஓரங்களில் பூண்டு, துளசி போன்றவற்றை நறுக்கி வைத்தால், பூச்சிகளை வர விடாமல் தடுக்கும்.
9. குழந்தைகள் இருக்கும் வீடுகளில், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வெந்நீரில் இரண்டு முறை கழுவ வேண்டும். பின்னர் வெயிலில் சில நிமிடங்கள் உலர்த்தி எடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாது.
10. வீட்டு ஜன்னல் ஓரங்களில் துளசி, கற்பூரவல்லி போன்ற செடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டில் கொசுத்தொல்லை குறைவது மட்டுமல்லாமல் வீடு முழுக்க சுத்தமான காற்று கிடைக்க இது வழிவகுக்கும். நச்சுக் காற்றையும் சுத்தம் செய்யும்.
11. வெயில் அடிக்கும் நேரங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களை வெயிலில் உலர்த்தலாம். இதனால் பூஞ்சை, கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கும்.
12. பூச்சிகள் துணிகளை நாசம் செய்யக்கூடாதென்று அந்துருண்டையை ( நாப்தலின் பால்ஸ்) சிலர் நேரடியாக துணிகளில் போடுவார்கள். அப்படிப் போடுவதால் துணிகளில் அதுவே கறையாகப் படியும் வாய்ப்பு குளிர்காலத்தில் அதிகம். எனவே, அந்துருண்டையை வேஸ்டான சிறிய துணி ஒன்றில் போட்டுக் கட்டி, துணிகளுக்கிடையில் வைப்பதே நல்லது.