
காதுகளால் இரைச்சலைக் கேட்க முடியும். ஆனால், கண்களால் இரைச்சலைப் பார்க்க முடியுமா? முடியும். காட்சி இரைச்சல் (Visual Noise) என்பது நமது வீட்டில், அலுவலகத்தில், நமது சுற்றுப்புறச் சூழலில் உள்ள குழப்பமான, தேவையற்ற, கவனத்தை சிதறடிக்கும் காட்சிகளைக் குறிக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
காட்சி இரைச்சல்: தேர்வுக்கு மும்முரமாக படித்துக் கொண்டிருக்கும்போது, பூஜையறையில் பக்தியுடன் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஏதாவது இரைச்சலை கேட்க நேர்ந்தால் உடனே செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து கவனம் சிதறும். அதுபோலவே கண்களால் பார்க்கும் சில காட்சிகளும் கூட நமது கவனத்தை சிதறச் செய்யும்.
அலுவலகத்தில் ஒரு முக்கியமான ஆவணத்தை சரி பார்த்துக் கொண்டிருக்கும்போது, மேசை முழுக்க காகிதங்கள் சிதறிக் கிடக்கின்றன. மேசையின் மீது உள்ள பொருட்கள் பிரகாசமான நிறங்களில் இருக்கின்றன. அழுத்தமான சிவப்புக் கலரில் பெரிய சைஸ் பேப்பர் வெயிட், மஞ்சள் நிற பூங்கொத்து கருப்புக் கலரில் ஃபைல்கள் என பலவித முரண்பாடான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் இருக்கும் பொருள்கள் காட்சி சோர்வை ஏற்படுத்தும்.
கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏதாவது வலைதளத்தை பார்வையிட நேர்ந்தால் அதில் வரும் எக்கச்சக்கமான விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத லிங்க்குகள் கண்களுக்கு காட்சி இரைச்சலை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களை பார்வையிடும்போது வரும் அடுத்தடுத்த தகவல்கள், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ரீல்ஸ்கள், விளம்பரங்கள் போன்றவை காட்சி இரைச்சலை ஏற்படுத்தி கவனம் செலுத்துவதை கடினமாக்கி மூளையின் செயல் திறனை குறைக்கிறது.
சமைக்கலாம் என்று அடுப்படிக்குள் நுழைந்தால், மேடை முழுக்க சாமான்கள் பரப்பி வைக்கப்பட்டு, எண்ணெய் கொட்டப்பட்டு, அரிசி பருப்பு சிதறி, கோதுமை மாவு ஆங்காங்கே சிந்தி, காய்கறி கழிவுகள் ஒரு மூலையில் குவிந்திருக்கும் சூழல், கண்களுக்கு பயங்கரமான காட்சி இரைச்சலை ஏற்படுத்தும். இதனால் விரைவாக எரிச்சலும் கோபமும் அழையா விருந்தாளிகளாக வந்துவிடும்.
காட்சி இரைச்சலால் ஏற்படும் விளைவுகள்: எந்த வேலையையும் கவனித்து செய்ய முடியாமல் கவனச் சிதறல் ஏற்படும். மூளையின் செயல்திறன் சுறுசுறுப்பாக இருக்காது. கண்களுக்கு சோர்வு தருவதுடன் மனதிற்கும் சோர்வு உண்டாகும். காட்சிகளின் அதிகப்படியான தூண்டுதல் சிலருக்கு தலைவலியைக் கூட வரவழைத்து விடும்.
குழப்பமான சூழ்நிலையில் சரியாக சிந்திக்க, செயல்பட முடியாது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் போகும். எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். எக்கச்சக்க மற்றும் குழப்பமான காட்சி அமைப்புகள் மூளைக்கு ஏகப்பட்ட தகவல்களை அனுப்பி அதை சிந்திக்க விடாமல் செய்யும். அதன் விளைவாக இயலாமையை வெளிப்படுத்த ஆத்திரத்தோடும் கோபத்தோடும் எதிர்வினையாற்றத் தூண்டும். மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதை எதிர்கொள்வது எப்படி?
வேலை செய்யும் பணியிடத்தை மிகவும் ஒழுங்காக அமைத்துக் கொள்வது அவசியம். தேவையான பொருட்கள் மட்டுமே மேசையில் இருக்க வேண்டும். அனைத்தையும் நேர்த்தியாக அடுக்கி வைக்க வேண்டும். இதனால் வேலை செய்யும் திறன் கூடும்.
கணினியில் வேலை செய்யும் போதும் திரையில் ஏகப்பட்ட கோப்புகளை சேர்த்து வைக்காமல் அவற்றை முறையான ஃபோல்டர்களில் போட்டு டெஸ்க்டாப்பை நீட்டாக வைத்திருக்க வேண்டும். மின்னஞ்சல்களை திறம்பட நிர்வகிக்க வேண்டும். சிலருடைய மின்னஞ்சல் பகுதிகளில் எக்கச்சக்கமான அஞ்சல்கள் பிரிக்கப்படாமலேயே சேர்ந்திருக்கும். அவற்றை அவ்வப்போது சரிபார்த்து தேவையில்லாததை டெலிட் செய்ய வேண்டும்.
மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை முதல் நாளே திட்டமிட்டு அவற்றை தயார்படுத்தி வைத்துக் கொண்டால் மறுநாள் அந்த வேலைகளை மிக எளிதாக முடிக்கலாம். சமையலறையில் வேலை முடித்ததும் பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல காய்ந்த துணிகளை மடித்து அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும்.