நம் நட்பு வட்டத்தில் அல்லது உறவினர்கள் யாரேனும் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து கொண்டாட நமக்கு அழைப்பு விடுத்தால் என்ன வாங்கிச் செல்வது என்று சில சமயம் குழப்பமாக இருக்கும். பொதுவாக, வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு வரும் பரிசுப் பொருட்கள் என்று பார்த்தால் சுவர் கடிகாரம்தான் இருக்கும். ஏழு, எட்டு சுவர் கடிகாரங்கள் பரிசாக வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
நாம் தரும் பரிசு அவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் அல்லவா? நம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் என்றால் அவர்களுடைய ரசனை நமக்கு ஓரளவு தெரிந்திருக்கும். அதைக் கொண்டும் அவர்களுக்குப் பரிசு பொருட்களை வாங்கலாம். அதற்கான யோசனைகள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
மேசன் ஜாடிகள்: மேசன் ஜாடிகள் உட்புற தோட்டத்திற்கு பயன்படுத்த மிகவும் அற்புதமான ஹவுஸ் வார்மிங் பரிசு என்றே சொல்லலாம். இன்டோர் பிளாண்ட்ஸ் எனப்படும் வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு பல வண்ணங்களில், பல அளவுகளில் கிடைக்கும் இதனை நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்து பரிசளிக்கலாம்.
டின்னர் செட்: டின்னர் செட்களை பரிசளிப்பது மிகவும் உபயோகமாக இருக்கும். எப்பொழுதும் ஹவுஸ் வார்மிங் பரிசு பட்டியலில் முதலிடம் பெறும் இவற்றை நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பரிசளிக்க பல வண்ணங்களில் கிடைக்கிறது.
சிறந்த சமையல் புத்தகங்கள்: புதிதாக திருமணமானவர்கள், இளம் ஜோடிகளுக்கு சமையல் புத்தகங்களை பரிசளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய இடத்தில், புதிய சூழலில் வாழத் தொடங்கும் இளஞ்ஜோடிகள் செய்து பார்க்க, புதிய சமையல் குறிப்புகளை கற்றுக்கொள்ள, அவர்களை வழிநடத்த இந்த சமையல் புத்தகங்கள் உபயோகமாக இருக்கும்.
மேசை விளக்குகள்: மேசைகளுக்கான அழகியல் விளக்குகள் சிறந்த கிரகப்பிரவேச பரிசு யோசனைகளில் ஒன்றாகும். இதை பல்வேறு வடிவங்களில் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் வாங்கி பரிசளிக்கலாம். பெறுபவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அலங்கரிக்கப்பட்ட கீ ஹோல்டர் மற்றும் கீ செயின்கள்: சாவிகளை தொங்கவிடும் அழகான ஸ்டாண்ட்களை கிரகப்பிரவேசம் செய்பவரின் பெயர்கள், தேதிகள் அல்லது மேற்கோள்கள் போன்றவற்றை பொறித்து பரிசளிக்கலாம். சிறந்த வடிவமைப்பிலும், அலங்காரமாகவும் கிடைக்கும் சாவிக்கொத்து ஸ்டாண்டுகள் நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் விதவிதமாக மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கீ செயின்களும் அழகான வடிவங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பரிசளிக்கலாம்.
சீஸ் போர்டு மற்றும் கட்டிங் போர்டு: அழகான வடிவத்தில் இருக்கும் சீஸ் போர்டு பலகைகள் பெறுபவரின் கவனத்தை ஈர்க்கும் பயனுள்ள பரிசாகும். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டிங் போர்டு அவசியம். அதனை பரிசாகக் கொடுக்க நாம் அவற்றில் பெறுபவரின் பெயர்கள் அல்லது மேற்கோள்களை எழுதி பரிசளிக்க சிறந்த வரவேற்பைப் பெறும்.