கீட்டோ டயட் (keto diet) எனப்படுவது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்திற்கான ஆற்றலுக்காக கார்போஹைட்ரேடுகளை விட கொழுப்பை முதன்மையாக நம்பி இருக்கும் ஒரு உணவு முறையாகும்.
கீட்டோ உணவின் ஆரோக்கிய நன்மைகள்: கீட்டோ உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு விரைவில் எடை இழப்பு, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் கை, கால் வலி போன்ற நரம்பியல் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடுதல் போன்ற நன்மைகள் உள்ளன. கீட்டோ டயட்டில் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? முதன்மையாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணர்வுகளைத் தவிர்ப்பது அவசியம். தானியங்கள் மற்றும் ஸ்டார்ச் சேர்த்த கோதுமை ரொட்டி, பாஸ்தா மற்றும் வேக வைத்த பொருட்கள்.
அரிசி வகைகளில் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி உட்பட அனைத்து வகையான அரிசிகளையும், சோள மாவு, சுண்டல் பாப்கான் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பார்லி, கினோவா, தினை, கம்பு போன்ற தானியங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை உணவுகளில் இனிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள், குக்கிகள் மற்றும் சாக்லேட்டுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை பானங்களில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், இனிப்பு தேநீர், ஆற்றல் பானங்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள்.
தவிர்க்க வேண்டிய காய்கறிகள்: உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் சார்ந்த பொருட்கள், பட்டாணி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் சில கிழங்கு வகைகள். பீன்ஸ், கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த பீன்ஸ் வகைகளில் புரதம் இருந்தாலும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பழங்கள்: சர்க்கரை அளவு அதிகமாக உள்ள வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், அன்னாசிப்பழம், உலர் பழங்கள், பேரிச்சை போன்றவற்றை மிக மிகக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பால் பொருட்கள்: குறைந்த கொழுப்புள்ள இனிப்பு, தயிர், அதிக பால் போன்றவை. அதிக கார்போஹைட்ரேடுகளை கொண்டிருக்கும். முழுக் கொழுப்புள்ள பால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதையும் மிதமாகவே உட்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேடுகள், பேஸ்ட்ரிகள், சர்க்கரை மற்றும் மாவு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கீட்டோ டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்: சிலர் மிகக் குறைவாக அல்லது அதிகமான புரதத்தை உட்கொள்கிறார்கள். குறைந்த அளவு புரதம் எடுத்துக்கொள்ளும்போது தசை இழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். அதேபோல, அதிகப்படியான புரதம் குளுக்கோசாக மாற்றப்படும். உணவை திட்டமிடத் தவறும்போதும், அதிகமாக பசிக்கும்போதும், அதிக கார்ப் கொண்ட உணவுகளை உண்ணத் தோன்றும். எனவே, சரியான நேரத்தில் உண்ண வேண்டும். நிறைவற்ற கொழுப்புகளின் அளவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இவை உடல் நல அபாயங்களை அதிகரிக்கும்.
மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் போன்ற கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேடுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தினால் அது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். எனவே, குறைந்த கார்ப் கொண்ட காய்கறிகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். டையூரிடிக் விளைவுகளை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் தலைவலியைக் கொண்டு வரும். எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கீட்டோ டயட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.