நடுத்தர வயதை உற்சாகமாகக் கழிக்க சில யோசனைகள்!

Some ideas for an exciting middle age
Some ideas for an exciting middle agehttps://tamil.hindustantimes.com

டவுளின் படைப்பில் மனிதன் ஒரு அற்புதம். பிற ஜீவராசிகளுக்கு இல்லாத சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. நடுத்தர வயது என்பது மனித வாழ்வின் ஒரு அழகான காலகட்டம் அதை மிகவும் அற்புதமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்வது அவசியம்.

நடுத்தர வயதின் குணாதிசயங்கள்: பொதுவாக, நடுத்தர வயது என்பது 40க்கும் 60க்கும் இடைப்பட்ட காலம். இந்தக் காலகட்டத்தில் உடல் ரீதியான, உள ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரும். வளர்ந்த பிள்ளைகள் ஒருபுறமும் முதுமையின் பிடியில் சிக்கி இருக்கும் பெற்றோர்கள் மறுபுறமும் ஆக இரண்டு பக்கத்தையும் சமாளிக்கும் பொறுப்பு நடுத்தர வயதினருக்கு உண்டு.

இந்த வயதில் நோய்களின் ஆரம்பம் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள், சோர்வு மற்றும் வாழ்க்கை மீதான விரக்தி கூட எட்டிப் பார்க்கும். அடிக்கடி எதைப் பற்றியாவது கவலையோ அல்லது சிந்தனையோ இருந்துகொண்டே இருக்கும். நடுத்தர வயது என்பது வெறும் கவலைகளையும் துன்பத்தையும் அசைபோடும் பருவமா என்ன? நிச்சயமாக இல்லை. மனிதன் மனது வைத்தால் நடுத்தர வயது பருவ காலத்தை மிக அழகாக அற்புதமாக வழி நடத்த முடியும்.

நடுத்தர வயதை உற்சாகமாக எதிர்கொள்ள சில யோசனைகள்:

1. பிறரை திருப்திபடுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்து முதலில் வெளியே வாருங்கள்: உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது. எப்போதும் பிறரைப் பற்றியே சிந்தித்து அவர்களை திருப்திப்படுத்திக்கொண்டே இருந்தால் உங்களை நீங்கள் திருப்திப்படுத்துவது எப்போது? உங்களுக்குப் பிடித்ததை, மனதுக்கு சரி என்று பட்டதை தயங்காமல் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், நட்பு வட்டம் என்று எல்லோரையும் நூறு சதவீதம் திருப்தி செய்யவே முடியாது. அது அவசியமும் இல்லை.

2. உங்களை பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: இந்தத் தவறை வாழ்நாளில் எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்? பலமுறை, அடிக்கடி செய்திருக்கிறீர்கள் அல்லவா? 'நான் அவரைப் போல பணக்காரனாக இல்லை. இவரைப் போல அழகாக இல்லை, எதிர் வீட்டுக்காரரை போல உலகம் முழுவதும் பயணிக்கவில்லை? என்று எத்தனை விதமான ஒப்பீடுகள். இதனால் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு செய்துகொள்ளவே இல்லையே? தன்னிடம் இருக்கும் நல்ல சிறந்த குணங்களை பட்டியலிட்டு பார்த்தால் யாருடனும் நம்மை ஒப்பிடத் தோன்றாது.

3. குறைவான சிறந்த நண்பர்களே போதும்: உங்கள் மீது அக்கறையும் அன்பும் செலுத்துவதற்கு மிகவும் குறைவான நண்பர்கள் இருந்தால் போதும். பெரிய நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை திருப்திபடுத்த வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய அவசியம் இல்லை.

4. வேலைக்காக உறவுகளை தியாகம் செய்யாதீர்கள்: அலுவலகத்தில் ஓவர் டைம் வேலை செய்தால் அதிக பணம் கிடைக்கும். ஆனால், வீட்டில் உங்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் மனைவியுடன் அல்லது பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். அவர்கள் எதிர்பார்ப்பது வெறும் பணத்தை அல்ல. உங்களுடைய அன்பை, உங்கள் நேரத்தை அவர்களுக்கு தாராளமாகத் தர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
யூரிக் அமில பாதிப்பைக் கட்டுப்படுத்தும் 5 பழங்கள்! 
Some ideas for an exciting middle age

5. கடந்த காலத்தைப் பற்றிய வருத்தம் வேண்டாம்: கடந்த காலத்தில் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளை செய்திருக்கலாம். அதைப் பற்றி எப்போதும் நினைத்து குழம்பி தன்னைத்தானே வருத்திக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அதிலிருந்து மீண்டு வெளியே வந்து இன்றைய நாளை இன்றிலிருந்து புதிதாய் பிறந்தேன் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழத் தொடங்குங்கள்.

உங்களால் உங்கள் குடும்பமே மகிழ்ச்சி அடையும். அவர்களும் நிம்மதியாக வாழ தொடங்குவார்கள். உடன் இருக்கும் நண்பர் கூட்டமும் மகிழ்ச்சி அடைவார்கள். நடுத்தர வயது வாழ்க்கையை ஆனந்தமாக இன்றே அனுபவிக்கத் தொடங்கலாம் நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com