
மழைக்காலம் தொடங்கி, மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நாம் இனிதான் கவனமாக இருக்க வேண்டும். நம் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இந்த மழைக்காலத்தில் சின்னச் சின்ன விஷயங்களை கடைப்பிடிப்பதின் மூலம், நாம் மழைக்காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பி விடலாம்.
உடல் நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்க: மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று நீரிழப்பு. உங்களது உடலுக்கு தேவையான நீர் இல்லையெனில் தேவையற்ற பிரச்னைகளைக் கொண்டுவரும். உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதிகமான தண்ணீர் குடிப்பது சிறுநீர் கழிக்க வழிவகுக்கும் என்று கவலைகொள்ள வேண்டாம். இதனால் எந்தப் பிரச்சனையும் வராது.
உணவுக் கட்டுப்பாடு: மழைக்காலங்களில் நீங்கள் சாப்பிடும் சத்துள்ள உணவுகள்தான் உங்கள் உடல் நலத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. மழைக்காலங்களில் அதிகமாக பசி உணர்வு இருக்காது. ஆனாலும் உடலுக்கு தேவையான சக்தியைப் பெற சத்துள்ள உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலங்களில் நீங்கள் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும். நீங்கள் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, மழைக்காலத்தில் நீர் பற்றாக்குறையால் உடல் சருமத்தில் ஏற்படும் வறட்சி தன்மை நீங்கும். எனவே, ஆரோக்கியமான உணவை உண்ணும் பழக்கத்தை கடைபிடித்து உங்கள் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
பூஞ்சை தொற்று நோய்கள்: மழைக்காலம் என்பது பூஞ்சை தொற்றுகளின் காலம். எனவே, நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் தலை முடியோ அல்லது உடலையோ ஒருபோதும் ஈரத்துடன் வைத்துக் கொள்ளாதீர்கள். இது பூஞ்சை தொற்றுகளுக்கு வழி வகுக்கும். எப்போதும் உடலை உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
சருமப் பாதுகாப்பு: தக்காளி உண்மையிலேயே உங்கள் சருமத்தை பளபளக்கச் செய்யும். தக்காளி சாறை உங்கள் முகத்தில் தடவி, அரை மணி நேரம் அல்லது அது காய்ந்த பிறகு கழுவும்போது உங்கள் முகம் புத்துணர்ச்சியாகவும், நீரேற்றத்துடனுன் மாறும். இதுதவிர, உங்கள் சமையலறையில் உள்ள பழங்களைக் கொண்டும் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றலாம். இதற்கு பப்பாளி, ஆப்பிள் மற்றும் அன்னாசிப்பழ பேஸ்டை நன்றாகக் கலந்து உங்கள் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை காய விட்டு கழுவினால் முகம் பளபளப்பாக மாறுவதுடன் முக சருமம் மென்மையாகும்.