
இயல்பை மீறி சிலர் விசித்திரமாக செயல்படும்போது அதை கவனிக்கும் நமக்கு ஒரு வித சந்தேகம் வரும். அதாவது, சம்மந்தபட்டவர்கள் இயல்பாக உள்ளார்களா இல்லையா என்று?. அப்படி நீங்கள் விசித்திரமாக கருதும் சில செயல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொடர்ச்சியாக சிரிப்பது, தேவையற்ற கைதட்டல்கள், கண்களைத் தொடர்ச்சியாக இமைப்பது போன்ற செயல்களை ஒரு சிலர் செய்யும்போது, அவை வழக்கத்திற்கு மாறான செயல்களாக நமக்குத் தோன்றலாம். ஆனால், அவைதான் நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கின்றன. சிரிப்பு பெரும்பாலும் சிறந்த மருந்து என்றும், பல நல்ல காரணத்திற்காகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த செயல் நம் உடலுக்குத் தேவையான எண்டோர்பின்களை (Endorphins) வெளியிடுகிறது. கிட்டத்தட்ட ஓர் இயற்கையான ரசாயனம் போன்றது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. சிரிப்பு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இரத்த நாளங்களின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது, சமூக பிணைப்புகளையும் சமூக உணர்வையும் வளர்க்கிறது.
கைதட்டல்களின் நன்மைகள் பொதுவாக பலராலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றாலும், அதற்கும் ஒரு பலன் உண்டு. கைதட்டல் நம் கைகளில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளைத் (Acupressure points) தூண்டுகிறது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து நம்மை எப்போதும் நிதானமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்கிறது.
கண்களை சிமிட்டுவது, இயற்கையாக அடிக்கடி மேற்கொள்ளும் செயலாக இருந்தாலும், அதற்கும் தனி நன்மைகள் இருக்கிறது. இது நம் கண்களை எந்நேரமும் ஈரமாகவும், எரிச்சல் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது எந்த வயதிலும் குறையாத தெளிவான பார்வையைப் பராமரிக்க உதவுகிறது. இதுபோக, கண் சிமிட்டுதல் மூளைக்கு ஒரு தற்காலிக ஓய்வை அளித்து ஒட்டுமொத்தமாக நம் மன கவனத்தை மேம்படுத்துகிறது.
இந்த விசித்திரமான செயல்களுக்கு அப்பால், நம் வாழ்நாள் முழுவதும் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் மேம்படுத்தும் பல நடைமுறைகளும் இருக்கின்றன. உதாரணமாக...
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது மனத் தெளிவு மற்றும் உடலுக்கு சற்று தளர்வை தருகின்றன.
நடனம் அல்லது பாடுவது போன்ற விளையாட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுவது மனநிலையை மேம்படுத்துவதோடு ஒரு வித உடற்பயிற்சியாகவும் இருக்கின்றன.
ஊர் ஊராக சென்று இயற்கை சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் அருவிகள் மற்றும் குளங்களில் குளிப்பது மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்.
மற்றொரு சுவாரஸ்யமான செயல்பாடு புல் மீது வெறுங்காலுடன் நடப்பது, நம் பாதங்களில் உள்ள நரம்பு மண்டலங்களை தூண்டி நம்மை சமநிலையாகவும் தோரணையை (posture) மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த வகையான செயல்களை நமக்கு கிடைக்கும் நேரங்களில் செய்வது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருந்தாலும், அந்த செயல்கள் செய்த பின் உங்களுக்குள் உண்டாகும் புத்துணர்ச்சியானது, உங்களை கவனிப்பவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை தெரிந்துவிக்கும். எனவே, உங்களிடம் இருக்கும் இவ்வகையான செயல்களை மற்றவர் நம்மைக் கவனிக்கிறார்களே என்ற காரணத்திற்காக நிறுத்திவிடாதீர்கள்.