
பெருநகரங்களில் இயற்கையான புல்வெளிகளை காண்பது என்பது அரிதான ஒன்றாக இருக்கும். பெரும்பாலான பூங்காக்கள், தொழில்முறை சார்ந்த விளையாட்டு மைதானங்களில் செயற்கைப் புல்வெளிகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான புல்வெளிகளாக இருந்தால் அவற்றை அடிக்கடி சீரமைப்பு செய்ய வேண்டும். வாடி விடாமல் இருக்க தண்ணீர் ஊற்ற வேண்டும். செயற்கைப் புல்வெளிகளுக்கு இது எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புல்விரிப்புகளை வாங்கி எந்த இடத்தில் வேண்டுமோ அங்குப் பொருத்தினால் போதுமானது. அதே சமயம், செயற்கைப் புல்விரிப்புகளைப் பயன்படுத்துவது சில தீங்குகளை தரவல்லது என்று கருதப்படுகிறது.
செயற்கைப் புல்விரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்:
செயற்கை புல்விரிப்புகளைப் பயன்படுத்துவது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கைப் புல்விரிப்புகளில் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs), ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOCs), அரை ஆவியாகும் கரிம சேர்மங்கள் மற்றும் பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. இதன் காரணமாக, ஆரோக்கியம் பாதிப்படையலாம் எனவும் சில செயற்கைப் புல்விரிப்புகள் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதில் விளையாடும்போது, இரசாயனங்கள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் சுவாசாத்தின் வழியாகவோ அல்லது வாயின் மூலமாகவோ உடலுக்குள் செல்ல நேரிடலாம். இது மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழலில், மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவை அதிகரிக்க பங்கு வகிப்பதாகக் கருதி இந்த செயற்கைப் புல்விரிப்புகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
PAHs போன்ற கேடு விளைவிக்கும் இராசயனங்கள் இல்லாத செயற்கை தரை புல்விரிப்புகளும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
செயற்கைப் புல்விரிப்புகளை பயன்படுத்திய பின் செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:
இதில் விளையாடும்போது, கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் உடனே சோப்பு, தண்ணீரில் கழுவி முதலுதவி செய்து கொள்ள வேண்டும்.
செயற்கைப் புல்விரிப்புகளை பயன்படுத்திய பிறகு, கை, கால்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் அல்லது விளையாடிய உடனே குளிக்க வேண்டும்.
உடுத்திய ஆடைகளில் தூசிகள் இருப்பதுபோல் தெரிந்தால், ஆடைகளை மாற்ற வேண்டியது அவசியம்.
செயற்கைப் புல்விரிப்புகளில் இருந்த எந்தவொரு பொருளையும் சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
மிகவும் வெப்பமான நாட்களில் செயற்கை புல்விரிப்பில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அச்சமயத்தில் அதிக நச்சு வாயுக்கள் வெளியேற வாய்ப்புள்ளது.
செயற்கை புல்விரிப்பில் எப்போதும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
செயற்கை புல்விரிப்புகளில் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.