

மழைக்காலங்களில் ஈரமான துணிகளை உலர்த்துவது சற்று கடினமான காரியம்தான். வீட்டிற்குள் துணியை உலர்த்துவதால் ஈரப்பதம் அதிகமாகி சுவர்கள் சேதம் அடைய வாய்ப்பு உண்டு. மேலும், ஈரப்பதம் அதிகரிப்பதால் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சிக்கு வித்திட்டு தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மழைக்காலங்களில் துணியை உலர்த்துவதற்கான சில எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. கைகளில் துணியை துவைப்பவர்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு துணிகளை கைகளால் பிழிய வேண்டும். இது மிகச் சிறந்த கைப்பயிற்சியாகவும் இருக்கும்.
2. அடுத்து, துவைத்த துணிகளை தண்ணீர் குழாய் மீது அடுக்கி 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். அப்போது துணியை காய போடும்போது காயும் நேரம் குறையும்.
3. சிறிது தொலைவில் ஹேர் டிரையரை வைத்து ஈரமான துணிகளை உலர்த்தலாம்.
4. துணி காயவைக்கும் அறையில் ஈரப்பதத்தை நீக்கி துணிகள் காய்வதற்கு உதவியாக டிஹைமிடிஃபையர் (Dehumidifier) பயன்படுத்தலாம்.
5. அவசியம் தேவைப்படும் அவசரமான ஈரப்பதமான துணிகளை அயர்னிங் செய்து உலர வைக்கலாம். இதனால் சுருக்கங்கள் நீங்கும் என்றாலும் இதை சற்று கவனமுடன் செய்ய வேண்டும்.
6. வீடு முழுவதும் கயிறு கட்டி துணி காய வைப்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையை உண்டாக்கும் என்பதால், துணிகளை காய வைப்பதற்காக கடைகளில் கிடைக்கும் ஸ்டாண்டுகளை பயன்படுத்துவதால் விரைவில் துணிகளை உலர்த்த முடியும்.
7. மழைக்காலங்களில் பெட்ஷீட், ஜீன்ஸ் போன்ற சற்று கனமான மற்றும் அதிக வேலைப்பாடுகள் உள்ள துணிகளை துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
8. மழைக்காலங்களில் வெளியிடங்களுக்குத் தேவைப்படும் அவசியமான துணிகளை மட்டுமே துவைக்க வேண்டும்.
9. வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைக்கும்போது டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்து துவைத்தால் துணிகளில் துர்நாற்றம் வராது.
10. கைகளால் துவைப்பவர்கள் துணியை ஊற வைக்கும்போது டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகரை சேர்த்து ஊற வைத்தால் துணிகள் துர்நாற்றம் வீசாது.
11. பாலியஸ்டர் துணிகள் ஈரப்பதத்துடன் இருந்தால் அதனை உடனே அயர்னிங் செய்யும் முறையை தவிர்த்து விட வேண்டும். பேனுக்கு கீழே உலர விடுவதுதான் பாலியஸ்டர் துணிகளுக்குச் சிறந்தது.
12. மழைக்காலங்களில் சூரிய வெளிச்சம் இல்லாமல் துணிகளை காய வைப்பதால் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க, துணி அலசும் கடைசி தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அலச வேண்டும்.
13. ஈரமான துணிகளை நெருக்கமாகக் காய போடாமல் சற்று இடைவெளி விட்டு உலர்த்துவதால் துணி உலரும் நேரம் குறையும்.
மேற்கூறிய வழிமுறைகளைக் கையாண்டு காய வைப்பதன் மூலம் கண்டிப்பாக ஈரப்பதமான துணிகள் விரைவில் உலர்ந்து விடும்.