
நாம் நமது வீட்டை எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், சில சமயம் ஏதோ ஒரு காரணத்தால் விரும்பத்தகாத மணத்தை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும். அது சுற்றுப்புற காற்று மாசுபாடுகள் அல்லது நமது கவனக் குறைவான அசுத்தங்களாலும் இருக்கலாம்.
பொதுவாக, நம் வீட்டில் எப்போதும் சுகந்த நறுமணம் வீச வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். இதற்காக கடைகளில் விற்கப்படும் புத்துணர்ச்சி திரவங்கள் (ரூம் ஃபிரஷர்) மற்றும் ஸ்பிரேக்கள் அதிக விலை என்பதுடன், நீண்ட நேரம் பயனளிக்காததால், ‘வீட்டிலேயே எளிய நறுமண ஊக்கிகளை நாமே தயார் செய்தால் என்ன’ என்று யோசிப்போம். வீட்டை வாசமாக வைத்திருக்கும் சில நறுமண ஊக்கிகள் நாமே தயார் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும். (எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.
சமையலுக்கு மணம் தரும் சில மசாலாப் பொருட்கள் அறையிலும் நறுமணம் வீசச் செய்யும். எப்படி? ஒரு பாத்திரத்தில் மசாலாப் பொருட்களான இலவங்கப்பட்டை குச்சிகள், கிராம்புகள் மற்றும் உலர் ஆரஞ்சு துண்டுகளை சேகரித்து போட்டு அவை மூழ்குமளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போதே அறை முழுவதும் மசாலாவின் நறுமணம் வீடு முழுவதும் பரவும்.
உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமண எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது. அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.
ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.
ஒரு கண்ணாடி பவுலில் எலுமிச்சைப் பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி அதில் தேவையான நறுமண எண்ணெய் கலந்து அறை மூலையில் வைக்கலாம். அது மட்டுமின்றி, மனதை மயக்கும் மூலிகை சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகளையும் உபயோகிக்கலாம்.
எந்த வகையான நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்?
லாவெண்டர்: இது அமைதியான நறுமணத்தைத் தந்து உறக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
லெமன்கிராஸ்: இது மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் வாசனையை அளித்து, உற்சாகமான மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
மல்லிகை: இது மனம் கவரும் இனிய வாசனையை அளித்து, அறையை கவர்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது.
என்ன செய்தால் துர்நாற்றம் அகலும்?
உடுத்திய அழுக்கு துணிகளை அவ்வப்போது துவைக்கலாம், ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். அறையில் உள்ள ஒட்டடை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஆனால், இயற்கையான முறையில் அறையை புத்துணர்ச்சியூட்டும்போது, குடும்ப உறுப்பினர்களின் ஒவ்வாமை நிலைமைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சில அத்தியாவசிய எண்ணெய்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கை அவசியம். அதேபோல், சிறு குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் அவர்கள் கையில் ஸ்பிரே எட்டாத உயரத்தில் வைக்கவும். சில சமயத்தில் அவர்கள் அதை தண்ணீர் என்று குடித்து விடும் ஆபத்தும் உண்டு.