
வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து விட்டது. விட்டு விட்டு பெய்யும் மழை மனதை வருடினாலும், அவ்வப்போது சில சங்கடங்களும் நேரத்தான் செய்கின்றன. அந்த வகையில் மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயை தடுக்க வீட்டில் சுத்தமான காற்றோட்டத்திற்காக ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
* வீட்டிற்குள் கிருமிகள் பரவாமல் தடுக்க வீட்டை சுத்தமாக வைத்திருப்பதோடு, ஈரமான துணிகளை உடனடியாக உலர்த்த வேண்டும்.
* மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் எடுப்பது குறைவாக இருந்தாலும் உடலில் நீரேற்றத்திற்காக தினமும் 3 லிட்டர் தண்ணீரை பருக வேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களான ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பேரிக்காய், நாவல் பழம் போன்ற பழங்களை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
* காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்ற நோய் தொற்றுக்கள் வராமல் இருக்க உணவுப் பழக்க வழக்கங்களிலும், சுகாதாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கு அதிகமான காரணங்கள் இருப்பதால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
* மழைக்காலங்களில் ஜீரண சக்தி குறைந்துவிடும் என்பதால் வறுத்த உணவுகளையும், பொறித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
* மழைக்காலங்களில் மூலிகை டீ, இஞ்சி கலந்த நீர், சூப் வகைகள், மஞ்சள் சேர்த்த பால், எலுமிச்சை கலந்த வெந்நீர் போன்ற வீட்டிலேயே செய்யப்பட்ட திரவ பானங்கள் குடிப்பது நல்லது.
* மழைக்காலமும், குளிர்காலமும் வறண்ட சருமத்திற்கு எதிரி என்பதால் குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு குளிப்பது வறண்ட சருமத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
* மழைக்காலங்களில் உடல் முழுவதும் மூடியுள்ளபடி உடைகளை அணிவது தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.
* மழைக்காலங்களில் முடிந்தவரை புதிதாக சமைத்த சூடான உணவுகளை உண்பது வயிறு உபாதைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.
* நீண்ட நேரம் கணினி, மொபைல் பார்ப்பது கண்களை வறண்டு போகச் செய்யும் என்பதால் இதற்கான நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மழைக்காலங்களில் குளிர்ந்த தண்ணீரை குடிப்பதை விட சிறிது சீரகம் சேர்த்து தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிப்பதே சிறந்தது.
* பருவமழை காலத்தில், மாறுபட்ட வெப்பநிலை, ஈரப்பதம் காரணமாக, பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் இருக்கும் என்பதால் வாங்கி வந்தவுடன் லேசான வெந்நீரில் கழுவி சமைப்பது நல்லது.
மழைக்காலங்களில் முறையான சரிவிகித உணவுகளை உண்பது, வெளி உணவுகளைத் தவிர்ப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஆகியவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.