
குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் மாலை வேளைகளில் அவர்களோடு சேர்ந்து வீட்டில் இருக்கும் பெரியவர்களாகிய நாம் நேரத்தை செலவிட்டால் நமக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். குழந்தைகளுக்கும் நம்முடன் நேரத்தை பகிர்ந்து கொண்ட திருப்தி கிடைக்கும். மேலும், குழந்தைகள் புதியனவற்றையும் அதிகமாகக் கற்றுக் கொள்வார்கள். இதனால் குழந்தைகள் செல்போன் பார்ப்பது, அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பது, நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது போன்றவை குறைந்து, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுக்கு மாறுவார்கள். இதனால் அவர்களின் உடல் நலத்தோடு, மன நலமும் மேம்படும்.
இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்களால் பசிக்கும்போது அவர்களாகவே சாப்பிட விரும்புவார்கள். மேலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடும்போது அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடலாம். பழைய நினைவுகளை மீட்டு எடுத்து அனுபவக் குறிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி வழங்கலாம். சாப்பிட்டு முடித்ததும் அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், அன்றைய நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறுவதற்கும் அந்த நேரத்தை உபயோகமாக்கிக் கொள்ளலாம்.
படங்களுக்கு வண்ணம் தீட்டுவது என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் தத்ரூபமாக ஓவியம் வரைவதைப் பார்த்து நாம் மோட்டிவேட் செய்யலாம். கைவினைப் பொருட்கள் தயார் செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தினமும் சிறிது நேரம் ஒதுக்கினாலே போதும். அதன் மூலம் அந்தக் கலைகள் மீதான ஈடுபாட்டை குழந்தைகள் மனதில் அதிகப்படுத்த முடியும். இதனால் அவர்களின் தனித்திறமை வளரும்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது மிகவும் நல்லது. அவர்களுடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பது, காய்ந்த பாத்திரங்களை துடைத்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் மேம்படும். இக்கட்டான பிரச்னைகளை எதிர்கொண்டால் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான திறன்களை இதுபோன்ற செயல்கள் வளர்க்கும்.
பள்ளிப் பருவம் என்பது குழந்தைகள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வயது. ஆதலால், பெரிய பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாங்கி நாமும் படித்து, அவர்களுக்கும் சொல்லித் தரலாம். இதனால் மொழி அறிவு மேம்படும். பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொண்ட திருப்தியும், பல்வேறு இடங்களுக்கு மாற்றலில் செல்லும்பொழுது அனைவரிடமும் பழகும் தன்மையும் அதிகரிக்கும். இதனால் குழந்தைகளுக்கு மொழி ஒரு பிரச்னையாக எங்கும் இருக்காது.
கூட்டமாக சேர்ந்து குழந்தைகள் விளையாடும் பொழுது அவர்களுக்கு பல்லாங்குழி, செஸ், கேரம் போர்டு, பம்பரம் விடுவது, வட்டு எறிதல், டென்னிஸ், பூங்காக்களில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற விளையாட்டுகளை விளையாடச் சொல்லித் தரலாம். இதனால் பாரம்பரிய விளையாட்டுகளைத் தெரிந்துகொண்ட ஆனந்தம் நிலவும். அதோடு, வெளி உலகத் தொடர்பும் நீடிக்கும்.
இதுபோல், குழந்தைகளுடன் குழந்தையாக அவர்களின் வழிக்குச் சென்றால்தான் வீணான பொழுதுபோக்குகளில் இருந்து அவர்களை கட்டுப்படுத்தி, அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் முடியும்.