
வீட்டில் சரிகை, காட்டன் மற்றும் பட்டுப்புடவை, வேஷ்டி இஸ்திரி செய்யும்போது, சரிகைப் பகுதியை ஒரு நியூஸ் பேப்பர் விரித்து செய்யவும். இதனால் ஏற்படும் 'ஷாக்' தடுக்கப்படும். ஏனென்றால் இரும்பு சரிகையில் இஸ்திரி செய்யும்போது ஷாக் அடிக்கும் வாய்ப்புண்டு.
கை விரல்களில் சிறு துண்டு கண்ணாடி குத்தி எடுக்கவராவிட்டால், சிறிது பெவிக்கால் பசையை லேசாகத் தடவி காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன் மெதுவாக உரித்தெடுக்கவும். அதனுடன் கண்ணாடித் துண்டும் ஒட்டிக்கொண்டுவிடும்.
ரோஜாச் செடிகளுக்கு வாழைப்பழத்தோலை நறுக்கிப்போட்டால் செடியும் நன்றாக வளரும், செழிப்பான பூக்களும் பூக்கும்.
ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு வேண்டிய உப்பின் அளவு மூன்று கிராமுக்கும் குறைவாக இருக்கவேண்டும். அதிக உப்பு ரத்தக் கொதிப்புக்கு காரணியாக அமைந்துவிடுகிறது. சிறிது காலம் பழகினால் குறைந்த உப்பு, காரம் நமக்கும் பிடித்துவிடும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய், வாழைப் பூ, பீன்ஸ், வாழைத்தண்டு கோஸ் சாப்பிடலாம். கிழங்கு வகைகள் குறைக்கப்பட வேண்டும்.
மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள், வெறும் தரையிலோ, பளிங்குக்கல் தரையிலோ படுத்துத்தூங்கக் கூடாது.
சிலர் உச்சி முதல் உள்ளங்கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவார்கள். அது மிகவும் தவறு. எப்பொழுதுமே, முகத்தை மூடியபடி உறங்கக் கூடாது. அப்படி உறங்கினால், சரியானபடி ஆக்ஸிஜன் கிடைக்காது.
கைகளால் அழுத்தி கசக்கி துணி துவைப்பதால், துணிகள் பளிச்சிடுவதோடு, உள்ளங்கைகளுக்கும் அக்குபிரஷர் செய்த பலன் கிடைக்கும். இதனால் பல நோய்கள், வலிகள் நீங்கி உடல்நலம் சீராக இருக்கும்.
வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால், ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டுச் சாப்பிட்டால் நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது.
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய்ப் பாலில் தேனை விட்டு சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
காதினுள் எறும்பு புகுந்துவிட்டால் 'அய்யோ குய்யோ' என்று திக்குமுக்காட வேண்டாம். காதினுள் டார்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சுங்கள். எறும்பு தானாக வெளிவந்துவிடும்.
காலையிலும், இரவு வேளையிலும் பக்கெட்டில் சற்று சூடான நீர்விட்டு கால் பாதம் மூழ்குவது போல் தினமும் பத்து நிமிடம் நின்று பாருங்கள். கால் வலியா? போயே போச்சு என்று சொல்வீர்கள்!