
வீடுகளில் நாம் பொதுவாக குளியலறை கழிவறைகளை சுத்தம் செய்வோம். ஆனால் குளியலறையில் இருக்கும் பக்கெட்கள் மற்றும் குவளைகளை (மக்) பெரும்பாலும் சுத்தம் செய்வதில்லை. நீண்ட காலம் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்பொழுது அவை தொட்டாலே வழுக்கும் அளவுக்கு ஆகிவிடும். பக்கெட்களின் அடிப்பகுதி பாசி மற்றும் கருமை படிந்து காணப்படும். உப்பு தண்ணீர் என்றால் கேட்கவே வேண்டாம். கறை படிந்து மஞ்சள் நிறத்தில் பார்க்கவே பாவமாக இருக்கும். இந்த கறைகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாளும் குளித்ததும் பக்கெட் மற்றும் குவளைகளை கையுடன் தேய்த்து வெயிலில் சிறிது நேரம் வைத்து எடுக்க பாசி பிடிக்காது; கறையும் ஏற்படாது.
வாளிகளையும் மக்குகளையும் உபயோகித்ததும் தரையில் வைக்காமல் தேய்த்து கவிழ்த்திவிட அடிப்பகுதியில் அழுக்கு சேராது.
நீண்ட நாட்களாக உபயோகத்தில் உள்ள பக்கெட்டில் தண்ணீர் இருக்கும் உப்பு கறையாக படிந்துவிடும். எவ்வளவுதான் தேய்த்தாலும் முழுவதும் நீக்க முடியாது. அதற்கு தோல் அலர்ஜியை ஏற்படுத்தும் ஆசிட் போன்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிய வழியில் கறைகளை போக்கிவிட முடியும்.
பிளாஸ்டிக் பொருட்களில் படிந்துள்ள உப்பு கறையின் மீது புளித்த இட்லி மாவு கொஞ்சம் தடவி 15 நிமிடங்கள் காயவிடவும். பின்பு ஸ்கிரப்பர் கொண்டு தேய்க்க சுலபமாக உப்பு கரை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.
அதிகப்படியான உப்பு கறையை போக்க புளித்த மாவுடன் பேக்கிங் சோடா சிறிது கலந்து தடவி ஊறவைத்து தேய்க்க பளிச்சென்று ஆகிவிடும்.
கைபடாமல் ஸ்டீல் பிரஷ் அல்லது பிளாஸ்டிக் பிரஷ் கொண்டு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சைசாறு கலந்த கலவையை சிறிது தண்ணீர் தெளித்து தடவி வைக்கவும். சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்துவிட கறை, அழுக்கு, வழுவழுப்பு, பாசி போன்றவை போய்விடும்.
கல் உப்பு + எலுமிச்சை: எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் உப்பை முக்கி எடுத்து பக்கெட் மற்றும் குவளைகளில் நன்றாக தேய்க்கவும். பிறகு சிறிது நேரம் ஊறவிட்டு கழுவி விட பளிச்சென்று இருக்கும்.
டிஷ் வாஷ் லிக்விட்: வெதுவெதுப்பான நீரில் சிறிது பாத்திரங்களை தேய்க்க உபயோகிக்கும் திரவத்தை விட்டு கலந்து வாளியின் உள்புறம் மற்றும் வெளிப்பகுதியில் நன்கு தேய்த்து கழுவலாம்.
வெள்ளை வினிகர் ஸ்ப்ரே: ஒரு கப் வெள்ளை வினிகரை தண்ணீருடன் கலந்து பக்கெட் மற்றும் குவளையின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தேய்த்து கழுவிவிட பாசி மற்றும் மஞ்சள் கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.
வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் விட்டு வைத்து கறை படிந்த இடங்களில் ஸ்ப்ரே செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து தேய்த்துக் கழுவ கறைகள் ஓடிவிடும். கடினமான கறைகளாக இருந்தால் சில மணி நேரம் கூடுதலாக ஊறவைத்து கழுவவும்.