
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளுக்கு கவனச் சிதறல்கள் அதிகம் ஏற்படுகின்றன. ஆதலால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. படிப்பின் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் சில ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
புதிய வழிகள்: குழந்தைகளுக்கு புத்தகங்களை பார்த்துப் படிக்க ஆர்வம் இல்லாதபோது, புதிய வழிகளில் அதாவது வீடுகளில் இருக்கும் டெக்னாலஜி சாதனங்கள் வாயிலாக கல்வியை அறிமுகப்படுத்தினால், நிச்சயம் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தல்: குழந்தை கணக்குப் பாடத்தைப் படிக்க முடியாது எனக் கூறினால், அதை பாடமாகக் கற்றுக் கொடுக்காமல் விளையாட்டாகக் கற்றுக் கொடுப்பதற்கு பல செயலிகள் (app) இப்போது வந்துள்ளன. அதைப் பயன்படுத்தி குழந்தைகளை படிப்பை நோக்கி அழைத்து வரலாம். இலவசமான வீடியோக்களும் இதற்கு உண்டு.
படிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: நாள் முழுக்க ஓயாமல் டிவி ஓடுவதும், செல்போன்களில் குழந்தைகள் கவனம் செலுத்துவதைக் கண்டிக்காமல் இருப்பதும் குழந்தைகள் படிப்பிலிருந்து விலகவே வாய்ப்பளிக்கும். வீட்டுப்பாடம் எழுத மொபைலை கையில் கொடுத்தால், அது தவிர அவர்கள் மற்ற எதையும் பார்க்காத வகையில் கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் செல்போன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இடைவெளி விட வேண்டும்: ஒரே இடத்தில் அமர்ந்து குழந்தைகளைப் படிக்கச் சொல்லாமல் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு இடைவேளை கொடுப்பது நல்லது. இதனால் அவர்கள் படிக்கும்போது சோர்வடையாமல் சுறுசுறுப்பாக கற்றுக் கொள்வார்கள். படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.
படிப்பதற்கென தனி நேரம்: படிப்பதற்கு என தனி நேரத்தை பழக்கப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் படிப்பதை உறுதி செய்யுங்கள். அப்படிப் பழகுவதால் படிப்பு அவர்கள் வாழ்க்கையின் அங்கமாகிவிடும். தொடர்ச்சியாக இதை செய்வதால் நீங்கள் சொல்லாமலே படிப்பதை விருப்பத்துடன் பழகிக் கொள்வார்கள்.
இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்: அவர்களுக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து ஊக்குவிக்கும்போது அதை அடையும்போது அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை வரும். பிடிக்காத பாடத்தை படிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். உதாரணமாக, அதை நன்றாகப் படித்தால் பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள்.
பரிசு வழங்குங்கள்: தேர்வு நேரங்களில் குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறிய பரிசுகளை வழங்குங்கள். பரிசுகள் அவர்களின் அத்தியாவசிய தேவையை பொறுத்ததாக இருந்தால் நல்லது. இதனால் அவர்களுக்கு மூளையில் டோபமைன் சுரந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், அந்த விஷயங்களைச் செய்யத் தூண்டும்.
படிப்பதற்கென்று தனி இடம்: குழந்தைகள் படிப்பதற்கென தனி இடத்தை ஏற்பாடு செய்வது நல்லது. அவர்கள் கவனம் சிதறாத வகையில் அந்த இடம் இருக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் இடத்தில் படுப்பதற்கு வசதியான படுக்கைகள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். படிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அந்த சுற்றுப்புறம் அமைக்கப்பட வேண்டும். இந்த இடத்தை அவர்களுக்குப் பிடித்ததைப் போலவே மாற்றியமைத்துக் கொடுங்கள். அப்படி இருந்தால் ஆர்வத்துடன் அமர்ந்து மணிக்கணக்காக படிப்பார்கள்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக வலம் வருவார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.