
ஒரு மனிதனின் வாழ்வில் 50 வயது என்பது பல்வேறு அனுபவங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கும் பருவமாகும். அதேபோல், மாறுபட்ட மனித மனங்கள் பலவற்றையும் அவர்களால் படித்து அறிந்திருக்க முடியும். 50 வயதுக்கு மேற்பட்ட பலரது மனங்களிலும் அமைதி குறைந்து, ‘உலகம் இவ்வளவுதானா?’ என எண்ணும் எண்ணமும் உருவாகத் தொடங்கும். இதுபோன்ற எண்ணங்களை மாற்றி, அவர்களது மனம் பெருமிதத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்க வைக்கும் தாரக மந்திரங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
* உங்களை நிறைந்த மனதோடு வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
* நீங்கள் எதைச் செய்தாலும் அதில் குறையைக் கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் சிலர் இருப்பர். அதைப் பெரிது படுத்த வேண்டாமே.
* உங்களது லட்சியம் எதுவோ, அதை நோக்கி மட்டும் உங்கள் பயணம் அமைவதாக இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜன்மங்கள், தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி குணம் இருக்கும். அந்த வழியில்தான் அவர்களின் பயணம் இருக்கும். அவர்களை ஒழுங்குபடுத்துகிறேன் என்று வேதனைகளை சுமக்க வேண்டாம். அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தைப் பெற்ற பிறகு திரும்பி வருவார்கள். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா என்பதை அவர்களாகவே உணர்ந்தால்தான் அவர்களுக்கு உண்மை தெரியும். அந்த உண்மையை நீங்கள் முன்கூட்டியே சொன்னால் அவர்களுக்கு அது பிடிக்காது. இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.
* உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், பேரன், பேத்திகளாக இருந்தாலும் அவர்களின் பிறவிக் குணம் மாறாது. அவர்கள் எதைச் செய்ய வந்தார்களோ, அதைச் செய்வதுதானே அவர்களின் விதி. இதை உங்களால் மாற்றி அமைக்க முடியாது. ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள். பந்த பாசத்தில் விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டாம். அவர்களுக்கு அனுபவம்தான் குரு.
* செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி ஒருவர் உங்களிடம் அன்பு காட்டினாலும் பிறகு தான் யார் என்பதை வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தோடு இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
* ‘எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன். ஏமாற்றி விட்டார்கள்’ என்று புலம்ப வேண்டாம். இயற்கையின் சுபாவம் போல், மனித இயற்கை சுபாவங்களும் சில நேரங்களில் அதுவாகவே வெளிப்பட்டு விடும்.
* நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படியே வாழப் பழகிக்கொள்ளுங்கள். அதில் நன்மை, தீமை எது வந்தாலும் உங்களைத் திருத்திக் கொள்ளலாம்.
* இன்பமோ, துன்பமோ அதை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம்.
* மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட, இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வது சிறப்பு.
* தைரியமும் தன்னம்பிக்கையும்தான் ஒரு மனிதனை உலகில் வாழ வைக்கும். இந்தப் பக்குவத்தை நீங்கள் அடைந்து விட்டால் எந்தத் துன்பமும் உங்களை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.