
பெண் வீட்டாரானாலும் சரி, மாப்பிள்ளை வீட்டாரானாலும் சரி, அழைப்பிதழ்களை அடிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளலாம்.
முக்கியமான தகவல்கள்:
அழைப்பிதழ்கள் அழகாகவும், முக்கியமான தகவல்களை தருவதாகவும் இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழில் யார் யாருக்கு, எந்த தேதியில் மற்றும் எந்த இடத்தில் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்க வேண்டியது அவசியம். முடிந்தால் அந்த பகுதியில் இருக்கும் வசதியான பயணத்திற்கான பஸ் ரூட்கள், லேண்ட்மார்க் ஆகியவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.
வார்த்தைகளில் கவனம்:
திருமணம் போன்ற பாரம்பரிய விழாக்களுக்கு முறையான மொழியை பயன்படுத்துவது நல்லது. ஆக்கபூர்வமான வார்த்தைகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம். தம்பதிகளின் பெயர்கள், விழா நடைபெறும் இடம், நேரம், முகவரி ஆகியவை தெளிவாக இருப்பது அவசியம்.
அழகான வடிவமைப்பு:
அழைப்பிதழின் வார்த்தைகளும், வடிவமைப்பும் சிறப்பாக இருப்பது நலம். முக்கியமான நாளிற்கான அழைப்பிதழில் வரும் விருந்தினர்களுக்கு அத்தியாவசிய விவரங்களை தெளிவாக வடிப்பது நல்லது. குறிப்பாக முழுமையாக சரி பார்த்து, எழுத்துப் பிழைகளை சரி செய்து ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதையும் முடிந்தால் வேறு ஒருவரை வைத்து மதிப்பாய்வு செய்வதும் நல்லது.
முன்கூட்டியே அனுப்புதல்:
திருமணம், பூணூல், காது குத்து போன்ற எந்த விசேஷங்களுக்கும் அழைப்பிதழ்களை விசேஷங்களுக்கு சில வாரங்களுக்கு முன்பே அஞ்சல் செய்வதும், நேரில் சென்று கொடுக்க வேண்டியவர்களுக்கு ஃபோன் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து நேரில் சென்று அழைப்பதும் கடைசி நேர டென்ஷனை தவிர்க்க உதவும்.
ஆடைக் குறியீடு:
திருமணத்துக்கு ஒரு குறிப்பிட்ட ஆடைக் குறியீடு இருந்தால் அதை அழைப்பிதழில் தெரிவிக்கலாம். திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே RSVP காலக்கெடுவை குறிப்பிட்டு RSVP ஆன்லைன் இணைப்பை சேர்க்கலாம்.
முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது:
வார்த்தை ஜாலங்களை தவிர்க்கலாம். பத்திரிகையில் நிறைய இடம் இருக்கிறது என்பதற்காக அதிகமாக எழுதி நிரப்ப வேண்டாம்.
உறைகளில் அழைக்க வேண்டிய விருந்தினர்களின் பெயர்களை முழுமையாகவும், தெளிவாகவும் குறிப்பிடவும்.
ஃபோனில் அழைக்கும்பொழுது உறவு முறையைக் கூறி அழைத்து மரியாதை செய்ய மறக்கவேண்டாம். திருமணம் நடக்கும் இடம் அனைவருக்கும் தெரியும் என்று எண்ணாமல் தெளிவான பஸ் ரூட்டுகள் அல்லது ஆன்லைன் வரைபடத்திற்கான இணைப்பை சேர்க்க உபயோகமாக இருக்கும்.