
தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டில் பலகாரங்களும் பட்டாசுகளும் நிறைந்திருக்கும்; மகிழ்ச்சியும் கூடவே இருக்கும். அந்த அழகான நேரத்தில் நமது உடைமைக்கும் உயிருக்கும் அவசியமான பாதுகாப்பு விஷயங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தீபாவளி பலகாரங்கள் செய்து முடித்த பின் மீதமுள்ள எண்ணெய் மற்றும் சூடான பாத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் ஓடி ஆடும் நேரத்தில் அவற்றை அணுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. பட்டாசு வெடிக்கும்போது சிறிய குழந்தைகளுடன் பெரியவர்கள் எப்போதும் உடன் இருக்க வேண்டும்.
3. குழந்கைகள் பட்டாசு வெடிக்கும் இடம் பாதுகாப்பானதாகவும் கண்காணிக்கப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.
4. பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் நீளமான அல்லது தொங்கும் வகை ஆடைகளை அணியக் கூடாது. அவர்களுக்கு நெருக்கமான, சுருங்கிய உடைகள் அணிவிக்கவும்.
5. பெண்கள் சேலை மற்றும் சுடிதார் சால்களை நன்கு முடிச்சிட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செல்ல வேண்டும்.
6. குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் பகுதிகளிலிருந்து தள்ளி நிறுத்துங்கள்; மேலும், பெரியவர்கள் கூடவே அவர்களுக்குப் பாதுகாப்பாக இருங்கள்.
7. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாச நோய் உள்ளவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் வெளியில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
8. பட்டாசு வெடிச் சத்தத்தைக் குறைக்க காதுகளில் சிறு துண்டு பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது.
9. ராக்கெட் போன்ற வெடிகள் வெடிக்கும்பொழுது பரபரப்பில்லாத வெற்று இடங்களிலும் தூரமாகவும் வெடிக்க வேண்டும். ராக்கெட் பறக்கும்போது அருகில் நின்று கொண்டிருப்பதையும், கையில் பட்டாசை பிடித்து விடுவதையும் தவிர்க்க வேண்டும்.
10. வெடிக்கப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள், ராக்கெட்டுகள், மத்தாப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். இது ராக்கெட்கள் தவறான திசையில் பறக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.
11. பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பது நல்லது. அவசரத் தேவைக்கு இது உதவும்.
12. பட்டாசு வெடித்த பின் குழந்தைகளும் பெரியவர்களும் கை, கால்களை கிருமி நாசினி கொண்டு நன்றாகக் கழுவி விட்டு வீட்டுக்குள் வர வேண்டும்.
13. மத்தாப்புகளை அணைக்கும்போது அதன் கம்பிகளை சிறு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு, அதில் போட்டு அணைக்க வேண்டும்.
14. இறுதியாக, மத்தாப்புக் கம்பிகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.
பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.