ஒரு பிரபல நிறுவனத்தின் மனித நலப் பிரிவு அலுவலர், தனது நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்களின் நலனுக்காக கூறிய அறிவுரைகளை இந்தப் பதிவில் காண்போம்.
“வெளியே எங்கும் தனியாகப் பயணிக்காதீர்கள். எங்கே சென்றாலும் உங்கள் மனைவியுடன் அல்லது யாரேனும் ஒருவர் துணையுடன் செல்லுங்கள். அதிக வாகன போக்குவரத்து மற்றும் நெரிசலான நேரத்தில் வெளியே கிளம்பாதீர்கள். எப்போது வெளியே கிளம்பி செல்வதாக இருந்தாலும் ஏதேனும் ஒரு உங்கள் அடையாள அட்டையுடன் (ஆதார், ரேஷன் கார்டு ), தகவல் தொடர்பு கொள்ள உதவும் மொபைல் போன் நம்பருடன் வெளியே கிளம்புங்கள்.
உங்கள் வயதிற்கு ஏற்ற, உங்களால் உண்ண முடிந்த உணவுகளை நிதானமாக ரசித்து உண்ணுங்கள். சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் வேண்டாம். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்களை முற்றிலும் தவிருங்கள். குளிக்க செல்லும்போதும், கழிவறைக்குச் செல்லும்போதும் மிகவும் கவனமாக இருங்கள்.
உங்கள் உடல் ஆரோக்கியம் காக்க உடற்பயிற்சி அவசியம்தான். ஆனால், அதையும் அளவாக செய்யுங்கள். அது நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் எதுவாக இருந்தாலும் சரி அளவுக்கு அதிகமாக செய்யாதீர்கள்.
பொழுதுபோக்குவதற்காக அதிக நேரம் வாசித்தல், டிவி பார்த்தல், மொபைல் போன் பார்த்துக்கொண்டே இருத்தல் போன்றவற்றைத் தவிருங்கள். இவற்றையெல்லாம் அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்த மட்டும் பகலில் தூங்காதீர்கள்.
உங்கள் உடல்நிலை ஆரோக்கியம் கருதி உரிய நேரத்தில் மருத்துவர்களை சந்தித்து, அவர்கள் தரும் மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்தில், சரியான அளவு தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். அளவிற்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். முடிந்த மட்டும் உணவுகள் மூலம் சரி செய்ய முயலுங்கள்.
உங்கள் சொத்து விஷயங்களை வெளி நபர்களிடம் விவாதிக்காதீர்கள். உங்கள் சாதனைகளை பெரிதுபடுத்தி எப்போதும் வெளியே பேசாதீர்கள். கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். எப்போதும் ரிலாக்ஸாக, பாசிடிவ்வாக இருங்கள்.
பணி ஓய்வு காலத்தில் உங்கள் கடமைகள் அனைத்தும் முடிந்த பின் ஒரு நீண்ட பயணம் உங்கள் மனைவியுடன் செல்லுங்கள். அதுவும் அதிகக் கூட்டம் சேரும் இடமாக இல்லாததாகப் பார்த்து செல்லுங்கள்.
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். தேவையில்லாமல் உங்கள் குழந்தைகள் மற்றும் இளைய சமூகத்தினர்களுக்கு ஆலோசனைகள் வழங்காதீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களிடம் ஒரு இடைவெளியை பராமரியுங்கள். உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் அடுத்தவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
உங்கள் மனைவியுடன் ஆலோசித்து உங்கள் சொத்துகளை பற்றிய உயில் தயார் செய்யுங்கள். எப்போதும் உங்கள் பணி மூப்பு பணத்தை முழுவதும் உங்கள் பிள்ளைகளிடம் கொடுக்காதீர்கள்.
முடிந்தால் முதியோர் நட்பு வட்டத்தில் இணைந்து செயலாற்றுங்கள். சம்பாதித்தது வரை போதும். மேலும், அதிக அளவில் சம்பாதிக்க ஆசைப்படாதீர்கள். அரசியல் விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். பூங்கா போன்ற இடங்கள் சென்றால் அங்கு இருக்கும் மலர்களைப் பறிக்காதீர்கள்.
உங்கள் உடல் நிலை பற்றியே எந்நேரமும் நினைக்காதீர்கள். உங்கள் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அவர்தான் உங்களது முதல் ஆதரவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் ஈடுபடுங்கள், அதுவும் அளவோடு.
வாழ்வில் எந்த வயதில் மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ரிடையர்மென்ட்க்கு பிறகு வரும் 65 முதல் 75 வயதில்தான்.மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ்க்கையை ரிலாக்ஸாக ரசித்து வாழுங்கள்.”