பொதுவெளியில் மனிதர்கள் நுணுக்கமான சமூகத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பிறர் முகம் சுளிக்கும்வண்ணம் ஒருவரது நடவடிக்கைகள் மற்றும் பேச்சு, அவரை மோசமான சமூகத்திறன் கொண்ட நபராக முத்திரை குத்தி விடும். பொதுவெளியில் ஒரு நபர் வெளிப்படுத்தக் கூடாத மோசமான சமூகத்திறன்கள் எவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தனிப்பட்ட எல்லைகளை மீறுதல்: ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உண்டு. இதை அறியாமல் அல்லது புரிந்துகொள்ளாமல் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தனிப்பட்ட எல்லையைத் தாண்டும்போது அது பிறரை முகம் சுளிக்க வைக்கும். தேவையில்லாத கேள்விகள் கேட்டு அவரது மிக பர்சனலான விஷயங்களில் தலையிட்டு எல்லைகளை மீறும்போது அந்த நபர் பிறரால் அநாகரிமான நபராகக் கருதப்படுவார்.
ஏகபோக உரையாடல்கள்: மோசமான சமூகத்திறன் கொண்ட ஒருவர் பிறர் பேசுவதைக் கேட்காமல் அல்லது அவரைப் பேச விடாமல் தடுப்பது, புறக்கணிப்பது போன்றவற்றை செய்து உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். எதிரில் இருப்பவர்களின் எதிர்வினைகள் அல்லது ஈடுபாடு பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தங்களது ஆர்வங்கள் அல்லது அனுபவங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பொருத்தமற்ற முகபாவனைகள், உடல்மொழி: சமூகத் தொடர்பு என்பது வெறும் பேச்சு மட்டுமல்லாமல், சைகைகள், முகபாவம், உடல் மொழி, கண் தொடர்பு ஆகியவற்றையும் குறிக்கும். மோசமான சமூகத்திறன்களைக் கொண்ட ஒரு நபர் கண் தொடர்பைப் புறக்கணிக்கலாம். மோசமான கண் தொடர்பைப் பேணலாம். புன்னகைக்கத் தவறலாம். பொருத்தமற்ற முகபாவனைகளுடன் பதிலளிக்கலாம்.
பிறருக்கு மிக அருகில் நின்று கொண்டு அல்லது வெகு தொலைவில் நின்று பேசி, அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். தனது பேச்சு பிறரைக் காயப்படுத்துகிறது அல்லது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் உடல் மொழி, முகபாவனைகள் மூலமாக வெளிப்படுத்தும்போது புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பொருத்தமற்ற விவாதத் தலைப்புகள்: பொதுவெளியில் முக்கியமான அல்லது ஆழமான தனிப்பட்ட தலைப்புகளில் விவாதிப்பது பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பிறருடைய உடல்நலப் பிரச்னைகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கேட்பது அநாகரிகம் என்பதை அறிந்துகொள்ளாமல் சமூக எல்லைகளை மீறும்போது அவர் பிறரால் வெறுக்கப்படுவார்.
அதிகப்படியான சுய விளம்பரம்: பலர் கூடியுள்ள இடத்தில் ஒருவர் தன்னுடைய சாதனைகளைப் பற்றியே சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதும் அதைப்பற்றி மட்டுமே பேசுவதும் முகச்சுழிப்பை ஏற்படுத்தும். தங்களது அனுபவங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி பிறருடைய கருத்துக்களை, அனுபவங்களை வெளிப்படுத்த விடாமல் தடுப்பது போன்ற செயல்கள் பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பொருத்தமற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்: மோசமான சமூகத்திறன்களை கொண்டவர்கள் தீவிரமான, சீரியஸான விஷயங்களைப் பேசி, பற்றி பிறர் பேசிக் கொண்டிருக்கும்போது பொருத்தமில்லாமல் வாய்விட்டு சிரிப்பது, மகிழ்ச்சியான உரையாடலின்போது முகத்தை உம் என்று வைத்துக்கொள்வது, மந்தமாக இருப்பது போன்ற சூழலுக்குப் பொருந்தாத வகையில் நடந்து கொள்வார்கள்.
பொருத்தமற்ற சத்தத்தில் பேசுதல்: மோசமான சமூகத்திறன் கொண்டவர்கள் பேசும் அளவை சரியாகப் பின்பற்ற மாட்டார்கள். மிகவும் சத்தமாகப் பேசுவது, பிறரின் தேவையற்ற கவனத்தை ஈர்க்கும். அதேசமயம் பிறர் கேட்காத வகையில் மிக மிக மெதுவான குரலில் பேசுவதும் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஒருவரை புதிதாகப் பார்க்கும்போது தகவல்களை அதிகமாகப் பகிர்வது அல்லது தனிப்பட்ட விவரங்களை அதிகமாகக் கேட்டு குடைவது போன்றவையும் மோசமான சமூகத்திறன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.