
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 27-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலரும் தங்களையும், தங்களை சார்ந்து இருப்பவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர். மழைக்காலத்தில் நம் வீட்டிலும் வெளியிலும் மின் கசிவை தவிர்த்து, பாதுகாப்புடன் இருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
எனவே, பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனுடம் இருக்க வேண்டும்.
மழைக்காலங்களில் வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இடி, மின்னல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
அதேபோல் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது, டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி போன்ற மின்சார இணைப்பு மூலம் நம் வீட்டுக்குள் தீ விபத்தை ஏற்படுத்தலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக மின்சாரப் பொருள்களின் இணைப்பைத் துண்டிப்பது நல்லது அல்லது பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிர்த்து விடுவது பாதுகாப்பானது. இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். கைப்பேசி பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குளியலறையில் ஹேர் ட்ரையரை பயன்படுத்த வேண்டாம்.
எக்காரணம் கொண்டும் உடைந்த ஸ்விட்ச்கள், பிளக் பாயின்ட்களை பயன்படுத்தாதீர்கள்.
குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில், ஸ்விட்சுகள் வைக்க கூடாது.
வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்கள் மூலம் மின் இணைப்பு கொடுப்பது பாதுகாப்பானது.
உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது அல்லது சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளில் மழைநீர் கசிவு இருக்கும் போது அவற்றை தொட வேண்டாம்.
மழைக்காலத்தில் வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை நீங்கள் உணர்ந்தால், உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். அடுத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பருவமழை புயல்கள் திடீர் மின்னழுத்த அதிகரிப்புகளை ஏற்படுத்தும், இதனால் மின்சார சாதனங்கள் மற்றும் மின் அமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் மின்ஒயர் மற்றும் கம்பிகளை தொட வேண்டாம். மேலே செல்லும் மின்கம்பிகளின் கீழ் நிற்க வேண்டாம். மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகிலும் செல்லவோ, தொடவோ கூடாது.
மின்சாரம் சார்ந்து ஏற்படும் அனைத்து தீ விபத்துக்களுக்கும் நீரை பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீட்டிற்கு வெளியே ஏடிஎம், மின் கம்பங்கள், உயர் அழுத்த கம்பி, மின்சார இயந்திரம் போன்ற இடங்களில் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகளவு உள்ளதால் அந்த இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.
அதேபோல் வீட்டைப் பொறுத்தவரை மழையின் போது, சுவிட்ச் போர்டு, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மோட்டார் போன்ற பொருட்களில் மின்சாரம் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.