கோடைக் காலம் என்பது பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரை ஒரு பொன்னான காலம். அந்த ஒரு விடுமுறை தருணத்திற்காகத்தான் பல நாட்களாக தவம் இருப்பார்கள். இது ஒரு புறம் இருக்க, அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு விதப் பதற்றத்தையும் கொடுக்கும் காலமும் இதுதான். காரணம் வெயில் உஷ்ணத்தால் உண்டாகும் பிரச்னைகளை எப்படித் தடுக்கலாம் என்ற பயமே. அதை எப்படிச் சமாளிக்கலாம்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
தற்காப்பு நடவடிக்கைகள்:
முதலாவதாக, நீரேற்றமாக((Hydration) இருப்பது மிகவும் முக்கியம். மாணவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டிற்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல வேண்டும். அன்றைய நாளில் முடிந்த வரை தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் குளிர்ந்த நீரை வழங்க பள்ளிகள் பல இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த நீர்(water coolers) அல்லது மண் பானைகளை நிறுவலாம். இதோடு அந்தந்த ஆசிரியர்களும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தண்ணீர் பருக மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
இரண்டாவதாக, ஆடை முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் உடம்பை காற்றோட்டமாக வைக்க வெப்பத்தை தளர்த்தும் மெலிசான பருத்தி ஆடைகளை(light-colored cotton clothes) அணிய வேண்டும். வெளியே விளையாடும் நேரங்களில் நேரடி சூரிய தாக்கத்தில் இருந்து தப்பிக்க பள்ளிகள் மாணவர்களுக்கு தொப்பிகள் வழங்கலாம் அல்லது தொப்பிகளை அணிய அனுமதிக்கலாம்.
மூன்றாவதாக, பள்ளி நேரங்களை மாற்றியமைப்பது வெப்ப அதிகமான நேரங்களில் அதன் கொடூர தாக்கத்தைத் தவிர்க்க உதவும். அதற்குத் தேவைப்பட்டால் அதிகாலையில் பள்ளியைத் தொடங்கி மதியத்திற்கு முன் முடிவடையும்படி மாற்றி அமைக்கலாம்.
மேலும், வகுப்பறைகள் நல்ல காற்றோட்டம் மற்றும் திறன் வாய்ந்த மின்விசிறிகளுடன் இருக்க வேண்டும். முடிந்தால் அதிக சூரியஒளி படும் பகுதிகளில் ஜன்னல்களில் சீகிரீன்(screen) போட்டு மறைக்கலாம். மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்(Generator) அல்லது இன்வெர்ட்டர்( Inverter) பயன்பாட்டிற்கான ஏற்பாடுகள் கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில புதுமையான விஷயங்கள்:
தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவைப்படும் நேரங்களில் UV பாதுகாப்பு சன்கிளாஸ்ஸுடன்(Sunglass) உபயோகப்படுத்த கற்றுக் கொடுக்கலாம். பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு மாணவர்களுக்குச் சுலபமாக எடுத்து செல்லக்கூடிய பேட்டரியால் இயக்கப்படும் மின்விசிறிகள்(battery fans) அல்லது கூலிங் டவல்களை(Cooling towels) கொடுத்து விடலாம். பின் தேவையற்ற கொழுப்புள்ள உணவுகளைக் காட்டிலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சத்தான உணவை கொடுத்துவிடலாம். இது ஓரளவு தேவையான நீரேற்ற அளவை உடல்களில் பராமரிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நீரேற்றம்(Hydration) மற்றும் சூரிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். முடிந்தால் சூரிய தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஸ்கூல் வேன் அல்லது தனியார் வேன் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். கூடுதலாக, வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப ஒரு சில பயண நேரங்களைக்கூட மாற்றி அமைக்கலாம்..
கண்டுகொள்ளாமல் இருப்பதனால் உண்டாகும் எதிர்மறையான தாக்கங்கள்:
இந்த முன்னெச்சரிக்கைகளை செயல்படுத்தத் தவறினால் நீரிழப்பு(dehydration), வெப்பப் பக்கவாதம்(heatstroke), வேர்க்கூறுகள் (skin rashes) மற்றும் வெப்பம் தொடர்பான பிற நோய்கள் ஏற்படலாம். அதிக வெப்பமான சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கும்போது அவர்களின் புத்தி கூர்மை(Concentration) மற்றும் ஒட்டுமொத்தச் செயல்திறனை மோசமாக பாதிக்கலாம்.
ஆக, இந்தியாவில் கோடை காலம் வருவது ஒரு இயல்பான விஷயம்தான். சிலருக்கு இது பழகி விட்டாலும் குழந்தைகளாகிய மாணவர்களுக்கு இந்தத் தருணம் ஒரு சவாலான ஒன்றே. எனவே, மேலே குறிப்பிட்டது போல் அதற்கேற்றவாறு அவர்களைத் தயார் செய்து வரக்கூடிய இன்னல்களைத் தடுப்போம்.