
களி மண்ணை நன்றாக குழைத்து, அதை வண்டிச்சக்கரத்தில் வைத்து சுழல வைத்து கைகளால் சரியான நெகிழ்வு தருவதன் மூலம் மண் பானை உருவாக்கப்படுகிறது.
மண்பானை தண்ணீர் தரும் நன்மைகளை தெரிந்த கொண்டதன் மூலம் பல நாடுகளில் மண்பானைகளுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. வெயில் கடுமையாக இருக்கும்போது மண்பானையானது, தன்னுள் இருக்கும் நீரை அதிக அளவு குளிரச்செய்யும்.
வெளிப்புற வெப்பம் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் மிதமான குளிர்ச்சியோடு இருக்கும். இதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? மேலே படியுங்கள்...
மண்பானை என்பது இறுக்கமான மண்ணால் உருவாகி இருந்தாலும் அதில் கண்களுக்கு புலப்படாத நுண் துளைகள் உள்ளன. சுற்றுப்புற வெப்பம் மண்பானையை தாக்கும்போது மண்பானையில் இருக்கும் நுண் துளைகள் சுவாசித்தல் மூலம் நீர் வெளியே இழுக்கப்படும்.
இவ்வாறு தொடர்ந்து மண்பானை நீர் ஆவியாகிக்கொண்டே இருக்கும். இந்த செயல்முறை மூலம் பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பம் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மண்பானையில் உள்ளே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. அதாவது, வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும் போது அந்த வெப்பத்தின் காரணமாக மண்பானை நீர் ஆவியாதல் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த ஆவியாதல் மூலமாக வெப்பம் தொடர்ந்து வெளியேற்றப்படும்போது பானைக்குள் இருக்கும் நீர் குளிர்ச்சியாக மாறுகிறது.
பொதுவாக, ஒரு மண் பானை அது இருக்கும் அறை வெப்ப நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை அளவுக்கு நீரை குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.
மண் பானை சுவாசிப்பதால் நீரில் உள்ள கெட்ட உப்புகள் வடி கட்டப்படுவதால் நீர் தூய்மையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மண் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணி நேரம் வைத்திருந்த பின்னர் குடிக்க வேண்டும். பானை தண்ணீரில் உள்ள அனைத்து மாசுப் பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் என்றால் அது மண்பானைதான் என்று சொல்ல வேண்டும்.
புதிதாக மண்பானை வாங்கியதும் அதில் தண்ணீர் ஊற்றி உடனே குடிக்கக்கூடாது. 10 நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினமும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் தேன் போன்ற இனிமையான சுவை இருக்கும்.
கோடை காலங்களில் பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெயிலுக்கு மண்பானை நீரை அருந்தினால் தேன் போன்று இனிமையான சுவையுடன் இருப்பது மட்டுமின்றி உடல் சூட்டை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு வலிவகுக்கும்.
மண்பானையை தரையில் வைக்கக்கூடாது. ஆற்று மணலைக் குவித்து வைத்து அதன் மேல் மண் பானையை வைக்க வேண்டும். வெட்டிவேரை பானை தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
கோடை காலம் ஆரம்பமாக போகிறது. உடனே போங்க மண்பானை வாங்குங்க... உடல் ஆரோக்கியத்தை காத்திடுங்க...