
அளவோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், அமுதம் கூட விஷமாகிவிடும் என்னும் நமது முன்னோர்களின் சித்தனை வியப்புக்குரியது! வாழ்க்கையின் மொத்தத் தத்துவத்தையுமே தம்முள் அடக்கி வைத்திருக்கும் சொற்கள் இவை! நமக்குத் தேவையானது; நம்மை உயர்த்துவது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே விஷமாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது! இந்த உண்மை அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அதுதான் உண்மை!
உணவுகளில் சுவையானதாக சொல்லப்படும் இனிப்பு தொடங்கி, உணர்வுகளில் உயர்ந்ததாக சொல்லப்படும் அன்பு வரை, எதுவுமே அளவை மிஞ்சும்போது பிரச்னைகளைத் தோற்றுவிக்கும்.
அனைவராலும் பெரும் மதிப்புடன் போற்றப்படும் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் ஒரு சமயம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தார். உணவுக்குப் பின்னர் பாயசம் கொடுத்தார்கள். கொஞ்சம் சாப்பிட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொடுத்தார்கள். தனக்கே உரிய பாணியில் அவர் சொன்னார், 'பாய்சனால் கொல்லுவார்கள் என்பது தெரியும். பாயசத்தினாலும் கொல்வார்கள் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன்' என்றார்.
அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலைக் கெடுக்கிறது. அளவுக்கு அதிகமான அன்பு நிம்மதியைக் கெடுக்கிறது என்னும் நடைமுறை உண்மையை அனைவருமே அறிந்துதானே இருக்கிறோம்.
'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றான் வள்ளுவன். ஆனால், அதன் மீது நாம் கொள்ளும் அளவுக்கு மீறிய பற்றுதான் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. 'நான் தவறுகள் ஏதும் செய்யவில்லை; நியாயமாக உழைத்து சம்பாதிக்கிறேன்' என்று சொல்பவர்களும், நேரம் காலம் பார்க்காமல் ஓடியோடி உழைத்து பணம் சேர்ப்பதிலேயே உடலையும், உறவுகளையும் கெடுத்துக் கொள்வதில்லையா?
உணவு, உடல் நலம் பற்றிய சிந்தனைகளே இல்லாமல், இரவு பகல் பாராமல், பொருள் சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, ஓடி ஓடி உழைத்துக் கடைசியில் உடலைக் கெடுத்துக்கொண்டு, அப்படி உழைத்து உழைத்து சேர்த்த பொருளையெல்லாம், கெட்டுப்போன உடல் நலனைச் சீர் செய்ய செலவழிப்பதிலேயே பலருக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது! கடைசியில், 'ஏன் வாழ்க்கை இப்படி ஆனது?' என்னும் கேள்வி மட்டுமே விடையில்லாமல் நிற்கும்!
தேவையின் எல்லையை மனிதன் உணர்ந்துகொள்ள வேண்டியது, தான் தேடும் பொருளில் மட்டுமல்ல. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்துவதிலும்தான்! பேச்சு, மவுனம் இரண்டுமே மனிதனுக்குத் தரப்பட்டுள்ள ஆயுதங்கள். சரியான நேரத்தில், சரியான அளவில் அதைப் பயன்படுத்தப்படும்போதுதான் இவை இரண்டுமே பலன் அளிக்கின்றன.
பேசக்கூடாத இடங்களில் பேசுவது; அளவுக்கு மீறிப் பேசுவது; தன்னைப் பற்றியப் பெருமைகளையே பேசுவது; அடுத்தவரைக் குறை சொல்லியே பேசுவது போன்றவையெல்லாம், அமுதத்தை விஷமாக்கும் வேலைதான்! அதேபோல், பேசியே ஆக வேண்டிய இடங்களில் பேசாமல் காக்கப்படும் அளவுக்கு மீறிய மவுனமும் சிக்கல்களைப் பெரிதாக்கி விடுகின்றது. ஆகவே, எல்லாவற்றிலும் அளவோடு இருந்து வளமோடு வாழுங்கள்.