TRENDING IN AMERICA... அமெரிக்காவில் இந்த வாரம் அல்லோலகல்லோலப்படும் விஷயம்...
நீ சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயா? (HAVE YOU HEARD ANY GOOD TEA LATELY)
டீயைக் குடிப்பது நமக்குத் தெரியும். அது என்ன டீயைக் கேட்பது? மண்டை குழம்புகிறதில்லையா?
இதேபோலத் தான் ஆயிரக்கணக்கான அமெரிக்க பெற்றோர்களின் மண்டை குழம்பியது.
தங்களது டீன் ஏஜ் பெண்களும் வாலிபர்களும் ரகசியமாகப் பேசுவதை (ஒட்டுக்) கேட்ட பெற்றோர்கள் கவலை அடைந்தது நியாயம்தானே!
அவர்கள் கூகிளை அலசினார்கள்; விவரம் தெரிந்த பலருடன் பேசினார்கள். அப்புறம் தான் தெரிந்தது, 'டீ' என்றால் வம்பு வதந்தி என்றும் ஒருவரைப் பற்றிய அந்தரங்க விஷயம் என்றும் இந்தக் காலத்தில் அர்த்தமாம்.
இன்ஸ்டாகிராம், ஸ்நாப்ஷாட், டிக்டாக்கிலிருந்து எல்லா சோஷியல் மீடியாக்களிலும் அந்தரங்கமாகப் பேசும் போதும் அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை 'டீ'!
'டீ' என்பது கொச்சை மொழியின் வழக்கில் வந்து விட்ட வார்த்தை! வம்பு பேசும் அந்தரங்கத் தோழிகள் சுவாரசியமான வம்பு பற்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்!
“அடீ! ஏதாவது 'டீ' உண்டா?
“உண்டு 'டீ'! சாராவும் ஜானும் ப்ரோக் அப். அவன் அவளை ஏமாத்திட்டான்.
“ஐயோ! அப்ப எல்லார்கிட்டயும் இந்த 'டீ'யைச் சொல்லிடு”
“இதை விட வேறென்ன வேலை எனக்கு. நீயும் பத்து பேர் கிட்ட உடனே சொல்லிடு”
இது தாங்க உதாரணம்!
2016 வாக்கில் இது வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இப்போது முழு வேகத்தில் 'டீ'யை எங்கும் 'கேட்க' ஆரம்பித்தார்கள்.
அது சரி அது என்ன க்ளாக் இட்?
இதையும் சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு தங்கள் நண்பர்களிடையே பேசுவதைக் கேட்டு பெற்றோர்கள் பயந்து போனார்கள்.
'க்ளாக் இட்' என்றால் உடனே சொல் என்று அர்த்தம்; அதாவது கொச்சையாக சொல்லப் போனால் 'கக்கிடு'.
டிக்டாக்கில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை இது.
யாராவது உண்மையை மறைத்தாலோ, பொய் சொன்னாலோ உடனே சொல்லப்படும் வார்த்தை தான் 'க்ளாக் இட்'.
க்ளாக் தட் டீ என்றாலும் அதே அர்த்தம் தான்!
“சாரா சொன்னாள் அவளோட ஆளோட, அவள் பாரிஸ் போகப் போறாளாம். செலவெல்லாம் அவனோடதுதானாம்”
“அட சே, க்ளாக் இட். ஏன் அவள் இப்படியெல்லாம் பொய் சொல்றா?!”
இது ஒரு உதாரணம் தான்! இன்னும் பல விதங்களில் ஜென் ஆல்ஃபா குழந்தைகள் இதைத் தங்கள் வார்த்தையாகவே ஆக்கிக் கொண்டார்கள்.
இதையெல்லாம் இந்த வாரம் தெரிந்து கொண்ட பின்னர் தான் இளம் தாய்மார்களும் அப்பாமார்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
காலம் மாறுகிறது. நாமும் அவர்களோடு மாறி பலவற்றைக் கற்க வேண்டியது தான்!
இப்படியே போனால் இன்னும் பல புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை நாம் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள பெற்றோர்கள் இவற்றை எல்லாம் இந்த வாரம் அறிந்து கொண்டு புன்முறுவல் பூக்கிறார்கள் – தங்கள் வாரிசுகளின் புதிய மொழிப்புலமையை அறிந்து!
உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்களும் இதை அறிந்து கொள்ள வேண்டியது நியாயம் தானே!