

ஒரு வீட்டில் தினந்தோறும் பயன்பாட்டில் இருக்கும் பகுதி என்றால் அது சமையல் அறைதான். அங்கு சமைப்பதற்கு முக்கிய சாதனமாக இருப்பது கேஸ் அடுப்பாகும். சமையலறை பாதுகாப்பு மிக்கதாகவும், காஸ் அடுப்பை முறையாகக் கையாளவும் உதவும் அறிந்திருக்க வேண்டிய சில குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
* காஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது, தீக்குச்சியை பற்ற வைத்த பிறகே அடுப்புக் குமிழைத் திறக்க வேண்டும்.
* லைட்டரை உபயோகிக்கும்போது முதலிலேயே அடுப்புக் குமிழை திறப்பதால் காஸ் சிறிது வெளியேறும். இதனால் பெரும்பாலும் லைட்டரை தவிர்க்கலாம்.
* இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் விரிசல்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த ரப்பர் குழாயை வாங்கி மாற்ற வேண்டும்.
* சிலிண்டர் எப்போதும் நேராக இருக்க வேண்டும். காலி சிலிண்டராக இருந்தாலும் கூட அதை படுக்க வைக்கக் கூடாது.
* குழந்தைகளை சமையலறையில் விளையாட அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் கேஸ் ரப்பர் இணைப்புகள் பக்கம் போவதும், விளையாடுவதும் ஆபத்தான விஷயம்.
* கேஸ் அடுப்பு எரியும்போது சமையல் பாத்திரங்களை அடுப்பிலேயே விட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனிக்கக் கூடாது. அதில் இருக்கும் பொருட்கள் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்து கேஸ் கசியும் அபாயம் உள்ளது.
* சமையல் செய்யும்போது நைலான் ஆடைகளை அணியக் கூடாது. பருத்தி அடைகளையே அணிய வேண்டும். காட்டன் ஏப்ரனை உபயோகிப்பது மிகவும் நல்லது. உடைகள் கலையாமல் பாதுகாக்க இது உதவும்.
* மாற்று சிலிண்டர் இணைப்பு கொடுக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுபத்தி போன்றவற்றை அணைக்க வேண்டும். அதேபோல், மின்சார இணைப்புகளையும் இயக்கக் கூடாது. ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
* சூடான பாத்திரங்களை கேஸ் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க இடுக்கியை உபயோகிக்க வேண்டும். நம்முடைய உடையையோ, சேலையையோ, பிடி துணியாகப் பிடித்து உபயோகிக்கக் கூடாது.
* கேஸ் அடுப்புகளை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். கேஸ் பர்னரை சுத்தம் செய்ய புளியை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து அதில் சிறிது சோப்பு பவுடர் சேர்த்து அல்லது லிக்விட் சேர்த்து கேஸ் பர்னரை அதில் வைத்து சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைத்த பின்னர், அதை ஒரு பிரஷ் மூலம் கழுவி எடுத்தால் சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
* தினமும் சமைத்தவுடன் அடுப்பை சோப்பு பவுடர் தண்ணீர் கொண்டு துடைத்தால் அழுக்கு சேரும் பிரச்னையே வராது. எண்ணெய் பிசுபிசுப்பை குறைக்க இந்த தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு, வினிகரை கலந்து கழுவினால் அடுப்பும் சுத்தமாகும்.
* எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் அல்லது வினிகருடன் பேக்கிங் சோடா கலந்து கேஸ் அடுப்பு பர்னர்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தினால் பர்னர் அடுப்பு சுத்தமாகும்.
மேற்கூறிய குறிப்புகளைப் பயன்படுத்தி கேஸ், பர்னரை சுத்தமாக வைத்துக் கொண்டால் பாதுகாப்பாகவும் சமைக்கலாம், எரி வாயுவும் மிச்சமாகும்.