
நிலையான மகிழ்ச்சி என்பது வெளிப்புறப் பொருட்களை சார்ந்திராமல், தனி நபரின் மனநிலை மற்றும் நல்வாழ்வுடன் இணைந்திருக்கும் ஒரு ஆழமான மற்றும் நீண்டகால மகிழ்ச்சியாகும். இதற்கு சுயநலத்தைக் கடந்து பிற உயிர்களுடன் அன்புடன் இணக்கமாக செயல்படுவது இன்றிமையாதது. மகிழ்ச்சி என்பது பயிற்சி செய்யக்கூடிய ஒரு மனநிலை. இது நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் மன நிறைவுடன் தொடர்புடையது.
1. பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவது: பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவது, மனநிறைவைத் தரும் ஒரு உன்னதமான உணர்வாகும். இது சேவை மனப்பான்மையோடு தொடர்புடையது. இதில் நாம் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுயநலமற்ற, நிலையான மகிழ்ச்சியை அடைகிறோம். நம்முடைய சுய விருப்பங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல், பிறருக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் மகிழ்ச்சியைக் காண முடியும். விருப்பங்கள் முடிந்து பகிர்தல் தொடங்கும் இடத்தில் மகிழ்ச்சி என்பது நிறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம், சமூகத்துடன் இணைந்து தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம் சுயநலமற்ற, நிலையான மகிழ்ச்சியைப் பெறலாம்.
2. சுயநலமற்று இருப்பது: வாழ்க்கைக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி மட்டுமே போதுமானதல்ல. மற்றவர்களுடனும் சுற்றுச்சூழலுடனும் இணைந்து செயல்படும் பொழுது மேலும் ஆழமடையும். மற்றவர்களுக்கு உதவுவது அல்லது தன்னார்வத் தொண்டு செய்வது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும். குறுகிய கால இன்பத்தை மட்டும் நாடாமல், வாழ்க்கையின் நீண்ட கால அர்த்தமுள்ள திருப்தியை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது நல்லது. கடந்த காலத்தைப் பற்றிய கவலைகளையும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் தவிர்த்து நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினாலே நிலையான மகிழ்ச்சியைப் பெறலாம்.
3. நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது: மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வாகும். அது பெரும்பாலும் மனம் சார்ந்ததாகவே இருக்கும். இதனை எதிர்காலத்திற்காகத் தள்ளிப்போடாமல், தற்போதைய அதாவது நிகழ்காலத் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வது அவசியம். மகிழ்ச்சி தரக்கூடிய பொழுதுபோக்குகள் மற்றும் செயல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சி என்பது எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது என்ற உணர்வைக் கொண்டிருக்கிறோம். அத்துடன் ஒரு தேவையை நாம் பூர்த்தி செய்தவுடன் மற்றொரு தேவை எழுவதைக் காண்கிறோம். இது நம்மை மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்குகிறது. மகிழ்ச்சியாக உணர நம்மிடம் இல்லாத விஷயங்களைப் பின் தொடர்வது ஒருபோதும் முடிவடையாத அபத்தமான செயலாகும். உண்மையான மகிழ்ச்சியை கண்டுபிடிக்க எதிர்காலத்தில் அதைத் தேடுவதை நிறுத்தி, நிகழ்காலத்திலேயே அதுவும் இத்தருணத்திலேயே இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
4. நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்: அன்பான நடத்தை, நேர்மை, பிறருக்கு உதவும் குணம், பெருந்தன்மை, தயாள குணம் போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வது மனதை அமைதிப்படுத்துவதுடன் நிலையான மகிழ்ச்சியையும் தரும். கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தி அடைவது, பேராசை கொள்ளாமல் இருப்பது, பிறரிடம் காணப்படும் நல்ல குணங்களைப் பாராட்டுவது, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது வாழ்வில் நிலையான மகிழ்ச்சியைத் தரும்.
5. விளம்பரங்களின் மாயையைத் தவிர்த்தல்: அதிகமான பொருட்கள் மகிழ்ச்சியைத் தரும் என்ற விளம்பரங்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல், நிலையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் நிஜமான மற்றும் இயற்கையான சூழலை உருவாக்குவது சிறப்பு. அத்துடன் வாழ்க்கைக்கான ஒரு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கண்டறிவது நிலையான மகிழ்ச்சிக்கு அவசியம். வெற்றிகள் அல்லது பொருட்கள் வழியாக மகிழ்ச்சியைத் தேடுவதற்கு பதிலாக மனதின் உள்ளிருந்து மகிழ்ச்சியைத் தேடுவது சிறப்பு.
6. நல்ல உறவுகளை வளர்ப்பது: நிலையான மகிழ்ச்சிக்கு நல்ல உறவுகளை வளர்க்க வேண்டியது அவசியம். அதற்கு நேரத்தையும், முயற்சியையும் முதலீடு செய்து மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களை நல்ல முறையில் நடத்துவது உறவுகளை ஆழமாக வளர்க்க உதவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அத்துடன் நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்துவது நம் மனநிலையை மேம்படுத்த உதவும். மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களுடன் பழகுவதும் நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கும்.