
'உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்!'
இந்த பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
இதற்கு இரண்டு ரீதியான அர்த்தங்கள் உள்ளன. பார்க்கலாமா...?
முதலாவது அர்த்தம்: (ஆன்மீகம்)
பொதுவாகவே சாப்பாடு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது வழக்கம். உப்புள்ள உணவை சாப்பிட்டால் தாகம் எடுத்தே தீரும். அதன் காரணமாக நாம் தண்ணீர் குடித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சரி, இந்த பழமொழிக்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறதே....
தீதும் நன்றும் பிறர் தர வரா!
நம் வாழ்க்கையில் நாம் செய்கின்ற வினைக்கேற்ப அதற்கான விளைவுகளை நாம் கண்டிப்பாக சந்தித்தோ அல்லது அனுபவித்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ தீர வேண்டும். இதைத் தான் இந்த வசனத்தில் மிக அழகாக துல்லியமாக கூறி இருக்கிறார்கள்.
நல்லதை செய்தால் நல்லதே நடக்கும். தீய செயல்களை செய்தால் கண்டிப்பாக அதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.
என்னதான் புத்திசாலித் தனமாக ஊழலை செய்து கொண்டும் பொய்யை கூறிக் கொண்டும் சந்தோஷமாக வாழ்ந்தாலும், என்றைக்காவது ஒரு நாள் கண்டிப்பாக கையும் களவுமாக பிடிபட வேண்டியிருக்கும். அன்று உங்களால் அந்த விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.
உப்பை தின்றால் எப்படி தாகம் எடுத்தே தீருமோ அதைப் போல நாம் செய்யும் தீய செயல்களுக்கும் தண்டனை கண்டிப்பாக கிடைத்தே தீரும். தவறு செய்ய செய்ய முதலில் நன்றாக தான் இருக்கும். நாள் போக போக பயமும் போய் விடும். ஆகையால் இன்னும் தீவிரமாக செய்யத் தோன்றும். கடைசியில் விளைவு விபரீதமாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு மது, சிகரெட் போன்றவற்றை அருந்தி கொண்டே இருந்தால் என்னவாகும்? உடல் கண்டிப்பாக கெட்டு தானே போகும். நுரையீரலும் கல்லீரலும் கண்டிப்பாக பாதிக்கப் பட்டு உயிர் போகும் நிலை வரும். அதைப் போல் சிலர் வாயில் புகையிலையை மென்று கொண்டே இருப்பார்கள். விளைவு oral cancer. எத்தனை தரவை யாராவது எடுத்துக் கூறியும் கேட்காமல் அருந்தி கொண்டே இருந்தால் பின்னால் அனுபவித்தே தீர வேண்டும். இது விதி அல்ல; நாமே நமக்கு இழைக்கும் தீமை.
ஆகவே நாம் தவறுகளையோ அல்லது தீய பழக்கங்களையோ செய்தால் கண்டிப்பாக அதற்கான பின் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உள்ளடக்கம்.
இரண்டாவது அர்த்தம்: (அறிவியல்)
ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம் சோடியம் உப்பின் அளவு தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம் சீறுநீரகம். அப்படி என்றால், நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு?
அதாவது நம் உடம்பிலிருக்கும் ஒரு கிராம் உப்பு வெளியேற வேண்டும் என்றால் 70ml தண்ணீர் தேவைப்படுகிறது. தினமும் நாம் உட்கொள்ளும் உணவின் வழியாக சராசரியாக 40g உப்பு நம் உடலில் சேருகிறது. ஆகவே சராசரியாக ஒரு மனிதன் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி குடிக்கவில்லை என்றால் அதிகப்படியான உப்பு நம் உடலில் சேர்ந்து சீறுநீரகம் பாதிக்கப் படும்
இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அழகாக அறிவுப் பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்!