நல்லதொரு குடும்பம்!

முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
A good family!
Lifestyle articles
Published on

-உஷா ராம்கி

ணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே, அது கூட்டுக் குடும்பம் என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இரண்டு மூன்று தலைமுறைகள் ஒன்றுக்கொன்று சுமூகமாக கருத்துப் பரிமாறுவதே பெரிய சவலாக இருக்கிறது. என் குழந்தைகள், என் பெற்றோர் என்ற ஆத்மார்த்தமான எண்ணம் இருந்தால், அன்பை வளர்க்க முடியும். அன்பான குடும்பங்கள் உருவாகும். சமுதாயம் அமைதிப்பூங்காவாக இருக்க, அன்பான குடும்பங்கள்தான் வேர்களும், மரங்களும், மலர்களும் ஆகும்.

குழந்தைகள் பாட்டி, தாத்தாவிடம் நீதிகளைக் கதை மூலம்
கற்றுக்கொள்ளலாம்; செல்லம் கொஞ்சலாம். பாட்டி, தாத்தாவுக்கு லேட்டஸ்ட் ட்ரெண்ட் தெரியாமல் போகலாம்; ஆனால், மனது நிறைய பேரக்குழந்தைகள் மேல் பாசம் இருக்கும். அம்மா, அப்பா இருவரும் வேலை பார்க்கும் நிலையில், குழந்தைகளுக்கு இந்தப் பந்தப் பாசம் பெரிய விஷயம்.

கூட்டுக் குடும்பமாக ஒரே கூரையின் கீழ் இல்லையென்றாலும், இரு தலைமுறைகளும் பக்கபலமாக இருக்கலாமே! மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, கஷ்டமான தருணங்களில் தோள் கொடுத்து, ஆதரவாக இருந்து தனிமைத் தாக்கம் இல்லாமல் இருக்கலாம். ப்ரைவஸியும் கிடைக்கும்; வேண்டியபோது ஒருவருக்கொருவர் ஊக்கமாகவும் இருக்கலாம்.

மூத்த குடிமக்கள் தங்கள் மனதுக்குள், “எங்களை யார் மதிப்பார்கள்? அந்தக் காலத்தில் நாங்கள் இப்படியா குழந்தைகளை வளர்த்தோம்” என்றெல்லாம் நினைத்து அடுத்த தலைமுறையின் பிள்ளைகள் வளர்ப்பில்
தப்பு கண்டுபிடிப்பதைவிட, “இந்த காலத்துப் பசங்களை வளர்க்க நிறைய சாமர்த்தியமும், உலக அறிவும், நிறைய பொறுமையும் தேவை. YOU ARE DOING A GREAT JOB” என்று தம் மக்களை ஊக்குவித்தால் பெற்றோருக்கு தெம்பு இருக்கும்.

இப்போது பெரியவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்பதால், உத்தியோக ஓய்வு பெற்ற பிறகு 25-30 வருடங்கள் வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் உடல் ஆரோக்கியத்தைவிட, மன ஆரோக்கியம் முக்கியமாகி விடுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மங்கையர் நினைத்தால் மாவுலகே வசமாகும்... இந்த கதையை படியுங்கள் புரியும்!
A good family!

உடல் உபாதைகளுக்கு வைத்தியமும், மருந்து மாத்திரையும் இருக்கிறது, அல்லது உடல் பலவீனம் அடையத்தான் செய்யும் என்பதை அவர்கள் முன்கூட்டியே புரிந்து கொள்கிறார்கள். மன ஆரோக்கியத்துக்கு அவர்களுக்குத் தேவைப்படுவது அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் போன்றவை.

என்னதான் சண்டையும், அபிப்ராயப் பேதங்களும் இருந்தாலும், ‘சாரி’ சொல்லவும், அடுத்தவர் கருத்துக்குச் செவிசாய்ப்பதும் முக்கியம். வாக்குவாதத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கோபத்தோடும், காழ்ப்புணர்ச்சியோடும் செல்வதைத் தவிர்த்து, “அப்புறம் பேசலாம் இதைப் பத்தி. எல்லாவற்றையும் சமாளிக்கலாம். கவலை வேண்டாம்.  நீ நிம்மதியாய் இரு. ஐ லவ் யூ” என்று சொல்லிக்கொண்டு, முடிந்தால் அணைத்துக்கொண்டு விட்டு வெளியே போகும்போது, வெளியே செல்பவருக்கு மனம் லேசாகிறது; மற்றவருக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அவ்வளவுதாங்க குடும்பம்னா!

“அவர்கள் ஏன் என்னைப் புரிந்துகொள்ளக் கூடாது”, “நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் தோன்றும்போது, ஒரு வாக்குவாதத்தில் ஜெயிக்கலாம்; ஆனால், உறவுகளைப் பலப்படுத்துவதில் தோற்றவராகி விடுவோம். உறவுகளின் மகத்துவத்தைப் பற்றி அறிய, கோவிட் தாக்குதலில் வேலைநிமித்தம் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தனிமைப்படுத்தப்பட்டவரைக் கேட்டுப் பார்க்க வேண்டும்; அல்லது முக்கியமான உறவை இழந்து இறுதியாக ஒருதரம் கூடப் பார்க்க முடியாதவர்களிடம் கேட்டால், அந்த வலியைப் பற்றிச் சொல்லுவார்கள்.

சேர்ந்து சாப்பிடுவது, அலைப்பேசி என்னும் துஷ்டனை தொலைவில் வைத்து அளவளாவுவது, அன்றைக்கு அலுவலகத்தில்/ பள்ளியில்/ கல்லூரியில்/ வீட்டில் நடந்த விஷயங்களை விவரிப்பது போன்றவை மதிப்பிடமுடியாத தருணங்கள், முக்கியமாக மலரும் நினைவுகளாய் வரும்போது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இப்படியும் சிலர்...
A good family!

கேட்காமல் அறிவுரை கொடுப்பது கேட்பவர்களின் செவிக்கு எட்டவே எட்டாது; வாழ்க்கை அனுபவம் போன்ற ஒரு உயரிய ஆசான் கிடையாது. வயதான பெற்றொருக்கு அறிவுரை, கணவர் எப்படி இன்னும் நல்ல கணவராக இருக்கலாம் என்பதற்கு அறிவுரை, வளர்ந்த பிள்ளைகளுக்கு அறிவுரை போன்றவற்றை நாம் சொல்லக் காரணம் அவர்கள் தவறு செய்து கஷ்டப்பட வேண்டாமே என்பதற்காக; விழுந்து காயப்பட வேண்டாமே என்பதற்காக. ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு முறை விழுவதன் மூலம் உணரப்படும் விஷயங்கள் ஆழமானவை. தவறு செய்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தைவிட, நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை சிறந்தது.

நல்ல விஷயங்களைப் பாராட்டுவது, முக்கியமான நாட்களை நினைவி்ல் நிறுத்தி வாழ்த்துவது, முடிந்தபோது அனைவரும் ஒன்றாக வெளியே செல்வது, அடுத்தவர் தவறுகளை மனதிலிருந்து அகற்றி நல்ல விஷயங்களையும் வார்த்தைகளையும் நினைவு கூர்வது, தவறுக்கு மன்னிப்பு கேட்பது, இதெல்லாம் பரஸ்பரம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் செய்யும்போது, உறவுகளை மெச்சலாம். நாம் இறுதிவரை சுமப்பது சுகமான நினைவுகளாய் இருந்தால், நமக்கு சுமை குறையும்.

மகிழ்ச்சியான குடும்பங்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்!

 இக்கட்டுரை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com