குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். பிறந்து சில நாட்கள் ஆனவுடன் குழந்தை தானாகவே சிரிக்கும். அதைப் பார்த்து பெற்றவர்கள் மகிழ்வதோடு குழந்தைகள் தேவதைகளோடு விளையாடுகின்றன; ஆதலால் சிரிக்கின்றன என்பார்கள்.
குழந்தைகள் எதற்காக சிரிக்கின்றன என்பது குழந்தைகள் மட்டுமே அறிந்த ரகசியமாகும்.
சில காலம் சென்ற பின்பு தொட்டிலில் குழந்தைகள் பார்வையில் படும்படி சுழலும் பொம்மைகள் வைப்பார்கள். அதைப் பார்த்து மகிழும்.
சிறிது காலம் ஆனவுடன், குழந்தைகள் கைகளில் கிடைத்த பொருட்களை வைத்து விளையாடும். சாவி கொடுத்து, ஓடும் கார் முதலியவற்றைப் பார்த்து சிரித்து மகிழும். இந்த மாதிரி விளையாடுவதை ஆங்கிலத்தில் Solitary play என்பார்கள்.
வருடங்கள் சென்ற பிறகு வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே விளையாடும் பெரிய குழந்தைகளைப் பார்த்து கொண்டிருக்கும். ஆனால் அந்த குழந்தைகளுடன் சேராது. இந்த விளையாட்டுக்கு பெயர் Onlooker play என்பார்கள்.
இன்னும் சில வருடங்கள் கழிந்த பிறகு ஒரு குழந்தையோடு சேர்ந்து எதிர் எதிராக நின்று விளையாடும். இந்த விளையாட்டுக்கு பெயர் Parallel play ஆகும்.
ஐந்து வயதானவுடன் அவ்வளவுதான் வாண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி விடும். அம்மாவை தேட வைக்கும். எதிர்வீட்டு பையனோடு நம்ம வீட்டு பையன் கண்ணாமூச்சி விளையாடும். ரிங்கா ரிங்கா ரோஸ் பாடும்.
ஆறு வயதானவுடன் வீட்டில் உள்ள பெரியவர்களைப் பார்த்து, "நீ அம்மா, நான் அப்பா" என்று கேரக்டர்கள் உருவாக்கி விளையாடும். இந்த விளையாட்டுக்கு பெயர் Associative play ஆகும்.
இப்பொழுதெல்லாம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு விளையாட பெற்றோர்கள் தடைபோடுகிறார்கள். அப்படி செய்ய கூடாது. நன்கு குழந்தைகளோடு விளையாடினால்தான் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளைப் பார்க்க மாட்டார்கள்.
குழந்தைகளிடம் அலைபேசி கொடுத்து விட்டு ஹாயாக சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் பெற்றோர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகளோடு நீங்களும் குழந்தைகளாக விளையாடுங்கள்.
ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் குழந்தைகள். ஆகையால்தான், குழந்தைகள் அவரை 'நேரு மாமா' என்று அழைத்தார்கள். அதே போல முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கும் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர்களை நன்கு பிடிக்கும். அவர்களிடம் பேசுவதில் பெருமகிழ்ச்சி கொள்வார்.
குழந்தைகளுடன் நாம் விளையாடும் பொழுது ஒரு பேரானந்த நிலை நமக்கு கிடைக்கிறது. அது எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
வள்ளுவ பெருந்தகை குழந்தைகள் பற்றி திருக்குறளில் சிறப்பாக கூறியுள்ளார்.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற".
அறிவுடைய குழந்தைகள் தவிர அடைய வேண்டியது வேறு எதுவுமில்லை என்கிறார். மேலும் அவரே,
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்".
தன் குழந்தை சிறு கைகளால் கரைத்த கூழ் அமிழ்தினினும் இனியது என்கிறார்.
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்".
குழந்தைகளின் இனிமையான குரலைக் கேட்காதவர்களே குழல் இனிது யாழ் இனிது என்பார்கள் என்கிறார் வள்ளுவர்.
குழந்தைகள் ரோஜா மலரைப் போல் மென்மையானவர்கள். குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அதன் கொலுசு ஒலி நாதம் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்
எனவே குழந்தைகளோடு விளையாடுங்கள்... ஆனந்தம் அடைவீர்!