
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. மாணவ மாணவியர் தேர்வுமுடிவுகளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அனைவரும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிபெற வாழ்த்துகள்.
அடுத்ததாக தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ITI), பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள், கேட்டரிங் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய தருணம் இது. இதற்கு முன்னால் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மாணவ மாணவியர் இந்த விடுமுறை நாளில் டைப்ரைட்டிங் பழகுவது நல்லது. இந்த பயிற்சி உங்களுக்கு கணினியை வேகமாக இயக்குவதில் மிகவும் உதவும். மேலும் நீங்கள் பிற்காலத்தில் ஒரு தலைமைப் பொறுப்பிற்குச் செல்லுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம்.
அப்போது நிர்வாகம் தொடர்பான சில இரகசிய கடிதங்களை (Confidential Letters) நீங்கள் தயாரிக்க வேண்டியிருக்கும். அந்த கடிதத்தில் இருக்கும் விவரங்கள் ஒருவருக்கும் தெரியக்கூடாது. அதனால் அதைத் தயாரிக்க பிறரை நாடாமல் நீங்களாகவே அந்த கடிதத்தைத் தயாரித்து விடமுடியும்.
அடிப்படை கணினிப் பயிற்சிகளையும் விடுமுறை நாட்களில் பழகுவது நல்லது. அனைத்து மாணவ மாணவியரும் எம்எஸ் ஆபிஸ் (MS Office) கற்கலாம். வணிகவியல் படித்த மாணவ மாணவியர் டேலியைப் (Talley) பழகலாம்.
எல்லா வகையான படிப்புகளுக்கும் ஒரு தனிமதிப்பு இருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் எந்த படிப்பைத் தேர்வு செய்தாலும் அதில் முழுமையாக கவனம் செலுத்தி ஆழ்ந்து படிக்க வேண்டும். படிப்பை முடித்து நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போது நீங்கள் படித்த படிப்பிலிருந்து எந்த கேள்வியைக் கேட்டாலும் கேள்வி கேட்பவர் வியக்கும் வகையில் தெளிவாக பதில் சொல்லும் அளவிற்கு நீங்கள் ஆழ்ந்து படித்திருக்க வேண்டும். எந்த ஒரு படிப்பும் நமது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். ஆகையால் படிக்கும் படிப்பைத் தெளிவாகப் படிக்கவேண்டும்.
மாணவ மாணவியர் அனைவருக்குமே தாம் விரும்பிய படிப்பைப் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காதபட்சத்தில் எந்த ஒரு கணத்திலும் மனம் தளரவே கூடாது. ஒரு படிப்பு இல்லையென்றால் இன்னொரு படிப்பு. தற்காலத்தில் வேலை வாய்ப்புகளைத் தரும் ஏராளமான புதிய படிப்புகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. கிடைத்த படிப்பில் சேர்ந்து அதில் நிபுணத்துவம் பெறுவேன் என்று மனதில் உறுதியாக நம்பவேண்டும்.
பத்தாம் வகுப்பு முடிக்க இருக்கும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைப்பது நல்லது.
தேர்வு முடிவுகள் வந்து மதிப்பெண் பட்டியல், டிரான்ஸ்பர் சர்டிபிகேட் முதலான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து சான்றிதழ்களையும் மூன்று பிரதிகள் ஜெராக்ஸ் போட்டு அதில் சான்றொப்பம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
சாதி சான்றிதழ் (Community Certificate), வருவாய் சான்றிதழ் (Income Certificate), ஓபிசி சான்றிதழ் (OBC Certificate) (இது மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் சேர தேவைப்படும் ஒரு சான்றிதழ்), இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate), ஆதார் (Aadhar), பான் (PAN Card) முதலானவற்றை முறைப்படி விண்ணப்பித்துப் பெற்று தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
இத்தகைய சான்றிதழ்களைப்பெற சற்று காலஅவகாசம் தேவைப்படும் என்பதால் விடுமுறை காலத்தில் முன்னாலேயே திட்டமிட்டு இவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுவது சிறந்தது. இதனால் கடைசி நேரத்தில் இதற்காக நீங்கள் கஷ்டப்படத் தேவை இருக்காது. இதை எப்படிப் பெறுவது என்பதைக் குறித்த விவரத்தை அறிய உங்களுக்கு அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.
மாணவ மாணவியரே!. நீங்கள் விரும்பும் படிப்பில் சேர்ந்து படித்து சிறந்த மதிப்பெண்களை வாங்கி சாதனை படைக்க வாழ்த்துகள்.