
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக நீடித்து உழைக்கும் தன்மை உள்ள மூங்கில் பைகள் பலவித நன்மைகளை கொண்டுள்ளன. அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மூங்கில் பைகள் அன்றாட அத்தியாவசிய பொருட்களை வைக்க உதவுகின்றன. பணம் வைக்கும் பணப்பையாகவும், செல்போன்கள், சாவிகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல வசதியாக இருக்கின்றன. அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மையால் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் நல்ல வலிமையான கட்டமைப்புடன் வருகின்றன. கனமான சுமைகளைத் தாங்கும் வகையில் இருக்கின்றன. எனவே, இவை ஷாப்பிங் செய்வதற்கு ஏற்றவை.
பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகின்றன. ஆனால், மூங்கில் பைகளின் பயன்பாடு பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க உதவுகின்றன.
மூங்கில் பைகள் பல்வேறு ஸ்டைலான வடிவமைப்புகளில் வருகின்றன. எளிமையான மற்றும் அழகான கைப்பைகள், அணிந்திருக்கும் உடைகளுக்கு ஏற்ற வகையில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்படுகின்றன. சாதாரண நிகழ்வுகள் மற்றும் விருந்து, விசேஷங்களுக்கும் உடன் எடுத்துச் செல்லும் வகையில் அழகாக இருக்கும்.
மூங்கில் பைகள் விரைவாக ஈரத்தை உறிஞ்சும். எனவே, இவற்றை நீச்சல் குளத்திற்கும், கடற்கரைக்கும் செல்லும்போது எடுத்துச் செல்லலாம். ஈரமான நீச்சல் உடைகள், துண்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய கடற்கரைப் பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கின்றன. காலணிகள், உள்ளாடைகள், மென்மையான ஆடைகளை தனித்தனியாக சேமித்துக் கொள்ளலாம்.
குழந்தைகளின் பொம்மைகளை போட்டு வைப்பதற்கு பெரிய சைஸில் இருக்கும் மூங்கில் பைகள் ஏற்றதாக இருக்கும். குழந்தைகளின் க்ரேயான்கள், ரிப்பன்கள், சாக்ஸ்கள், விளையாட்டுப் பொருட்களையும் இவற்றில் போட்டு ஒரு ஓரமாக வைத்து விடலாம். மின்னணு சாதனங்கள், காகிதங்கள், பாஸ்போர்ட் போன்ற மதிப்பிற்குரிய பொருட்களை இவற்றில் போட்டு பீரோவில் வைப்பதற்கு ஏற்றவை.
காற்றோட்டமான மூங்கில் பைகளின் இயல்பு காரணமாக இவற்றில் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களை சேமித்து வைக்கலாம். இதனால் அவை விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகின்றன. மூங்கிலில் உள்ள இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் பாக்டீரியா மற்றும் கெட்ட வாடையை எதிர்க்கும் என்பதால் மதிய உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஆரோக்கியமான தேர்வாகும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாரம்பரிய காகிதப் பைகளுக்கு மாற்றாக மூங்கிலில் செய்த பைகளை பரிசாக பிறருக்கு வழங்கலாம். பயனுள்ள வகையில் அது நீடித்து உழைக்கும்.
மூங்கில் என்பது விரைவாக புதுப்பிக்கத்தக்க ஒரு இயற்கை வளம் ஆகும். குறைந்தபட்ச தண்ணீர் மூங்கில் மரம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கிறது. இதற்கு பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். மக்கும் தன்மை கொண்டது. இதனால் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தடயத்தை விட்டுச் செல்கிறது. மூங்கில் பைகள் நம்ப முடியாத அளவிற்கு வலிமையானவை. கனமான பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் இது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அதனால் பணமும் மிச்சமாகும். இவை வலிமையாக இருந்தபோதிலும் எடை குறைவாக இருக்கும். தூக்கிச் செல்ல வசதியாக இருக்கும்.
இவற்றில் இயற்கை இழைகள் உள்ளதால் காற்று சுழற்சியை அனுமதிக்கிறது. நாற்றங்களை தடுக்கவும் இதில் வைத்திருக்கும் பொருட்களை புதியதாக வைத்திருக்கவும் உதவுன்றன. பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆக இருப்பதால் இளம் வயதினரும் இவற்றை விரும்புகின்றனர்.