
பணக்காரத்தன்மை என்பது பகட்டாக அணியும் உடைகளிலும், உடைமைகளிலும் இல்லை. நுட்பமான நடத்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவர் உண்மையிலேயே பணக்காரர் என்பதை உணர்த்தும் சில நுட்பமான அறிகுறிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பணத்தை விட நேரத்திற்கு முக்கியத்துவம்: உண்மையான பணக்காரர்கள் பணத்தை விட நேரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தனிப்பட்ட வளர்ச்சி, உறவுகள், ஓய்வு போன்றவற்றுக்கு சரியான நேரத்தை ஒதுக்குகிறார்கள். எல்லா வேலைகளையும் தாமே செய்யாமல் பணிகளை பிறர்க்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் நேரத்தைப் பெற பணத்தை செலவிடுகிறார்கள். நகரத்திலிருந்து வெகு தொலைவில் வீட்டை வாங்காமல் நகரத்தின் மையத்தில் வீடு வாங்கி தங்கள் பயணிக்கும் நேரத்தின் அளவை குறைக்கிறார்கள்.
தேவைப்படும்போது பொருட்களை வாங்குகிறார்கள்: தள்ளுபடி அறிவித்தால் உடனே போய் பொருட்களை வாங்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. தள்ளுபடியில் சிறிதளவு பணம் மிச்சமாகும். பொதுவாக, தள்ளுபடி என்றால் தேவைக்கும் அதிகமாக மக்கள் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால், உண்மையான பணக்காரர்கள் தங்களுக்கு தேவைப்படும்போது பொருட்களை வாங்குவதால் தேவையற்றதை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள்.
உடைகளில் இருந்து பிற பொருட்கள் வரை வாங்கும்போது நல்ல தரமான நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே வாங்குகிறார்கள். அவர்கள் வீட்டில் விலை குறைந்த எக்கச்சக்கமான பொருட்கள் இருக்காது. அதற்கு பதிலாக நல்ல, தரமான விலை உயர்ந்த பொருள்கள் இருக்கும். அவை நீடித்து உழைக்கக்கூடியதாக இருக்கும்.
இனிய நினைவுகள்: நல்ல நினைவுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அடிக்கடி பயணம் செல்கிறார்கள். நிறைய இடங்களுக்கு சென்று அங்கே நல்ல அனுபவங்களைப் பெற்று விதவிதமான உணவுகளை உண்டு இனிய நினைவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
நிலையான பொருளாதாரத் திட்டம்: அவர்கள் நிலையான பொருளாதாரத் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ரியல் எஸ்டேட், ஓய்வு கால ஊதியம், ஸ்டாக்குகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நீண்டகால முதலீடுகளில் ஆர்வம் கொண்டு செயல்படுகிறார்கள். உடனுக்குடன் கிடைக்கும் லாபத்தை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. கடன்களை தவிர்க்கிறார்கள். முக்கியமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கவே மாட்டார்கள். முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகர்களை கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுப்பார்கள்.
எளிய, அமைதியான வாழ்க்கை: அவர்களிடம் நிறைய பணம் இருந்தாலும் பகட்டான வாழ்க்கை வாழாமல் எளிய, அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதில் குறைந்த அளவே செலவு செய்கிறார்கள். பிறருக்கு தமது செல்வ நிலையை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும் என்று இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
பயனுள்ள வாழ்க்கை முறை: தேவையில்லாத பொழுதுபோக்குகளில் அவர்கள் நேரம் செலவழிப்பதில்லை. மாறாக, புத்தகம் படித்தல், கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுதல், புதியனவற்றை கற்றுக்கொள்ளுதல் என்று பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள். தன்னுடைய தனித்திறமையை வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுங்குகிறார்கள். தன்னுடைய உடல் நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு வழக்கமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை செய்கிறார்கள். குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்கி அவர்களோடு நல்ல உறவு மேலாண்மையை கடைப்பிடிக்கிறார்கள். பொருள்களை விட மனிதர்கள் மிகவும் முக்கியம் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள். அதனால் எப்போதும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு பிறர் அறியாமல் உதவி செய்வார்கள். தர்மம் செய்வதை விளம்பரப்படுத்த மாட்டார்கள். இவர்கள் அசல் சிந்தனையாளர்கள். தமக்கென்ன சொந்தப் பாதையை உருவாக்கி அதை செயல்படுத்துவார்கள். பிறர் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட மாட்டார்கள். பிறரை குறை கூறுவதை விட, தன்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். உண்மையான செல்வந்தர்கள் பொருட்களை விட தனது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி தனக்கும் சமுதாயத்திற்கும் உபயோகமான முறையில் வாழ்வார்கள்.