Hot summer
Hot summer

உள்ளேயும் வெப்பம் வெளியேயும் வெப்பம்! தவறு எங்கே?

Published on

சென்ற வருடத்திற்கு இந்த வருடம் வெப்பம் கூடி சங்கடத்தைக் கூட்டுகிறதே அது எதனால்? வருடாவருடம் வெப்பம் கூடிக்கொண்டே போகிறது என்ற போதிலும், நமக்கும் வயது கூடிப்போனதால் வெப்பத்தைத் தாங்கும் தன்மை குறைகிறது, அதனால் வெப்பம் அதிகமாகத் தெரிகிறது என்று கூறுபவரும் உண்டு. மற்றொரு பார்வை சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில்தான் சூடு கூடி இருந்தது இந்த முறை மார்ச் மாத துவக்கத்திலேயே தொடங்கிவிட்டது என்பவரும் உண்டு. அதாவது நீடித்த வெப்பமாக உணருகிறார்கள்.

சுற்றுச்சூழல் சார்ந்து வெப்ப்பமயமாதல், ஓசோன் பகுதியில் பாதிப்பு, மாசுப்படிதல் என்று காரணங்களைச் சொல்லி வெப்ப மிகுதியை நியாயப்படுத்துகிறார்கள். மக்கள் தொகையின் கூடுதலும் அவர்கள் உபயோகிக்கும் பொருள்களின் தன்மையும் இந்த வெப்ப அதிகரிப்பு காரணம் என்கிறார்கள். குளிர் சாதன பெட்டிகளின் பயன்பாடு கூடுவதால், இந்த பூமியைச் சூடேற்றி விடுவதாகச் சொல்கிறார்கள்.

நம் வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால் நமக்குச் சுகங்கள் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் நடந்தோ, சைக்கிளிலோ, மாட்டு /குதிரை வண்டிகளிலோ ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் சென்ற நாம், படி படிப்படியாக முன்னேறி இப்போது குளிர்சாதன வாகனங்களிலும் விமானங்களிலும் பயணிக்கிறோம்.

நாம் ஊருக்கு வருகிறோம் என்று எழுதிய கடிதத்தை நாமே ஊருக்கு வந்த பிறகு பெற்றுக்கொண்ட காலம் போய் புறப்படும் போதும் பயணிக்கும் போதும் பேசிக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டன.

இந்த வளர்ச்சிக்குக் கொடுக்கும் விலையா இந்த இயற்கை உபாதைகள் என்றும் எண்ணத்தோன்றுகிறது. வளர்ச்சியின் காரணமாக இந்த உபாதைகளை எப்படி எதிர்கொள்வது என்றும் அறிவியல் மற்றும் புதிய உபகரணங்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதன் மூலம் குறைத்துவிடுகிறோம். இது ஆரோக்கியமான போக்கா என்ற கேள்வி மட்டும் என்றைக்கும் தங்கும்.

இதையும் படியுங்கள்:
யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்... எப்படி?
Hot summer

முன்பெல்லாம் கோடையின் நடுவில் ஒரு மழை, கோடை மழையாக, வந்து சில நாட்களாவது சற்றே வெப்பத்தைத் தணிக்கும். இப்போது அதுவும் நிகழ்வது அரிதாகிவிட்டது. அப்படியே மழை பெய்தாலும் மழை நின்ற அடுத்த நாளே விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடுகிறார் தனது வேலையை இந்த சூரிய பகவான். சனிப்பெயர்ச்சி பற்றி பயம்கொள்ளும் யாவரையும் இந்த சூரியன் பெயர்ச்சி பெறாதா என்று வேண்ட வைத்து விடுகிறது.

கஷ்டத்திலிருந்து தப்பித்து போகும் மனநிலை பெருகிவிட்டதால், நாம் பெயர்ச்சி பெற்று குளிர் பிரதேசங்களுக்கு செல்லுகிறோம். இப்படி செல்வோரின் கூட்டம் தாங்காமல் குளிர் பிரேதசங்களும் சூடேறி வேர்க்க துவங்கிவிட்டன. அலை மோதும் மக்கள் கூட்டம் ஆலாய் பறக்கிறது விடுதலை தேடி.

வீட்டில் சாப்பிடும் பழக்கம் குறைந்து zomato துணையுடன் குடும்பங்கள் நடப்பதால் வயிற்றிக்கு உள்ளேயும் வெப்பம் கூடி வயிறு உபாதைகளும் கூடிப்போகிறது. உள்ளேயும் வெப்பம் வெளியேயும் வெப்பம் என்று வெப்பம் சூழ்ந்து நம்மை ஆக்கிரமித்து கொள்கிறது.

இந்த சூழல் ஏற்படுத்தும் எரிச்சல் காரணமாக தனி மனித உறவு முறைகளிலும் குளிர்ச்சியும் இதமும் குறைகிறது. அதிகமாக கோபப்பட்டு வார்த்தைகள் தடித்து சண்டைகளும் சச்சரவுகளும் கூடுகின்றன. இது வெயில் காலம் முடிந்த பின்னும் நினைவுகளில் நின்று இம்சிக்கின்றன. அன்று நீ அப்படி சொன்னியே என்று ஆரம்பித்து வாழ்க்கையை சுமூகம் ஆக்காமல் வெப்பதுடனேயே வைத்திருக்கிறது.

வெப்பம் ஏற்படுத்தும் எரிச்சலும், குளிர்ச்சி ஏற்படுத்தும் இதமும் எல்லோரும் அனுபவிப்பதே. எனினும் பழகிய ஒரு தட்ப வெப்பத்திலுருந்து வேறு பிரதேசம் செல்லும் போது சில சங்கடங்கள் ஏற்படுகிறது. உதரணமாக, நீண்ட வருடங்களாக சென்னையில் வசிப்பவருக்கு சில வாரங்கள் பெங்களூரில் வசிப்பது ஒரு வித அயர்ச்சியை, சோம்பேறித்தனத்தை, லேசான தலைவலியை, செறிக்காமல் படுத்தும் வயிறு உபாதைகள் ஏற்படுவதை ஒரு சிலரேனும் அனுபவிக்கிறார்கள். பழகிய பேயே புதிய தேவதையை துரத்துகிறதா?! சில மாதங்களில், அந்த புதிய தேவதை பழகிய பேயாகவும் மாறிவிடுகிறது.

எந்த காலநிலை எல்லைகளிலும் மனிதன் வாழ பழகிவிட்டான். பனியில் சூழ்ந்த குளிர் பிரதேசங்களிலும், வெப்பம் தகிக்கும் பாலைவன பகுதிகளிலும் தன்னை தக்கமைத்து கொள்ளும் ஆற்றல் உள்ளது மனிதயினம். ஆனால் அவனது பழகிய காலநிலையை விட்டு மாறுபட்ட சூழலை எதிர்கொள்ளும் போது சில காலமேனும் மாறிக்கொள்ள சிரமப்படுகிறான்.

இயற்கையும் கருணை காட்ட தவறுவதில்லை. காலங்கள் மாற்றத்திற்கு ஏற்றபடி அது வித விதமான பழங்கள் மற்றும் உணவு உற்பத்தியை மாற்றி தருகிறது. அதனை அனுசரித்து இடங்களுக்கு ஏற்ற மண்ணுக்கேற்ற உணவுகள் மற்றும் பழக்க வித்தியாசங்களை அனுசரித்து நடந்தால் இந்த கால இட மாற்றங்களும் நமக்கு உதவி செய்கின்றன. தற்காத்து கொண்டு தகவமைத்து கொண்டு சூழல் அறிந்து இயங்கினால் இந்த வெப்பம் நம்மை சுட்டெறிப்பதை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
பணமோ பதவியோ இல்லாமல் ஒருவர் சமூக அந்தஸ்தை பெற முடியுமா?
Hot summer
logo
Kalki Online
kalkionline.com