
வாழ்க்கையை சீராக வாழ்ந்து செல்ல சில விஷயங்களை எப்பொழுதும் கையாள வேண்டும். அப்படிக் கையாண்டால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை யாரிடமும் கடன்படாமல், உள்ளதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து மீதத்தை பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தேடல்: நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்று சொல்வர். ஆனால், நாணயத்திற்கு மூன்று பக்கங்கள் உண்டு என்று கூற வேண்டும். ஒரு பக்கத்தில் அதன் மதிப்பை குறிக்கும் எண். மறுபக்கத்தில் அசோக ஸ்தூபி. நாணயத்தின் வடிவம் அதன் மூன்றாவது பக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மை, நேர்மை, வாக்கு மாறாமை என்று உழைத்து சம்பாதிப்பதுதான் நாணயம் என்பது. இந்த வழிகளில் நாம் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.
சேமிப்பு: பணத்தைத் தேடுவதிலும் தேடிய பணத்தை பேணிக் காப்பதிலும் மனிதன் அதிக நேரத்தை செலவிடுகின்ற ஒரு சூழல் இப்போது அதிகமாகி வருகிறது. இந்த நேரத்தில் பணம் படைத்தவர்கள் எந்தெந்த வழிகளில் முயன்று பாடுபட்டு அந்த பணத்தை சேர்த்தார்களோ, அந்த சேமிப்புக்கு ஒருவர் மட்டும் பாடுபட்டால் போதாது. குடும்பத்தில் உள்ள மனைவியும், வாரிசுகளும் அதற்கு துணை புரிய வேண்டும். இல்லை என்றால் ஒருவரால் சேமிக்கப்படும் பணம் பலராலும் விரயமாக்கப்பட்டு இறுதியில் குடும்ப வாழ்க்கையே குழப்பத்தில் சிக்கிவிடும். இப்படி சேமிக்கப்படும் பணத்தை அஞ்சலகம், வங்கி, பங்குச்சந்தைகள் என்று பிரித்துப் போட்டு பாதுகாக்கலாம். இதனால் சேமிப்பும் உயரும். தேவையில்லாத செலவும் குறையும். குடும்பத்தினரும் அனாவசியமாக பணத்தை செலவு செய்ய விரும்ப மாட்டார்கள்.
கணக்கிடல்: பணத்தை சேமித்தால் மட்டும் போதாது. அதற்குப் பிறகு வரவு செலவுத் திட்டத்தை வகுக்க வேண்டும். அதில் சேமிப்புக்காக குறைந்தது 10 சதவீதமும், சில்லறை செலவுகளுக்கு 10 சதவீதமும், உல்லாச சுகபோகங்களுக்கு 5 சதவீதம், அறிவு அபிவிருத்திக்கு 7 சதவீதமும் ஒதுக்கப்பட வேண்டும். பாக்கியை உணவு, உடை, வீட்டு வாடகை, கல்வி முதலியவற்றிற்கு செலவிட வேண்டும்.
அறம்: சேமித்த பணத்தில் ஒரு பகுதியை நம் உடன் பிறந்தவர்கள் நம்மை விட எளியவராக இருந்தால் முதலில் அவர்களுக்குத்தான் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை உயர்விக்க வேண்டும். அதன் பின் வறுமையில் வாழும் நல்ல மனிதர்கள், ஆதரவற்றோர், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியவர்களுக்கு தேவையானபொழுது கொடுக்க வேண்டும்.
அவரவர்களின் பண்பு அறிந்து தர்மம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாததனால் நாம் அவர்களுக்குக் கெடுதல் செய்வதோடு அல்லாமல், நமக்கே நாம் கெடுதல் செய்வதாகவும் ஆகிவிடுகிறது. ஆம்; சிலர் அவர்கள் கேட்காமல் நாம் கொடுத்தால், ‘நானா உன்னிடம் கேட்டேன்? நீயாகத்தானே தந்தாய்’ என்று கூறுவார்கள். ஆதலால் ஒருவரின் பண்பறிந்து உதவ வேண்டும். அது அவர்களின் உழைப்பை முடக்காமலும் இருக்க வேண்டும்.