
1. பிக் ஷாப்பர் பைகளில் மூங்கில் கைப்பிடி உடைந்துவிட்டால், அதை எடுத்துவிட்டு, லேசாக தையலைப் பிரித்துவிட்டு பிவிசி பைப்பை பையின் கைப்பிடி இருந்த துளையில் செருகி, பின்னர் பிரித்த தையலை மீண்டும் தைத்து விடுங்கள். இப்போது பிக் ஷாப்பரை மீண்டும் பயன்படுத்தலாம்.
2. பழைய சைக்கிள் ட்யூப் இருக்கிறதா? வீட்டில் வெளி கேட்டில் தாழ் வந்து விழும் இடத்தில் சைக்கிள் ட்யூபை கத்தரித்து சுற்றி வைத்தால் சத்தம் வருவதை தவிர்க்கலாம்.
3. நீங்கள் பயன்படுத்தாத டால்கம் பவுடர் இருந்தால் ரப்பர்பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது போட்டு வைத்தால் ரப்பர் பேண்ட் ஒட்டிக்கொள்ளாது.
4. பழைய சாக்ஸ் இருக்கிறதா? வீடு, வாசல் கூட்டும்போது துடைப்பம் கைகளை குத்தாமல் இருக்க, பழைய சாக்ஸ்களை அதில் மாட்டி ஒரு ரப்பர் பேண்டை போட்டு வைத்து விடுங்கள்.
5. காலியான பெருங்காயப் பவுடர் டப்பாக்களை குப்பையில் போட வேண்டாம். அவற்றை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சீயக்காய் தூள், டேபிள் சால்ட், பாத்திரம் துலக்கும் பொடி போன்றவற்றை போட்டு வைக்கப் பயன்படுத்தலாம்.
6. உபயோகித்து பழையதாகிப்போன ஹாட் பேக்குகளை பயறு வகைகள் சீக்கிரம் முளை விட, இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிக்க, காயாக உள்ள பழங்கள் சீக்கிரம் பழுக்க போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
7. உங்கள் வீட்டுக் குழந்தைகளின் பழைய யூனிஃபார்ம், துப்பட்டா நைந்து போகாமல் இருந்தால், அதில் அழகான சின்னச்சின்ன எம்ப்ராய்டரி டிசைன்களைப் போட்டு தலையணை உறை, டேபிள்டாப், கம்ப்யூட்டர் கவர் போன்றவையாகப் பயன்படுத்தலாம்.
8. பழைய நாலு முழ வேஷ்டி இருக்கிறதா? அதில் மூன்று, நான்கு பைகள் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். அது தானியங்களை வடிகட்ட, திரிந்த பாலை வடிகட்டி பனீர் செய்யப் பயன்படும்.
9. வீடு கட்டும்போது மீந்த டைல்ஸ்களை சமையலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்கப் பயன்படுத்தலாம்.
10. கிழிந்துபோன ஜீன்ஸ் துணிகளை தோல் பைகள் ரிப்பேர் செய்யும் கடையில் கொடுத்தால், நமது தேவைக்கேற்ப ஜிப் மற்றும் கைப்பிடிகள் வைத்துத் தைத்துக் கொடுப்பார்கள். துணிகள் உறுதியாக இருப்பதால் அதிக நாட்களுக்கு உழைக்கவும் செய்யும்.
11. அஞ்சறைப்பெட்டி பயன்படாமல் இருந்தால் அதன் ஒவ்வொரு அறையிலும் கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், எலுமிச்சம்பழம் இவற்றையெல்லாம் போட்டு ஃ ப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
12. எலாஸ்டிக் போன பழைய சாக்ஸ்களை தூக்கிப்போட்டு விடாதீர்கள். துணி துவைக்கும்போது சோப்பை சாக்ஸ் உள்ளே போட்டுத் துவைத்தால் சோப் துவைக்கும் துணிகளின் எல்லா இடத்திலும் சீராக பரவுவது மட்டுமல்ல, வழுக்கிக்கொண்டும் போகாது.