ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் ஊஞ்சல் விளையாட்டு!

Swing game for healthy living
Swing game for healthy living

முன்பெல்லாம் ஊஞ்சல் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்பொழுதெல்லாம் ஊஞ்சலை பார்ப்பது மிக அரிதாகி விட்டது. அக்காலத்தில் ஊஞ்சலில் ஆடியதால்தான் அவர்களிடம் ஆரோக்கியமும் சேர்ந்து ஆடியது. ஆனால், இன்று நாம் ஊஞ்சலை மறந்தோம். வியாதிகள் நம்மை ஆட்டி வைக்கின்றன.

சங்க காலம் தொடங்கி விளையாடப்பட்டு வரும் ஒரு விளையாட்டு ஊஞ்சல். கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் கூறுவர். ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் இந்த ஊஞ்சல் விளையாட்டு மகிழ்ச்சியை கொடுப்பதால் கோயில் விழாக்களில் ஊஞ்சல் சேவை என்ற ஒன்றை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லா தரப்பினரும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவர். அரசக் குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடுவது ஊஞ்சல் விளையாட்டு.

ஊஞ்சலில் பல வகைகள் உண்டு. அவை ஆலமர விழுதுகளினாலான ஊஞ்சல், பொன் ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல் என்பவையாகும். ஆலமரத்தின் விழுதுகள் உறுதியுடன் இருப்பதால் ஊஞ்சலாட அது பெரிதும் உதவியது. அதன் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடி மகிழ்வர். இரண்டு விழுதுகளை ஒன்றாக முடிச்சு போட்டு ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து விளையாடுவதும் உண்டு. கயிற்றின் பயன்பாட்டுக்கு பின்னர் உறுதியான கிளைகளைக் கொண்ட மா மரம், வேப்ப மரம், புளிய மரம் ஆகிய மரங்களில் கயிற்றை கட்டி அதன் நடுவில் சாக்கு அல்லது போர்வையை வைத்து அதில் அமர்ந்து ஊஞ்சல் விளையாடினர். அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில் இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என இதில் ஆடி மகிழ்ந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல, கால மாற்றத்திற்கேற்ப ஊஞ்சல் செய்வதிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. மர பலகைக்கு இரண்டு பக்கமும் இரும்பு சங்கிலியை இணைத்து ஊஞ்சல் செய்தனர். பிற்காலத்தில் வசதி படைத்த அனைவரது வீட்டிலும் கொல்லைப்புறத்தில் (கார்டனில்) மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர். வீட்டு உபகரணங்களில் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று ஊஞ்சல்.

ஊஞ்சலில் ஆடும்போது நமது கவலைகள் காற்றிலே பறப்பது போல தோன்றி, மனம் லேசாகின்றது. அதனால் இப்போது எல்லார் வீடுகளிலும் ஊஞ்சல் கட்டாயப்பொருள் ஆகிவிட்டது. ஊஞ்சல் கட்டுவதற்கு முன்பு போல் பெரிய இடம் தேவைப்படுவதில்லை. இட வசதிக்கேற்ப சிறிய அளவிலும ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

ஊஞ்சலில் ஆடுவது மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஊஞ்சல் ஆடுவதால் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைகிறது. எண்ணங்கள் வளமாகின்றன. இதன் அடிப்படையிலேயே, திருமணங்களில் ஊஞ்சல் என்ற ஒரு சடங்கை ஏற்படுத்தினர் நம் பெரியவர்கள். ஊஞ்சலில் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உற்சாகம் வழிகிறது.

இதையும் படியுங்கள்:
சரணடையுங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்!
Swing game for healthy living

நேராக உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவதால் முதுகுத் தண்டுக்கு இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைகிறது. இக்கால இளம் வயதினர் கணினி முன் அமர்ந்து கண்களும் உடலும் சோர்வடைந்த பின் சற்று நேரம் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடினால் அதுதான் சுவர்க்கம். முயற்சி செய்து பாருங்கள். உங்களை அறியாமல் நீங்கள் இன்னும் இளமையாக உணர்வீர்கள்.

ஊஞ்சல் மாட்டுவதற்கு சிறந்த இடம், நம் வீட்டின் தோட்டமாகும். மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் ஆடும்போது அதிகமான ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியும். இதனால் இதயம் சீராக இயங்கும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு சாப்பிட்டவுடன், சிறிது நேரம் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடினால் உணவு நன்றாக செரிக்கும். இது மற்றவர்களுக்கும் பொருந்தும்.

கோபமாக இருக்கும்போது ஊஞ்சலில் ஆடினால் கோபம் தணிந்து இயல்பு நிலைக்கு மாற முடியும். அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் ஊஞ்சலை வரவேற்பறையில் மாட்டியிருப்பர். தேவதைகள் வீட்டிற்குள் வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து மகிழ்வர் என்றும் அவர்கள் செல்லும்போது நல்லதை தந்துவிட்டு செல்வர் என்பதும் நம்பிக்கை. நல்ல விஷயங்கள் பேசும்போது பெரியவர்கள் ஊஞ்சலில் அமர்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியை வாரி தரும் இந்த ஊஞ்சலில் ஆடி அனைவரும் தங்களது இன்னல்களை மறந்து இன்பம் காண்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com