

தங்கள் பெண்ணை மணம் செய்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக பாதுகாக்கும் மாப்பிள்ளை என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் தலை தீபாவளி என்றால் புது மாப்பிள்ளைக்கு தனி கெத்து தான். தீபாவளி கிராமத்து பாடல் ஒன்று உண்டு. 'முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க.. 'எனத் துவங்கி 'ஏலூரு மாப்பிள்ளைக்கு எண்ணி வையுங்க. சும்மா இருக்கும் மாப்பிள்ளைக்கு சூடு வையுங்க' என நகைச்சுவையாக முடியும்.
உண்மையில் தலை தீபாவளி என்பது என்ன? அதில் மாப்பிள்ளைக்கு சீர் அவசியமா? அப்படி என்றால் என்னென்ன சீர்கள் தரப்படும்? இங்கு பார்க்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் சிறப்பானது. இதைத்தான் தலை தீபாவளி என்று அழைக்கிறோம். இந்த நாளில் மகள் மற்றும் மருமகனை வீட்டுக்கு அழைத்து புத்தாடை, பலகாரம், பரிசுகள் கொடுத்து வரவேற்பது தமிழர் குடும்பங்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கமாகும்.
தீபாவளி நெருங்கும் சில நாட்களுக்கு முன்னரே பெண் வீட்டார் உறவுகளுடன் சென்று, 'தீபாவளிக்கு மாப்பிள்ளை பெண்ணை அனுப்புங்கள்!' என்று சொல்லி விருந்து உண்டு மகிழ்வது வழக்கம். இதைத் தொடர்ந்து தீபாவளிக்கு புது மாப்பிள்ளை தனது மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு செல்வார். தீபாவளி அன்று மாமனார் தரும் சீர்வரிசைகளைப் பெற்று குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
குறிப்பாக, பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு என்னென்ன சீர் தந்தார்கள் என்பது அந்நாளில் உறவுகளுக்கிடையே பேசும் பொருளாகவே மாறும். தலை தீபாவளிக்காகப் பெண் வீட்டில் பலகாரங்களைத் தயாரித்து, மாப்பிள்ளை வீட்டிற்குக் கொடுத்தனுப்புவது பல குடும்பங்களில் இன்றும் தொடர்கிறது. மேலும் காலங்கள் மாறினாலும் இன்னும் இந்த சீர் மட்டும் மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாப்பிள்ளைக்கு என்னென்ன சீர் தரப்படும்? பழங்காலத்தில் என்ன கொடுத்தார்கள்? இன்றைய காலத்தில் என்னென்ன கொடுக்கிறார்கள்? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
அன்றைய காலத்தில் மாப்பிள்ளைக்கு செய்த தலை தீபாவளி சீர் என்பது அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம், ஊரின் பழக்கவழக்கம், சமூக மரபு ஆகியவற்றைப் பொறுத்து சீர் பொருட்கள் மாறுபட்டன. இருப்பினும் பொதுவாக தரப்படும் சீர்கள் விபரம் இங்கு.
புதுமணத் தம்பதிகளுக்குப் பொருத்தமான புத்தாடைகளாக மாப்பிள்ளைக்கு வேட்டி, சட்டை நிச்சயம் உண்டு. சில குடும்பங்களில் பட்டுவேட்டி அல்லது பட்டு அங்கவஸ்திரம் தருவார்கள். பெண்ணுக்கு பட்டுப்புடவை அல்லது புதிய புடவை எடுக்கப்படும்.
வீட்டிலேயே தயாரித்த பாரம்பரிய பலகாரங்களைச் சீராகக் கொடுப்பது வழக்கம். அதிரசம், முறுக்கு, சீடை, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, அல்வா போன்ற பலவகை இனிப்புகள் மற்றும் உளுந்து வடை போன்ற பலகார வகைகள் அதில் அடங்கும். சில குடும்பங்களில் பலகாரங்களைப் பெரிய தட்டுகளில் அழகாக அடுக்கி பெண்ணையும் மாப்பிள்ளையையும் கவனிப்பார்கள்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின் மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் பணம் தந்து பெரியவர்கள் ஆசிகள் கூறுவார்கள். இவை குடும்ப வழக்கத்திற்கும் சடங்குகளுக்கும் ஏற்ப வழங்கப்படும்.
வீட்டில் தயாரித்த உணவுப் பொருட்களுடன் சில குடும்பங்களில் பெண்ணுக்கு சமைக்க உதவும் வகையில் அரிசி, பருப்பு, நெய், எண்ணெய் போன்ற மளிகைப் பொருட்களையும் வழங்குவது வழக்கமாக இருந்தது.
மேலும் குடும்ப வசதிக்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டது. குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள் அல்லது பிற வீட்டு உபயோகப் பொருட்களையும் கொடுத்திருக்கலாம் அன்று. இவை அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டவை அல்ல. பகுதி, சமூகம், குடும்ப மரபு ஆகியவற்றைப் பொறுத்து வழக்கங்கள் மாறுபடுவதும் உண்டு.
சரி..இன்றைய காலத்தில் மாப்பிள்ளைக்கு என்னென்ன சீர் செய்கிறார்கள்?
இன்றைய காலத்தில் பாரம்பரியப் பொருட்களுடன் கால மாற்றத்திற்கேற்ப கைக்கடிகாரம், பணப்பை, வாசனைத் திரவியம் போன்ற நவீனப் பரிசுகளையும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது எனலாம். சில குடும்பங்களில் மொபைல் அல்லது பிற மின்னணுப் பொருட்களும் சீர் வரிசையில் அடங்கும்.
புத்தாடையிலும் மாற்றம் வந்துவிட்டது. வேட்டி, சட்டையுடன் நவீன குர்தா அல்லது மாப்பிள்ளைக்குப் பிடித்த உடைகள் மற்றும் பெண்ணுக்கு மாடர்ன் ஆடைகள் அவரவர் விருப்பப்படி தரப்படுகிறது.
ஆனால் குடும்ப வழக்கத்திற்கேற்ப பணம் அல்லது பரிசுக் கவர் நிச்சயமாக உண்டு.
பலகாரம் எப்போதும் போல் மாறாமல் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்பாகு போன்றவை கடைகளில் வாங்கி டயட் என்ற பெயரில் வீணாவதும் உண்டு. ஆனால் அன்றும் இன்றும் தலை தீபாவளி என்பது வெறும் புத்தாடை, பலகாரம், பரிசுகள் வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல. திருமணத்திற்குப் பிறகு மகளையும் மருமகனையும் தங்கள் குடும்பத்தின் அன்புடன் வரவேற்கும் மகிழ்ச்சியான தருணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்று வீட்டில் தயாரித்த பலகாரங்களும் பாரம்பரியப் பொருட்களும் சிறப்பாக இருந்தன; இன்று அவற்றுடன் நவீனப் பரிசுகளும் இணைந்துள்ளன. ஆனால், தலைமுறைகள் மாறினாலும் அன்புடன் சீர்செய்யும் பாரம்பரிய வழக்கத்தின் உணர்வு மாறவில்லை என்பதே ஆறுதல் தரும் விஷயம்.
இறுதியாக அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பண்டிகைகள் சொல்லும் தத்துவம் என்பதால் சீர் என்பது குடும்பத்தின் அன்பையும் உறவின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு வழக்கம் மட்டுமே என உணர்ந்து ஒப்பீடு பார்க்காமல் மனக்கசப்புகளை அகற்றி மகிழ்வுடன் ஒருவரையொருவர் அனுசரித்து மகிழ்வது தான் உண்மையான தீபாவளி சீர்.
பாரம்பரிய தமிழ் திருமணங்களின் உணர்வுபூர்வமான ஆன்மாவை வாசகர்கள் மீண்டும் கண்டறிகின்றனர்; நவீன பரிசுகள் தொன்மையான பாசத்துடன் எவ்வாறு தடையின்றி ஒன்றிணைகின்றன என்பதைப் போற்றுகின்றனர்.